வாசிப்பை வசப்படுத்துவோம்: ஆயுர்வேத மருத்துவத்தின் இதயம்

By டாக்டர் எல்.மகாதேவன்

இந்திய மருத்துவத்தின் ஒரு பிரிவான ஆயுர்வேதத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் புத்தகங்களில் ஒன்று ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’. சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு, மிகவும் தெள்ளத்தெளிவாக எழுதப்பட்ட ஒரு புத்தகம் இது. விருத்த வாக்படர் எழுதிய ‘அஷ்டாங்க சங்கிரஹம்’ என்ற ஒரு பெரிய புத்தகத்தின் சுருக்கம் இது. இதை எழுதித் தொகுத்தவர் லகு வாக்படர். இது முழுக்க முழுக்க நோய்க் குறியீடுகளையும், தத்துவங்களையும், நோய்க்கான சிகிச்சையையும் கூறுகிறது. 3-ம் நூற்றாண்டிலும் 7-ம் நூற்றாண்டிலும் இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சாரத்தின் தொகுப்பு

சரக சம்ஹிதை மருத்துவத்துக்கும், சுஸ்ருத சம்ஹிதை அறுவை சிகிச்சைக்கும் சிறந்த புத்தகங்களாகத் திகழ்கின்றன. அஷ்டாங்க ஹ்ருதயம் இரண்டிலும் உள்ள சாரத்தை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கும், மருத்துவச் சிகிச்சைக்கும் ஒரு நன்னூலாகத் திகழ்கிறது.

இந்திரன், அத்ரி புத்திரன் (ஆத்ரேயன்), அக்னிவேசர் போன்ற ரிஷிகளால் படிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஆயுர்வேத மருத்துவம் பற்றி தனித்தனியாகப் புத்தகங்களைத் தொகுத்தார்கள். அவை விசாலமாக இருந்தன. அவற்றில் உள்ள சாரம், முக்கியமான பகுதிகளைத் தொகுத்து ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற புத்தகத்தை வாக்படர் எழுதினார். சரக, சுஸ்ருத புத்தகங்களுடன் ஒப்பிடும்போது இது சிறிய புத்தமாக இருந்தாலும், சாரம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

ஆயுர்வேத இதயம்

இந்தப் புத்தகத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன, 120 அத்தியாயங்கள் உள்ளன. அடிப்படைத் தத்துவங்களை விளக்கும் ஸூத்திர ஸ்தானம், உடற்கூறுகளை விளக்கும் சரீர ஸ்தானம், மருந்துகளைப் பற்றிக் குறிப்பிடும் கல்ப, ஸித்தி ஸ்தானம், கண், காது, மூக்கு நோய்களையும், பிற பகுதிகளையும் விளக்கும் உத்தர ஸ்தானம் போன்றவை இதில் உள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களும், எட்டு அங்கங்களுக்கு உரிய விஷயங்களும் அமிர்தம் போன்று இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களின் ஹ்ருதயம் போல இது விளங்குகிறது.

ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் படிப்பதற்கும், குண சம்பந்தமான விஷயங்களை அறிவதற்கும் இந்தப் புத்தகம் உதவிகரமாக இருக்கிறது. அரச வைத்தியர்களைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

அறுசுவைகள் பற்றி அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. வாக்படர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், மாம்ச வர்க்கங்களின் (மாமிச வகைகள்) மருத்துவக் குணங்களையும், மத்ய வர்க்கங்களின் (மது வகைகள்) மருத்துவக் குணங்களையும் சிகிச்சைக்காகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக மொழிகளில்

இந்தப் புத்தகம் அரேபியம், ஜெர்மனி, திபெத்தியம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1880-ல் இதன் முதல் அச்சுப் பதிப்பு வெளிவந்தது, அதற்குப் பின் வடஇந்தியாவிலிருந்து பல வெளியீடுகள் வந்துள்ளன. இதற்கு 37 வியாக்கியானங்கள் (விளக்கவுரைகள்) காணப்படுகின்றன. அதில் சர்வாங்க சுந்தரா என அருண தத்தர் 12-ம் நூற்றாண்டில் எழுதிய உரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 1888-ல் பதிப்பிக்கப்பட்டது. வாக்படரின் மாணவராகக் கருதப்படும் ஜெஜடாவின் விளக்கவுரையும் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் காணப்படும் மூலிகைகள் அஷ்டாங்க நிகண்டு என்ற பெயரில் தனியாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூல உரை வடமொழி, தெலுங்கு, தமிழில் உள்ளது.

சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை, வாக்பட சம்ஹிதை ஆகியவற்றை ஆயுர்வேதத்தின் மூன்று முக்கியப் புத்தகங்கள் என்று குறிப்பிடுவார்கள். தென்னிந்தியாவில் குறிப்பாகக் கேரளாவில் அஷ்டாங்க ஹ்ருதயம் புத்தகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழிலும் வெளியானது

1935-ம் ஆண்டு பண்டிதர் துரைசாமி அய்யங்கார் வடமொழி சுலோகங்கள் இல்லாமல் தமிழ் மொழியில் அஷ்டாங்க ஹ்ருதயத்தை வெளியிட்டார். பின்னர் வடமொழியுடன் தமிழ் உரை சேர்த்துப் பெரிதாக வெளிவந்தது.

சம்ஸ்கிருதம் தெரியாதவர்கள்கூட ஆயுர்வேதம் பற்றித் தெரிந்துகொள் வதற்காகத் தமிழ்நடையிலேயே அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த உரையும் இந்து வியாக்கியானம், ஹேமாத்ரி உரை, கைரளி உரை, அருணதத்தர் உரை, சக்ரபாணி உரை, டல்ஹணர் உரை, வங்கசேனர் உரை, சாரங்கதரர் உரை, சரகர் குறிப்புகள், சுஸ்ருதர் குறிப்புகள் எல்லாம் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளன.

இன்றியமையா நூல்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுக் கூடத்தில் இந்த வேலை தொடங்கப்பட்டது. மகாபண்டிதர் டாக்டர் வேங்கட சுப்பிரமணியச் சாஸ்திரிகள், புலவர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூல் மத்திய அரசின் சி.சி.ஆர்.எஸ். மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆறு பாகங்களாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

இன்றைக்கு இருக்கும் ஆயுர்வேதப் புத்தகங்களில் தலைசிறந்த புத்தகமாக இதைக் கருதுவதில் எந்தத் தவறும் இல்லை. இது ஆயுர்வேத மாணவர்களுக்கு, மருத்துவர்களின் அறிவை விரிவுபடுத்துவதற்கும் சிகிச்சைக்கும் இன்றியமையாதது.

- கட்டுரையாளர், ஆயுர்வேத மருத்துவர்
தொடர்புக்கு: mahadevan101@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்