சந்தேகம் சரியா 26: இன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா?

By கு.கணேசன்

நான் ஒரு சர்க்கரை நோயாளி. தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். என் வீட்டில் குளிர்பதனப் பெட்டி இல்லை. இன்சுலின் ஊசிமருந்தை வெளியில்தான் வைத்துக்கொள்கிறேன். இப்படிச் செய்தால் இன்சுலினுக்கு ஆற்றல் குறைந்துவிடும்; ரத்தச் சர்க்கரை கட்டுப்பட நாளாகும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மைதான்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு வரப்பிரசாதம். இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இன்சுலின் அதன் வேதிப்பண்பின்படி ஒரு புரதப்பொருள். இதைக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 8 டிகிரி சென்டிகிரேடுவரை உள்ள வெப்பத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதிக வெப்பம் அல்லது வெயில் இதன் மீது பட்டால், இன்சுலினுக்குரிய வேதிப்பண்பு சிதைந்துவிடும். இதனால், அதன் ஆற்றல் குறைந்துவிடும்.

இன்சுலின் ஊசி மருந்தை எவ்வாறு பாதுகாப்பது?

# இன்சுலினுக்கு அதிக வெப்பமும் ஆகாது; அதிகக் குளிர்ச்சியும் கூடாது.

# இன்சுலினை வெயில் படாத, குளிர்ச்சியான அறையில் வைத்திருக்கலாம்.

# சில நாட்களுக்கு மட்டும் என்றால், சாதாரணமாக நாம் வசிக்கும் அறையிலும் வைத்துக்கொள்ளலாம். அறை வெப்பம் 15-லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைவரை இருக்க வேண்டும்.

# நீண்ட நாட்களுக்கு என்றால், குளிர்பதனப் பெட்டியில் கதவின் உட்பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம்.

# இன்சுலின் மருந்து, இன்சுலின் பேனா, கார்ட்ரிஜ்களை ஃபிரீசரில் வைத்துவிடக் கூடாது.

# இன்சுலின் உறைந்துவிட்டால், குழம்பியிருந்தால் அல்லது நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தக்கூடாது.

# குளிர்பதனப் பெட்டி இல்லாதவர்கள், ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் முக்கால் பங்குக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் நடுவில் அடிப்பாகம் தட்டையாக உள்ள சிறிய மண்கலசத்தை வையுங்கள். அந்த மண்கலசத்துக்குள் இன்சுலின் ஊசி மருந்தை வைத்துவிடுங்கள். இதை ஒரு மூடியால் மூடி, வீட்டில் வெப்பம் படாத இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது குட்டி ஃபிரிட்ஜ் தயார். இன்சுலின் மருந்துக்குக் குளிர்பதனப் பெட்டி தருகிற அத்தனை பலன்களையும் இதனால் பெற முடியும்.

# குளிர்பதனப் பெட்டியிலிருந்து மருந்தை வெளியில் எடுத்ததும் போட்டுவிடக்கூடாது. அது அறை வெப்பத்துக்கு வரும்வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அல்லது இன்சுலின் பாட்டிலை உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு உருட்ட வேண்டும். இப்படிச் செய்தால் விரைவில் அறை வெப்பத்துக்கு மருந்து வந்துவிடும். அதற்குப் பிறகு அதைப் பயன்படுத்தலாம்.

# அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள். இப்படி இரண்டு ஐஸ் கட்டிப் பைகளுக்கு நடுவில் இன்சுலின் மருந்து பாட்டில் அல்லது இன்சுலின் பேனாவை வைத்துக்கொள்ளலாம்.

# இப்போது இதற்கெனத் தனி ‘ஐஸ் பை’ (Ice Bag) கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம்.

# இன்சுலின் மருந்தையும் இன்சுலின் பேனாவையும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிக வெப்பமுள்ள இடங்களில் வைக்கக் கூடாது; வெயில் படும் இடங்களிலும் வைக்கக் கூடாது; சமையலறையில் வைக்கக் கூடாது; தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைக்கக் கூடாது. ஹீட்டரைப் பயன்படுத்தும் அறையில் வைக்கக் கூடாது. அவன் (Oven) உள்ள இடத்தில் வைக்கக் கூடாது. குளிர்சாதனப் பெட்டிக்கு அருகிலும் வைக்கக் கூடாது. வெயில் நேரடியாக வரும் வாய்ப்புள்ள ஜன்னலுக்கு அருகில் வைக்கக் கூடாது.

# காரில் பயணம் செய்பவர்கள், நிறுத்தப்பட்ட காரில் இதை வைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ரேடியேட்டர் உள்ள இடங்களிலும் வைக்கக் கூடாது.

# தற்போது வரும் நவீன கார்களில் ஏ.சி. உள்ள டேஷ் போர்டு இருக்கிறது. இதில் இன்சுலின் பாட்டிலை வைத்துக்கொள்ளலாம்.

# விமானத்தில் பயணம் செய்பவர்கள் இன்சுலின் மருந்தை கார்கோவில் வைக்கக் கூடாது.

# பயன்படுத்தத் தொடங்கிய இன்சுலின் ஊசி மருந்தை, அது குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது என்றாலும், அதிகபட்சம் ஒரு மாதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பாட்டிலில் மருந்து மிச்சம் இருந்தாலும், அதன் செயல்திறன் குறைந்துவிடும். ஆகவே, அதைப் பயன்படுத்த வேண்டாம்.

# பயன்படுத்தாத, சீல் உடைக்கப்படாத இன்சுலின் மருந்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து, அதன் காலாவதி தேதிவரை பாதுகாக்க முடியும்.

(அடுத்த வாரம்: இடுப்பில் பர்ஸ் வைத்தால் இடுப்பு வலி வருமா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

சினிமா

36 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

தமிழகம்

50 mins ago

ஆன்மிகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்