முதுமையும் சுகமே 06: மூளையைத் தாக்கும் நடுக்குவாதம்

By டாக்டர் சி.அசோக்

“ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது” என்று ஜென் பழமொழி உண்டு. ஏனென்றால், ஆற்றில் ஓர் இடத்தில் ஓடுகிற நீர் அடுத்த விநாடி வேறோர் இடத்துக்கு நகர்ந்து விடுகிறது.

நம் வாழ்க்கையும் அப்படிப்பட்டது தானே! குழந்தைப் பருவத்தில் தொடங்கி சிறுவன்-சிறுமியாக, இளைஞன்-இளம்பெண்ணாக, குடும்பத்தலைவன்-குடும்பத்தலைவியாக என்று மதிப்பு கூட்டப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை முதுமையைத் தொட்டதும் மதிப்பிழக்கத் தொடங்கி, பலருக்கும் காலன் சீக்கிரம் அழைக்க மாட்டானா என்று அவஸ்தையுடன் காலம் கடத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிடுகிறது. அதனால்தான் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது - ‘பார்கின்சன்' என்கிற ‘மூளை நடுக்குவாதம்'.

ஆண்களுக்கு அதிக பாதிப்பு

உலக அளவில் 70 வயதைக் கடந்தவர்களில் லட்சத்துக்கு 1,700 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் புதிதாக இதனால் பாதிக்கப்படுகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஒன்றரை மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

நம் நடுமூளையில் சற்றே அடர்ந்த கறுப்பு நிறத்தில் இருக்கும் Substantia nigra (SN) என்கிற பகுதியில் உள்ள மூளை நியூரான்கள் தேவையான அளவு சுரக்க வேண்டிய ‘டோபமைன்' (Dopamine) என்கிற வேதியியல் சுரப்பு, முறையாகச் சுரக்காததால் சீரமைக்கவே முடியாத அளவுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுவதே நடுக்குவாதம்.

இயக்கம் சாராப் பிரச்சினைகள்

உடல் இயக்கம் சாராத பிரச்சினைகளுக்கு ஒரு பெரும் பட்டியலே தரலாம். அவற்றில் முக்கியமானது நரம்பியல் பாதிப்பால் வரும் மனநலப் பாதிப்புகள்.

‘மறக்க மனம் கூடுதில்லையே’ என்று அச்சாக மனத்தில் நின்றவர்களைக்கூட மறந்துவிடும் அளவுக்கு மறதியோ, ‘ஆகவே அந்தக் கட்சியின் தலைவரிடம் கேட்க விரும்புவது என்னவென்றால்' என்று மேடையில் முழங்கியவர்கள்கூட மொழிவளம், சிந்தனைவளத்தில் தடுமாற்றம், முடிவெடுப்பதில் தடுமாற்றம் என உடல்ரீதியான தடுமாற்றத்துடன் மனரீதியான தடுமாற்றத்தாலும் சேர்ந்து அவதிப்படுவார்கள்.

உணவை விழுங்குவதில், நுகர்வு தெரிவதில் (Hyposmia), செரிமானமடைவதில், சிறுநீர் வெளியேறுவதில், உமிழ்நீர் சுரப்பதில் என எல்லா மட்டத்திலும் உடல் சண்டித்தனம் செய்யத் தொடங்கிவிடும். இவற்றுடன் மலச்சிக்கல், மனக்குழப்பம், உறங்குவதில் சிரமம், உடல் வலி, கடுமையான சோர்வு, எதிலுமே பிடிப்பற்ற மனோபாவம் போன்றவையும் இருக்கலாம்.

பாலியல் ஆர்வம் சிலருக்குக் குறையலாம். சிலருக்குப் பாலியல் ஆர்வம் அதிதீவிரமடையலாம். இதெல்லாம் Dopamine சத்து மாத்திரைகள், உடலில் அதிக அளவில் சேர்வதால் ஏற்படும் சதிராட்டங்கள். இதனால் பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோய் பற்றியும் இதய நோய் பற்றியும் மட்டுமே சிந்திப்பவர்கள், நடுக்குவாதம் பற்றியும் சிந்தித்தால் வரும்முன் காக்க வசதியாக இருக்கும். அதேநேரம் நடுக்குவாத நோயில் மேலே படித்த அத்தனை அறிகுறிகளும் ஒருவருக்குத் தோன்றி அதகளம் பண்ணுமோ என்று வீண் மிரட்சி தேவையில்லை.

சரி, நடுக்குவாதம் ஏன் வருகிறது? முன்கூட்டியே அறிந்துக்கொள்ள முடியாதா? எப்படித் தடுப்பது? சரி வந்துவிட்டது, இனி என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்? எந்த வகை மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும்?

 

அறிகுறிகள் என்ன?

இதனால் அப்படி என்ன பிரச்சினை ஏற்படும் என்று கேட்கிறீர்களா? இரண்டு விதமான பாதிப்புகள்: (1) உடல் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் (2) உடல் இயக்கம் சாராத பாதிப்புகள். நடுக்குவாதத்தில் வழக்கமான முதுமை உடல் இயக்கக் குறைகளுடன் கூடுதலாகச் சில அறிகுறிகளும் தெரியும்.

# நடையைப் பார்த்தே இந்தப் பிரச்சினை இருப்பதைப் புரிந்துக்கொள்ளலாம். நடக்க எழுந்திருப்பதே சிரமமாக இருக்கும். நடக்க நடக்க நடையின் வேகம் குறைந்துகொண்டே போய் ரோபோட் மாதிரி நடக்கத் தொடங்கிவிடுவார்கள். எழுதும் வேகமும் குறைந்துவிடும், எழுத்தின் அளவும் சிறிதாகிவிடும் (Micrographia).

# இதைவிட முக்கியமானது நடுக்குவாதம் என்ற பெயருக்குக் காரணமான நடுக்கம். இதை எளிதில் கண்டுபிடிக்க வேண்டுமென நினைத்தால், உட்கார்ந்து இருக்கும்போதே ஜெபமாலை உருட்டுவதுபோல (அ) மாத்திரையை உருட்டுவதுபோல சுட்டுவிரலும் பெருவிரலும் இயங்கிக் கொண்டு இருக்கும் (Pill rolling tremor).

அல்லது தாடை தொடர்ந்து அசைந்துகொண்டே இருக்கலாம். ‘தசாவதாரம்' படத்தில் ‘முகுந்தா முகுந்தா' பாடலில் வரும் பாட்டி கமல்ஹாசன் இதை நுட்பமாகச் செய்திருப்பார்.

# முகம் ஏதோ மரத்தில் செய்தது போல் எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் இருக்கும் (Mask like face).

# உடலின் ஒரு பக்கம் மட்டுமே நடுக்கம் இருக்கும், கூடவே தோள் மூட்டு (அ) இடுப்பு மூட்டுப் பகுதியில் உள்ள தசைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு நடக்கும்போது சிரமம், தசைகளில் வலி, கைகளை தாராளமாய் வீசி நடக்க முடியாத தன்மை போன்றவை காணப்படும் (Cog wheel rigidity). திடீரென உட்காரவோ நடக்கவோ, இல்லை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென நிற்கவோ முடியாது. தினசரி அடிப்படைத் தேவைகளுக்கும் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள்.

# ‘நிமிர்ந்த நன்னடை' காணாமல் போய் ‘கூன் விழுந்த நடை'யாக மாறிப் போகும். இந்த அறிகுறிகள் உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில்தான் வரும்.

 

நடுக்குவாத அறிகுறிகள்

# அடிக்கடி கீழே விழுதல், நடையில் தடுமாற்றம், எழுதுவதில், கையெழுத் திடுவதில் தடுமாற்றம்

# நினைவாற்றலில், சிந்தனையில், அன்றாட வேலைகளில் திறன் குறைவு, செயற்கையான கற்பனைகள் அதிகரிப்பு

# மலச்சிக்கல், உணவை விழுங்குவதில், சிறுநீர் கழிப்பதில் சிரமம்

# தொடக்க நிலை அறிகுறிகள் உடலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்

 

(அடுத்த வாரம் பேசுவோம்.)

கட்டுரையாளர்,

குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்