நோயைத் தடுக்கும் நஸ்யம்

By டாக்டர் எல்.மகாதேவன்

ஆயுர்வேதத்தில் மூக்குத் துவாரங்களின் வழியாக மருந்துகளை உள்ளே செலுத்துவதற்கு நஸ்யம் என்று பெயர். இதை நாவனம் என்றும் நஸ்ய கர்மம் என்றும் அழைப்பார்கள். கழுத்துக்கு மேற்பட்ட பகுதிகளாகிய கண், மூக்கு, வாய், காது, தொண்டை, பற்கள், கழுத்து, மூளை நோய்களுக்கு இது முக்கிய சிகிச்சையாகக் கருதப்படுகிறது. நோயைத் தடுப்பதற்கும், பிராணனின் உள்வெளிப் பயணத்தை அல்லது இயக்கத்தைச் சீரமைப்பதற்கும் அனு தைலம் என்கிற மருந்தைத் தினப்படி நஸ்யமாகச் செய்ய வேண்டுமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

நஸ்யத்தின் வகைகள் விரேசன நஸ்யம்:

தலையில் அசுத்தமாகச் சேர்ந்திருக்கிற கபத்தை வெளியேற்றும் நஸ்ய வகை. பிரும்ஹண நஸ்யம்:

கழுத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் அல்லது மற்ற பகுதிகளில் உள்ள வாயுவின் சீர்கேட்டை மாற்றி பலத்தை அளிக்கிற சிகிச்சை.

சமனம்:

பித்தத்தைச் சீர்படுத்தச் செய்கிற சிகிச்சை.

விரேசன நஸ்யம்

பொதுவாக விரேசன நஸ்யம் கபம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சையாகத் தரப்படுகிறது.

l மூக்கடைப்பு

l மூளையில் நீர்

l பீனஸ நோய் (தலையில் ஏற்படும் நீர்க்கோவை நோய்)

l கழுத்துப் பிடிமானம்

l காக்காய் வலிப்பு

l மணம் அறிய இயலாமை

l கபம் சார்ந்த சுரபேதம் (குரல்வளை நோய்)

போன்றவற்றுக்கு விரேசன நஸ்யம் செய்யப்படுகிறது.

நஸ்யத்துக்கான மருந்துகள்

விரேசன நஸ்யம் செய்வதற்குச் சூரணங்கள், கஷாயங்கள், இலைகளின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. மூக்கில் ரத்தம் வடிந்தால் ஆடாதோடாவின் இலைச் சாறும், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் மயக்க நிலைக்குத் தும்பைச் சாறும், மூக்கில் ஏற்படும் கட்டிகளுக்கு வெற்றிலைச் சாறு அல்லது நாயுருவி தைலமும் பயன்படுத்தப்படுகின்றன.

மூக்குப்பொடிகளை வைத்து நஸ்யம் செய்தால், இதைப் பிரதமன நஸ்யம் என்று அழைப்பார்கள். இங்குத் திரிகடுகு, ராஸ்னாதி போன்ற சூர்ணங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொதுவாக அதிநித்திரை எனும் அதிகமான தூக்கம் உண்டாகும் நிலை, கபம் சார்ந்த மன நோய்கள், தலையில் ஏற்படுகிற கிருமிகள், விஷத்தால் ஏற்படும் பாதிப்பு, நினைவின்மை போன்றவற்றுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது.

சாறுகளை வைத்துச் செய்கிற நஸ்யத்துக்கு அவபீடக நஸ்யம் என்று பெயர். துளசிச் சாறு, தும்பைச் சாறு போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சில சந்தர்ப்பங்களில் உப்புத் தூளைக் கொண்டோ, தேனைக் கொண்டோ நஸ்யம் செய்யலாம்.

பிரும்ஹண நஸ்யம்

l பொதுவாக வாத நோய்களுக்குச் செய்யப்படுகிறது

l அர்தாவ பேதம், சூர்யாவர்தம் எனும் மைக்ரேன் வகைத் தலைவலிகள்

l கண் இமைகள் பலவீனமாகிற Ptosis எனும் நோய்

l கர்ண நாதம் (காதில் முழக்கம்)

l காது செவித்திறன் குறைவு

l பக்கவாதத்தினால் ஏற்படும் பேச்சுத்திறன் குறைவு (Aphasia / Dysarthria)

l உறக்கமின்மை

l கழுத்தெலும்பு தேய்மானம்

l நடுக்கவாதம்

பொதுவாகப் பிரும்ஹண நஸ்யத்துக்கு குறுந்தட்டி வேர், பால் சேர்ந்த க்ஷீரபலா தைலம், ஸஹசராதி தைலம், பால், மாம்ஸ ரஸம், கல்யாணககிருதம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

சமன நஸ்யம்

சமன நஸ்யம் பொதுவாகப் பித்தத்துக்குச் செய்யப்படுகிறது. முடி சார்ந்த நோய்கள், முகத்தில் ஏற்படுகிற கரும் புள்ளிகள், மூக்கிலிருந்து வரும் ரத்தப்போக்கு போன்றவற்றுக்குச் சமன நஸ்யம் செய்யப்படுகிறது. இதற்கு அனுத் தைலம், பால் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

அனுத் தைலம்:

பொதுவாக ஆயுர்வேத மருத்துவர்களால் நஸ்யத்துக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து இது. இதைத் தினமும் பயன்படுத்தலாம். இது நல்லெண்ணெய், வெள்ளாட்டின் பால், கங்கோதகம் எனும் மழைநீர் மற்றும் பல மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்டது. இது முக்குற்றங்களைத் தணிப்பதாக இருந்தாலும், பித்தச் சமனம் எனும் குணமுடையது. ஆரோக்கியமாக உள்ள ஒருவர், இதைத் தினமும் இரண்டு துளி வீதம் ஒவ்வொரு மூக்கிலும் உள் செலுத்தலாம். இதற்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. நோயைக் குணமாக்கும் ஆற்றல் சற்றுக் குறைவே. பலரும் இதைப் பற்றி அறியாமல் பீனஸம் (நீர்க்கோவை) போன்ற நோய்களுக்கு இதைப் பயன்படுத்திவருகிறார்கள்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்