தலைவலிக்குத் தீர்வு சொல்லுங்கள்

By டாக்டர் எல்.மகாதேவன்

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். பெரும்பாலான நேரம் படிப்பதுடன், கம்ப்யூட்டரில் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், திடீர் திடீரென வரும் தலைவலி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. சில அலோபதி டாக்டர்கள் மருந்தால் இதைக் குணப்படுத்தலாம் என்கிறார்கள், சிலர் மருந்தே கிடையாது என்கிறார்கள். இதற்கு நிரந்தரமான தீர்வு கிடையாதா?

- ராஜேஷ், கிருஷ்ணகிரி

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.

இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர வேண்டும் என்று தோன்றும். கண்களில் ஒளிவட்டங்கள் தெரியும். கை மரத்துப் போகலாம். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மலச்சிக்கல், மனச்சோர்வு, உணவில் அதிக நாட்டம், கழுத்து வலி, கொட்டாவி விடுதல் போன்றவை இதில் காணப்படும்.

ஒரு சிலருக்குப் பார்வை இழப்பு, பேச்சுத் தடுமாற்றம் போன்றவை ஏற்படும். கை, கால் பலவீனம் ஏற்படலாம். 4 முதல் 72 மணி நேரம்வரை இது காணப்படும்.

ஒரு மாதத்தில் பல தடவை தலைவலி வரலாம். மைக்ரேன் வந்த பிறகு உடல் சோர்ந்து போகும். எந்தவொரு தலைவலியுடன் காய்ச்சலும், கழுத்துவலியும், காக்காய் வலிப்பும், இரண்டாகத் தெரிதலும், உடல் மரத்துப்போதலும், கை, கால் பலவீனமும் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

அடிபட்டு தலைவலி வந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். 50 வயதுக்கு மேல் திடீரென்று தலைவலி தொடங்கினாலும் அதைக் கவனிக்க வேண்டும்.

Serotonin என்கிற நுண்புரதம் இந்தத் தலைவலிக்குக் காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மாதவிடாய்க்கு முன்பு பெண்களுக்கு அதிகமாகத் தலைவலி வருகிறது. கருத்தடை மாத்திரைகளாலும், புளித்த வெண்ணெய், காரம், புளி, உப்பு, எண்ணெய், உணவு சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் தலைவலி கூடுகிறது.

மன அழுத்தம், மது அருந்துவது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் இந்தத் தலைவலி அதிகமாகிறது. ஒரு சிலருக்கு வாசனை திரவியங்களாலும் இந்தத் தலைவலி வருகிறது. ஒரு சிலருக்குப் பரம்பரையாகத் தலைவலி இருந்தாலும் வரும். பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிகமாக வருகிறது.

எந்தவொரு தலைவலியாக இருந்தாலும் காய்ச்சல், இருமல், தொண்டைவலி, மலச்சிக்கல், கண் வலி, கண் அழுத்தம் போன்றவை இருக்கின்றனவா, இரவு சரியாகத் தூங்கினாரா, புளித்த ஏப்பம் வருகிறதா, சொத்தை பல் உள்ளதா வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தாரா என்பது போன்ற அடிப்படை கேள்விகளைக் கேட்க வேண்டும். BP சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

ஆயுர்வேதத் தத்துவத்தின்படி தலை கப ஸ்தானமாக இருப்பதாலும், அங்கு எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். அங்குப் பித்தமோ, கபமோ அதிகரித்தால் நோயை உண்டாக்கும். பித்தம் அதிகரித்த நிலையை மைக்ரேன் என்றும், வாதம் அதிகரித்த நிலையை tension headache என்றும், கபம் அதிகரித்த நிலையை sinus headache என்றும் பிரித்துக் கொள்ளலாம்.

இவை மட்டுமல்லாமல் பெரிய நோய்களாகிய தலையில் நீர் சேர்தல் (normal pressure hydrocephalus) போன்றவற்றையும் நாம் கவனத்துடன் கண்டறிய வேண்டும். இதற்குப் பரிசோதனைகள் இன்றியமையாதவை. அஜீரணம், மலத் தடை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சீரான உணவுப் பழக்கம் ஏற்பட வேண்டும். அந்த அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மைக்ரேன் தலைவலி பித்தத்தின் சார்புத் தன்மை இருப்பதால் கசப்பை ஆதாரமாகக் கொண்ட கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மஞ்சள், மரமஞ்சள், சீந்தில் கஷாயத்துடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொடுப்பது சிறந்தது. இதற்குப் பத்யாஷடங்கம் என்று பெயர். இது ஆயுர்வேத மருத்துவ உலகில் மிகப் பிரசித்தம்.

இதனுடன் அசன மஞ்சிஷ்டாதி தைலத்தைச் சேர்ப்பது சிறந்தது. கடுக்காய் லேகியம் கொடுத்துப் பேதி போக வைப்பது சிறந்தது. இது அல்லாமல் மூக்கின் வழியாகத் தும்பைத் தைலமோ, தும்பைச் சாறோ நஸ்யமாகச் செலுத்துவது சிறந்தது.

சிறந்த கை மருந்துகள்

# இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

# அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவிவரலாம்.

# சுக்குத் தூள், சீந்தில் கொடி, தேன் சர்க்கரை ஆகியவற்றை வகைக்குக் கொஞ்சம் எடுத்துத் துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம்.

# குளிர்ந்த நீரைத் துண்டில் நனைத்துத் தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும்.

# தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக்கொள்ள வேண்டும்.

# நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.

# பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.

# ஜாதிக்காய் உறையைக் கல்லில் உரைத்து அதை எடுத்து இரு பக்க நெற்றிப் பொட்டிலும் கனமாகப் பற்றுப் போடலாம்.

# நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் தூளாக்கிச் சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து முகரத் துர்நீர் பாய்ந்து வந்து தலைவலியைப் போக்கும்.

# வில்வ இலைகளை அம்மியில் அரைத்துத் தினமும் சுண்டைக்காய் அளவு 20 நாட்கள் சாப்பிடலாம்.

# இரண்டு துளி வெற்றிலைச் சாறு மூக்கில் விடலாம்.

# மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை.

# வெள்ளை எள்ளை, எருமைப் பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலையில் முன் நெற்றியில் பற்று போட்டு உதயசூரியன் ஒளியில் லேசாகக் காட்டிவரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 secs ago

இந்தியா

10 mins ago

சுற்றுச்சூழல்

12 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

34 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

45 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

52 mins ago

மேலும்