மனநோய்க்கே டூப்பு போட்டவர்கள்!

By ஒய்.அருள்பிரகாஷ்

அம்னீஷியா, ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் போன்ற மனநலப் பிரச்சினைகள் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாகக் கையாளப்படுபவை. பல சூப்பர்ஹிட் படங்கள் ஓடுவதற்கு இந்த மனநலப் பிரச்சினைகள் நிறையவே உதவியுள்ளன. ஆனால், அந்தப் பிரச்சினைகள் எல்லாமே நமது அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை என்பதுதான், அப்படங்களின் சுவாரசியத்துக்குக் காரணம்.

‘கஜினி' திரைப்படத்தில் நாயகன் சூர்யா குறைந்த நேர நினைவிழத்தல் (Short term Memory loss) என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராகச் சித்திரிக்கப்பட்டிருப்பார். அதாவது 15 நிமிடங்களுக்கு மேல், அவரால் எதையும் நினைவில் வைத்திருக்க முடியாது. வில்லனால் தாக்கப்பட்டுத் தலையில் பலத்த காயம் ஏற்படும். இதனால்தான் நாயகன் குறைந்த நேர நினைவிழத்தல் பாதிப்புக்கு ஆளானதாகக் கூறப்படும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே தவறான சித்திரிப்பு தொடங்கிவிடுகிறது. நினைவிழப்பு பாதிப்பு என்பது இப்படிக் குறிப்பிட்டு 15 நிமிடக் கணக்கில் எல்லாம் யாருக்கும் வருவதில்லை. இது முழுக்க முழுக்கக் கற்பனையே. அப்படி ஒன்று மருத்துவ ரீதியாகக் கிடையாது.

மேலும், தலையில் அடிபட்டு நினைவாற்றலை இழந்து, நினைவிழத்தல் பாதிப்பு வந்துவிட்டால் அதற்கு முந்தைய எல்லா நினைவுகளும் ஒரேயடியாக மறந்துவிடும். சுவர் முழுக்க, உடல் முழுக்க எண்களை எழுதி வைப்பதும், அதைப் பார்த்து நினைவுகூர்வதும் சாத்தியமே அல்ல. மேலும், பழிவாங்கும் எண்ணமும்கூட இல்லாமல் விடும்.

எல்லாம் மறக்கும்

குறைந்த கால நினைவிழப்பு நோய் வித்தியாசமானது. குளித்தோமா, சாப்பிட்டாமா என்பது போன்ற அன்றாடச் செயல்பாடுகளைக்கூட மறந்துவிடுவார்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு மறந்துவிடுவார்கள். திரும்பத் திரும்பக் குளித்துக்கொண்டிருப்பார்கள். காலையில் சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள். திரும்பத் திரும்பச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். வீட்டைப் பூட்டிச் சாவியைப் பத்திரமாக வைப்பதாக நினைத்து எங்காவது வைத்துவிட்டு, வேறு எங்கோ தேடிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் உபசரித்துக்கொண்டே இருப்பார்கள்.

சமீபத்திய நினைவிழப்பு

குறைந்த கால அல்லது சமீபத்திய நினைவிழத்தல் தற்காலிக நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம். அல்லது அல்சைமர் (Alzheimer) என்னும் ஞாபக மறதி நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இந்தப் பாதிப்பு நினைவாற்றல் மட்டும் தவறிவிடும் நிலையிலான தலைக் காயங்கள், நீண்ட நாள் குடிப் பழக்கம், தயமின் வைட்டமின் குறைபாடு, மூளை ரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூளைக் கட்டிகள், கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்படலாம். மூளையின் பாகங்களான Thalamus, Temporal பாதிக்கப்பட்டாலும் இந்த நோய் ஏற்படும்.

இதனால் முக்கியமாகப் புதிய நிகழ்வுகளைக் கற்று மூளையில் பதியவைப்பதிலும், சமீபத்தில் கற்றவற்றைத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதிலும் குறைபாடு ஏற்படும். மூளையில் செய்யப்படும் சில அறுவை சிகிச்சைகளின்போது திசுக் குறைவு ஏற்பட்டு நினைவிழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்த நினைவிழப்பைத் திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவு.

அல்சைமர் (Alzheimer)

இது முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய நோய். வெளியே எங்காவது சென்றால், வீட்டுக்குத் திரும்ப வர முடியாது. உறவினர்களின் பெயர்களை மறந்துவிடுவார்கள். படிப்படியாக எல்லாச் சம்பவங்களும் மறந்துபோகும். மனிதர்களையும் மறந்துவிடுவார்கள்.

இந்நோயின் தொடக்கத்தில் பழைய நினைவுகள் ஓரளவு இருக்கும். அதுபோலப் பல விஷயங்களை ஒருங்கிணைத்துச் செய்யும் செயல்களை, அல்சைமர் பாதிப்பு கொண்டவர்களால் செய்ய முடியாது. உதாரணமாக, தீக்குச்சியை உரசி விளக்கைப் பற்றவைப்பது, பல அடுக்குகளைக் கொண்ட செயல். அதாவது முதலில் தீப்பெட்டியைத் திறந்து, குச்சியை எடுத்து, உரசி விளக்கையோ அடுப்பையோ பற்றவைக்க வேண்டும். பிறகு தீக்குச்சியை அணைக்க வேண்டும். இம்மாதிரி செயல்களை இந்தப் பாதிப்பு உள்ளவர்களால் செய்ய முடியாது. அதாவது, இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செய்ய முடியாது. இதை Apraxia எனச் சொல்வோம். அதேபோல நிர்வாகச் செயல்திறனும் பாதிக்கப்படும்.

உலக அளவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 0.6 சதவீதம் ஆண்களுக்கும் 0.8 பெண்களுக்கும் அல்சைமர் பாதிப்பு இருக்கிறது.

சிகிச்சை

குறைந்த கால நினைவிழப்பு நோயைப் பூரணமாகக் குணப்படுத்த முடியும். ஆனால் அல்சைமர் நோயைக் குணப்படுத்துவது கடினம். பெரிய அளவில் ஞாபகத்தை மீட்டெடுக்க முடியாது. சதுரங்கம் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகள் விளையாடலாம். மனிதர்களையும் சம்பவங்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள டயரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குறைந்த கால நினைவிழப்பு நோய் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பதை முதலில் ஆராய வேண்டும். நோயைக் குணப்படுத்துவதற்கு, நோய்க்கான காரணத்தையும் சரிசெய்ய வேண்டும்.

கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: arulmanas@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்