பதுங்கிப் பாயும் ‘ஸ்ட்ரோக்’

By டி. கார்த்திக்

பக்கவாத நோய் நாள்: அக். 29

இதயநோய், புற்று நோயைப் போலவே ஆபத்தான இன்னொரு நோயும் இருக்கிறது. உடலில் எந்த ஊனமும் இல்லாமலேயே படுத்த படுக்கையாக்கிவிடும் கொடிய நோய் இது. ஆண்டுக்கு சுமார் ஆறு கோடி பேரை இது முடக்கிப் போடுகிறது.

ஓர் ஆண்டில் சராசரியாக ஒன்றரை கோடிப் பேர் இந்த நோய்க்குப் பலியாகிவிடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அது என்ன நோய் எனத் தெரியுமா? ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம் (Stroke - மூளைத் தாக்கு).

அதிகரிக்கும் வாதம்

மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய் இது. இதை மூளைத் தாக்கு அல்லது ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். முன் அறிகுறிகள் எதுவுமின்றித் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ஸ்ட்ரோக் என்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதியவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்றிருந்த நிலை மாறி, இன்றைக்கு இளம் வயதினரைக்கூட இந்நோய் தாக்குகிறது.

எப்படி வருகிறது?

பக்கவாத நோய் ஏற்பட இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டத் தடை. இரண்டாவது ரத்தக் கசிவு. இதில் ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு முக்கியக் காரணம் கொழுப்புப் படிவுகள்தான்.

அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு மற்றும் கொழுப்புப் படிவுகள் படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறக் கூட்டின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். எனவே, பக்கவாதம் ஏற்படலாம்.

ரத்தக் கசிவு வாதம்

ரத்தக் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். ரத்த நாளங்களில் இருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம்.

உயர் ரத்த அழுத்தம் தவிர, நாளச் சுவர்கள் மாறுபாடு நோய், ரத்த நாளங்களில் ஏற்படும் தளர்வு போன்றவை காரணமாகவும் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அறிகுறிகள்

காரணமில்லாமல் ஏற்படும் கடும் தலைவலி, திடீரெனப் பார்வை மங்குதல், பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை (ஒரு கண்ணில் மட்டும் ஏற்படுவது), இந்த அறிகுறிகளுடன் காரணம் இல்லாத கிறுகிறுப்பு, நிலையில்லாமல் தள்ளாடுதல், தடுமாறிச் சாய்தல், திடீரென உடலின் ஒரு பகுதி, முகம், கை, கால்களில் தளர்வு, தொடு உணர்ச்சிக் குறைவு, பேச்சிழப்பு, பேசுவதில் சிரமம், பேச்சுத் தடுமாற்றம் ஆகியவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.

இவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோய் ஏற்பட்டுச் சிலர் சுயநினைவை இழக்கலாம். உயிர் பிழைத்தாலும் பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் ஆகியவை பாதிக்கப்படலாம். முகம் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகலாம்.

குடும்ப வரலாறு

குடும்பத்தில் யாராவது இந்த நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால், கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ அல்லது மரபுரீதியாகவோ இது ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும்போது, பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகரிக்கிறது. பெண்களைவிட ஆண்களை ஒரு மடங்கு அதிகமாகத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், பெண்கள்தான் அதிகம் இறந்து போகிறார்கள்.

பாதிப்புகள்

பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை செய்து கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவது குறைகிறது. இதனால் ஏற்படும் ஊனமும் குறையக்கூடும். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதம் பேர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் திரும்ப முடியும். ஆனால், 15 முதல் 30 சதவீதம் பேர் படுத்த படுக்கையாகி நிரந்தரமாக நடக்க முடியாமலும், கை செயல்படாமலும் ஊன நிலையை அடையலாம்.

தடுப்பு முறைகள்

பக்கவாதம் ஏற்படுவதற்கான சில காரணங்களை நம்மால் மாற்ற முடியாது. அதாவது குடும்ப வரலாறு, மரபியல் காரணங்கள் போன்றவற்றை மாற்ற முடியாது. என்றாலும் மருந்துகள், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் சில காரணங்களைச் சரி செய்ய முடியும். இந்த நோய்க்கான அறிகுறிகளைப் பெரும்பாலும் உடனடியாக அறிய முடிவதில்லை.

முதலில் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது வாதம் ஏற்படாமல் ஓரளவு தடுக்கும். சில பழக்கவழக்கங்கள் மற்றும் சீராகப் பராமரிக்கப்படும் உடல்நிலை மூலம் இந்நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட 4 முதல் 6 மடங்கு பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

ரத்த அழுத்தத்தை 120/80 என்ற அளவில் சீராகப் பராமரிக்க வேண்டும். புகைபிடிப்பதால் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு 4 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால், புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதய நாள நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதங்கள் ரத்தத்தில் அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள் கடினமாகும் வாய்ப்பு உண்டு. மாறாக உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதங்கள் அதிகரிக்கும்போது, அவை நாளம் கடினமாதலைத் தடுக்கின்றன.

- அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ கையேட்டின் உதவியுடன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்