சிறுவனின் உயிரைக் காத்த பெண் விவசாயி

By இந்துஜா ரகுநாதன்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சரண்யா தங்கம் (24), உயிரைப் பறிக்கக் கூடிய ரத்தம் தொடர்பான நோயோடு போராடிவந்த 10 வயதுச் சிறுவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி உதவுவார் என்று அச்சிறுவனின் பெற்றோர் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு வருடத்துக்கு முன்பு சரண்யா தனது ரத்தக் குருத்தணுவை (Blood stem cell) தானம் செய்து காப்பாற்றிய அந்தச் சிறுவன், இன்றைக்கு ஆரோக்கியமாகப் பள்ளி சென்றுகொண்டிருக்கிறான். ஒரு உயிரைக் காப்பாற்றிய பூரிப்புடன் சரண்யா தங்கம் கூறுகையில் "ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு கிடைத்திருக்கிறது. ஆனால், ரத்தக் குருத்தணு தானத்தைப் பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்தக் கொடையைச் செய்யப் படித்தவர்களும் முன்வர வேண்டும்" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்.

ரத்தக் குருத்தணு தானம்

போடிநாயக்கனூரில் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார் சரண்யா தங்கம் (26). இவருடைய ஊரிலுள்ள ஒரு அமைப்பில் சில வருடங்களுக்கு முன்பு ரத்தக் குருத்தணு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் பதிவு செய்த 200 கொடையாளர்களில் சரண்யாவும் ஒருவர்.

கடந்த ஆண்டு ஒரு 10 வயது சிறுவன் ரத்தக் கோளாறு நோயோடு, குருத்தணு கொடையாளர்களைத் தேடி ‘தாத்ரி' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினான். இந்த அமைப்பு ரத்தக் குருத்தணு, எலும்பு மஜ்ஜை தானம் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்டது. அப்போது போடியைச் சேர்ந்த சரண்யாவைப் பற்றி தெரியவந்தது. சரண்யாவின் ரத்த செல் மட்டுமே அந்தச் சிறுவனுக்குப் பொருந்தியதால் அவரை வரவழைக்க முயன்றனர்.

ரத்தக் குருத்தணு தானம் செய்வதற்காக 2010-ம் ஆண்டு பதிவுசெய்திருந்த சரண்யாவை மூன்று ஆண்டுகள் கழித்துத் தேடியபோது, கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்குத் தாத்ரி உறுப்பினர்கள் சென்றபோது சரண்யாவின் அம்மா மட்டுமே இருந்தார். சில நாட்களுக்கு முன்பு சரண்யா காதலித்தவருடன் சென்றுவிட்டதாகவும், எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாது என்றும் சொன்னதால் தாத்ரி அமைப்பினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறுவனைக் காப்பாற்றச் சரண்யாவால் மட்டுமே முடியும் என்பதால், விடாமல் தேடியதில் சரண்யாவின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் நிலையைப் பற்றி தாத்ரி உறுப்பினர்கள் அவரிடம் விளக்கியபோது புகுந்த வீட்டின் அனுமதி கிடைக்குமா எனச் சரண்யா தயங்கினார். அதேநேரம் சரண்யாவின் மனஉறுதியும் ஒரு உயிரின் மதிப்பு பற்றிய புரிதலும், கணவர் தங்கத்தின் ஆதரவும் புகுந்த வீட்டாரின் சம்மதத்தைப் பெற உதவியது. சிறிய கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை வந்து இரண்டு வாரம் தங்கி ரத்தக் குருத்தணு தானம் செய்துவிட்டுத் திரும்பினார் சரண்யா.

எலும்பு மஜ்ஜை தானம்

இந்தியாவில் சுமார் 1 லட்சம் பேர் ரத்தப் புற்றுநோய் (லுகேமியா), ரத்தம் தொடர்புடைய பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தாத்ரி தொண்டு நிறுவனம் கணித்துள்ளது. இந்த நோய்களுக்குப் பெரும்பாலும் ரத்தக் குருத்தணு, எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி ரத்த அணுக்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்திச் சிகிச்சை அளிப்பது மட்டுமே உயிரைக் காக்க உதவும்.

அது அத்தனை சுலபமும் அல்ல. கொடையாளி, நோயாளியின் மரபணுக்களும் ரத்த அணுக்களும் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ரத்தக் குருத்தணு தானம் செய்யமுடியும். நோயாளியின் குடும்பத்தினருக்குள் 25% தான் மரபணு ஒத்துப்போகும். வெளி ஆட்களில் தானத்துக்குப் பதிவு செய்தவர்களில் இந்த ஒற்றுமை கிடைப்பது மிகமிக அரிது.

பத்தாயிரம் பேரில் ஒருவருடன்தான் மரபணு ஒற்றுமை அமைகிறது. இந்தியாவில் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்திவந்தாலும், கொடையாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்கிறார் தாத்ரியின் இணை அமைப்பாளர் ரகு ராஜகோபால். அதேநேரம் 2020-க்குள் லுகேமியா நோயாளிகள் மட்டும் 1,32,574 ஆகிவிடுவார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணித்துள்ளது.

பெண்களின் பங்கு

சரண்யா தங்கத்தைப் போலப் பெண்கள் பலரும் ரத்தக் குருத்தணு, எலும்பு மஜ்ஜை தானம் செய்துள்ளனர். பதிவு செய்துள்ள 75,000 கொடையாளர்களில், 25,000 பெண்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 10,700 பேர் கொடையாளர் பட்டியலில் உள்ளனர்.

தானம் செய்யப் பதிவுசெய்ய விரும்புவோரின் கன்னத்தின் உட்புறம் ஒரு பஞ்சால் துடைத்து மாதிரியை எடுக்கும் கொடையாளர் வங்கிகள், அதை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்புகின்றன. பிறகு மனித லியுகோசைட் வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு, பெயர் பதிவு செய்யப்படும். என்றைக்காவது அதற்கு இணையான நோயாளிக்குத் தேவை ஏற்பட்டால் ரத்தக் குருத்தணு அல்லது எலும்பு மஜ்ஜை தானம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடையாளி அழைக்கப்படுவார்.

நோயாளி இருக்கும் மருத்துவ மனையில் அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர், தானம் செய்பவரிடம் இருந்து தேவையான ரத்தக் குருத்தணுக்கள் எடுக்கப்பட்டு நோயாளிக்குச் செலுத்தப்படும். ஒரு வாரத்தில் இந்தச் செயல்முறை முடிந்துவிடும். மரணத்துடன் போராடும் ஒரு உயிரைக் காக்க வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொடையளிக்கச் சரண்யா தங்கத்தைப் போலப் பலரும் முன்வரும் காலம் எதிர்காலத்தில் வரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

உலகம்

26 mins ago

தமிழகம்

31 mins ago

உலகம்

36 mins ago

வாழ்வியல்

11 mins ago

விளையாட்டு

39 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

சினிமா

51 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்