ஐஸ் பக்கெட் சவாலுக்கு ஆயுர்வேத மாற்று?

By டாக்டர் எல்.மகாதேவன்

Amyotrophic lateral sclerosis என்னும் நோய் எந்த வகைப்பட்டது. இது நரம்பு பாதிப்பு நோயா? இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உண்டா?

- ஜெகதீஷ், திருமழிசை

நரம்பு தொடர்பான நோய் ஒன்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐஸ் பக்கெட் சவால் என்று ஒரு விஷயம் கடந்த ஆண்டு பிரபலமானது. மேற்கண்ட நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அந்தப் பிரசாரம் நடத்தப்பட்டது.

நரம்பு மண்டலத்தையும், தசைகளையும் பாதித்து, மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோய் இது. இதற்கு lou gehrig's disease என்ற பெயரும் உண்டு.

இது முதலில் ஒரு baseball விளையாட்டு வீரருக்கு வந்தது. இந்த நோயை motor neuron disease என்றும் குறிப்பிடுவார்கள். இந்த நோயால் நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து, இறுதியில் மரணம் ஏற்படும். இந்த நோய்க்கான காரணம், மருத்துவர்களுக்கும் விளங்காத புதிர். சில நோயாளிகளுக்கு மரபு சார்ந்த பிரச்சினைகளால் இந்நோய் வருவதாகத் தெரிகிறது.

நோயின் தன்மைகள்

தசைத் துடிப்பு, பலவீனம் போன்றவை நோயின் முக்கிய அறிகுறிகள். படிப்படியாகப் பேச்சு குழறும். நாளாக நாளாகத் தசைகளை அசைப்பதற்கும், பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும், மூச்சுவிடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்நோய்க்கு இன்னும் மருந்து இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை.

நோய் அதிகரிக்க அதிகரிக்க நடப்பதில் சிரமம், தினசரிச் செயல்பாடுகளைச் செய்வதற்குச் சிரமம், கால்களில் பலவீனம், மூட்டுகளில் பலவீனம், கை சோர்வு, பேச்சு உளறுதல், விழுங்குவதில் தடை, தசைப் பிடிப்பு, கைகளில், நாக்குகளில் தசைத் துடிப்பு, தலையை நிமிர்த்தி வைத்து இருப்பதில் சிரமம் போன்றவை காணப்படும்.

நோயானது கைகளில், கால்களில், பாதங்களில் தொடங்கிப் பின்பு மற்றப் பகுதிகளைப் பாதிக்கலாம். மென்று சாப்பிடுதல், சுவைத்தல், மூச்சு விடுதல் போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். மூத்திரப் பையையோ, மலப் பாதையையோ இது பாதிப்பது இல்லை. எண்ண (அறிவு) ஆற்றலையும் பாதிப்பது இல்லை.

தசைகள் அழியும் நிலை ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு glutamate என்னும் புரதம் அதிகமாக இருக்கிறதா என்றும், இவை நரம்பு மண்டலத்துக்கு நச்சுத் தன்மை அளிப்பவையா என்றும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. சில மாறுபட்ட கோணங்களில் புரதம் படிவதும் இந்நோய்க்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்போது அதற்குச் சில உபகரணங்கள் பயன்படுத்த வேண்டிவரும். இரவு தூங்குவதற்கும் உபகரணங்கள் தேவைப்படும். கழுத்தின் முன்பகுதியில் ஒரு துளையிட்டு, அதன் மூலம் சுவாசிக்க வைப்பார்கள். நோய் தீவிரமாகும்போது, இந்த நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிப்பார்கள். நோய் தொடங்கி 5 வருடங்களுக்குப் பின் சிரமங்கள் ஏற்படலாம். நாளாக நாளாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது புரியாது. உணவை விழுங்க முடியாது. இதனால் ஊட்டச்சத்து குறையும், சில சமயம் உணவு நுரையீரலுக்குள் சென்றுவிடும், அதனால் நிமோனியா வந்துவிடும். அபூர்வமாக ஒரு சிலருக்கு நினைவுத் திறன், தீர்மானங்கள் எடுப்பது போன்றவற்றில் பாதிப்பு வரலாம். இதை frontotemporal dementia என்று சொல்வோம். இதைச் சரியாகப் பரிசோதிக்கக் கூடியவர்கள், நரம்பியல் நிபுணர்களே.

நரம்பியல் நிபுணர்

நோய் அறிகுறிகள் தொடங்கியது எப்போது, எவ்வாறு உள்ளது என்பதை நோயாளிகள் குறித்து வைத்துக்கொள்வது நல்லது. மனம், உடல், ஆத்மா ஆகியவற்றை முழுமையாக ஒன்று சேர்த்துப் பார்க்கிற, ஒரு நரம்பியல் நிபுணர் கிடைத்தால் நல்லது.

மருந்து இல்லை என்று சொல்லிவிட்டுப் போவதைவிட கருணையுடன் பார்க்கிற மருத்துவர் தேவை. ஆயுர்வேத மருத்துவரும், நரம்பியல் நிபுணரும் இணைந்து செயல்படும்போது, இது போன்ற நோய்களை எதிர்ப்பதில் பலன் சற்று அதிகம் கிடைக்கும். தசைத் துடிப்பு, தசையின் சக்தி போன்றவற்றை எல்லாம் பார்ப்பார்கள்.

Electromyogram என்று சொல்லக்கூடிய பரிசோதனையில் மருத்துவர் தோல் வழியாகத் தசைகளில் ஊசியைக் குத்தி, அதன் மின்சார அதிர்வுகளைப் பதிவு செய்வார். அதைப்போல nerve conduction study என்ற ஆய்வு உண்டு. சில நேரங்களில் MRI எடுப்பார்கள். தசை biopsy செய்வதும் உண்டு. இந்நோய்க்குப் பன்முகத்தன்மை கொண்ட மருத்துவக் குழுவைக் கொண்டு சிகிச்சை செய்வது நலம்.

ஆயுர்வேத சிகிச்சை

இந்த நோய்க்கு மாம்ஸ க்ஷயம், தாதுக்ஷயம் என்று பெயர். இங்கு அக்னி சக்தியை வலுப்படுத்தித் தாதுகளுக்கு, திசுக்களுக்கு வலிமையைத் தரும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பால் முதப்பன் கிழங்கு, பூரணச் சந்திரோதயம், குறுந்தட்டி வேர் போன்றவை சிறந்ததாகும். ஓரிதழ் தாமரை பால் கஷாயம் இதற்கு ஒரு சிறந்த மருந்து. எண்ணெய் தேய்த்தல், நவரை லேபம் செய்தல், சிரோ வஸ்தி செய்தல், பால் கஷாயங்களை வஸ்தியாக (எனிமாவாக) கொடுத்தல், சியவனபிராச லேகியம், நெல்லிக்காய் லேகியம், கூஷ்மாண்ட லேகியம் போன்றவை நோயின் வேகத்தைச் சற்றுக் கட்டுப்படுத்தும். ஆயுர்வேதத்தில், ஸ்வர்ணபஸ்மம் இதற்கு ஒரு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

பாலில் அமுக்குரா சூரணம் 10 கிராம் கலந்து, இரண்டு வேளை கொடுக்கலாம்.

க்ஷயகுலாந்தக ரஸம் என்று சித்த மருத்துவத்தில் உள்ளது. அது இதற்கு ஒரு உன்னத மருந்தாகும்.

நீர்முள்ளி விதை, ஜாதிக்காய், முருங்கைப் பிசின், முருங்கை விதை, நெருஞ்சிமுள், நிலப்பனைக்கிழங்கு, சாலாப்மிச்ரி, தாமரை விதை, ஏலம், குதிரைக்கட்டை, பட்டுக்கொடி, கன்மதம், மதனகாமப்பூ, திராட்சை, எள்ளு, பூமிச் சர்க்கரை, பருத்திக்கொட்டை போன்றவற்றால் செய்த மருந்துகளைச் சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கலாம். இது நோயின் வேகத்தைச் சற்றுக் குறைக்கும்.

மஞ்சள், சிறிதளவு வசம்பு, கொட்டம், திப்பிலி ஆகியவற்றை அண்டத் தைலத்துடன் சேர்த்து நாக்கில் தடவ, பேச்சில் தெளிவு ஏற்படலாம். இவர்களுக்கு மனோ தைரியமும், நல்ல சுற்றுச்சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சித்த மருத்துவத்தில் சில மருந்துகள் இதற்கு நல்ல பலனளிக்கின்றன.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்