சந்தேகம் சரியா 23: தாகம் தணிக்கக் குளிர்பானம் குடிக்கலாமா?

By கு.கணேசன்

குளிர்பானங்களைக் குடிப்பது ஆரோக்கியத்துக்குக் கெடுதல் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், கோடையில் தாகம் தணிக்க அவற்றைக் குடிப்பதில் தவறில்லை என ஒரு விளம்பரத்தில் படித்தேன். இது சரியா?

இது சரியில்லை.

குளிர்பானம் என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை; முக்கியமாகத் தாகம் தணிவதும் இல்லை.

குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தரக்கூடியவை.

தாகம் தணிக்குமா?

குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் குடிக்கிறோம். இதனால் இவை உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு. உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, இவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. இது மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது. இதை உங்கள் அனுபவத்திலேயே உணர முடியும்.

இளைஞர்களுக்கு நீரிழிவு நோய்!

குளிர்பானங்களில் உள்ள ‘ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்' எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி. குளிர்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சர்க்கரை உள்ளது. இதனால் ரத்தச் சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்தக் கணையத்திலிருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென்பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது. இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப் டூ' நீரிழிவு நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்குக் குளிர்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு.

குழந்தைகளுக்கு உடற்பருமன்!

தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடற்பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதயநோய், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது.

பல், எலும்பின் ஆயுள் குறையும்!

குளிர்பானத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கிற எனாமலை மிக விரைவாக அரித்துவிடுவதால், பற்சிதைவு உண்டாகிறது. பல்லின் ஆயுள் குறைகிறது. சீக்கிரமே பற்கள் விழுந்துவிடுகின்றன. பாஸ்பாரிக் அமிலம் குடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எலும்பில் உள்ள கால்சியத்தைச் சிதைத்துவிடுகிறது. இதனால் கால்சியம் உடலில் குறைந்துவிடுகிறது. எலும்பு, பல் வளர்ச்சிக்குக் கால்சியம் மிக அவசியம். பாஸ்பாரிக் அமிலம் கால்சியத்தைக் குறைத்துவிடுவதால், எலும்பின் அடர்த்தி குறைகிறது. எலும்புச் சிதைவு நோய் (Osteoporosis) வருகிறது. குழந்தைகளும் வயதானவர்களும் லேசாகத் தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் குளிர்பானம் ஒரு காரணமாகிறது. குளிர்பானங்களுக்குக் கறுப்பு வண்ணம் தருகிற ‘கேராமல்' எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் உள்ள காஃபீன் ரத்தஅழுத்தத்தை அதிகரித்து நரம்புத்தளர்ச்சிக்கும் இதயநோய்க்கும் வழிவகுக்கிறது.

அணிவகுக்கும் ஆபத்துகள்

குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து இரைப்பைப் புண், குடற்புண் போன்றவை ஏற்படலாம். பசியின்மை, புளித்த ஏப்பம், எதிர்க்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.

தாகம் தணிக்க என்ன செய்வது?

கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர் போன்றவை தாகம் தணிக்க உதவும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளலாம், அருந்தலாம். எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பு, சர்க்கரை கலந்து அருந்துவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.

(அடுத்த வாரம்: தொற்றுநோயால் புற்றுநோய் வருமா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

32 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்