ஊனம் தவிர்க்கும் ஃபோலிக்!

By கு.கணேசன்

தேசிய ஃபோலிக் அமில விழிப்புணர்வு வாரம் ஜனவரி 6-12

‘மனிதனின் உடல்நலனுக்குத் தேவைப்படும் இன்றியமையாத வைட்டமின் ’ஃபோலிக் அமிலம்’. இந்த வைட்டமின்தான் நமது உடலில் பிறவி ஊனம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. ஃபோலிக் அமிலம்' என்பது வைட்டமின் – B9-ஐக் குறிக்கும். லத்தீன் மொழியில் 'ஃபோலியம்' (Folium) என்றால் தாவர இலை என்று பொருள்.

பச்சைநிறக் காய்களில் அதிகமாக இருக்கும் இந்த வைட்டமின், தாவர உணவுகளில் ஃபோலேட் (Folate), ஃபோலாசின் (Folacin) எனும் இரண்டு வேதிவடிவங்களில் கிடைக்கிறது. தண்ணீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின், சாப்பிட்ட எட்டு மணி நேரத்தில் உடலிருந்து சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும். எனவே, உடலின் தினசரித் தேவைக்கு இந்த வைட்டமின் உள்ள உணவை நாம் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.

இது யாருக்கு அவசியம்?

இந்த வைட்டமின் அனைவருக்கும் தேவையென்றாலும், கர்ப்பிணிகளுக்குக் கூடுதலாகத் தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு கர்ப்பிணியின் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் சிசுவின் உடல் பகுதிகள் வளரத் தொடங்கிவிடும். அக்காலகட்டத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை, முதுகுத் தண்டுவடம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி ஆகியவை சரியாக அமைவதற்கு இந்த வைட்டமின் அவசியம் தேவை.

மேலும், எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ரத்தச் சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியிலும் பல அமினோ அமிலங்களின் உற்பத்தியிலும் இந்த வைட்டமின் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, உடலில் புரத உற்பத்திக்கு இந்த வைட்டமின் பெரிதும் உதவுகிறது. முக்கியமாக, வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் இன்றியமையாதது.

போதாமையால் நேரும் பிரச்சினைகள்

இந்த வைட்டமின் பற்றாக்குறையால் கர்ப்பிணிகளுக்குக் கர்ப்பகால வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற தொல்லைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்குப் பிறவியிலேயே உதடு, அண்ணம் ஆகியவற்றில் பிளவு (Cleft lip and cleft palate) ஏற்படுவதற்கும், கை, கால்களில் வளர்ச்சி குறைவதற்கும், முதுகெலும்பு பிளவுபடுவதற்கும் (Spina bifida) அதிக வாய்ப்புண்டு.

ஃபோலிக் அமிலப் பற்றாக்குறையால், குழந்தைக்கு உடல் வளர்ச்சி தடைப்படும். வயதுக்கு ஏற்ப உடல் எடை இருக்காது. நரம்புகளின் வளர்ச்சியும் தடைபடும். நரம்புத்தளர்ச்சி வரும். சிவப்பணுக்கள் உற்பத்தி குறையும். உற்பத்தியாகும் சிறிதளவு சிவப்பணுக்களும் மண்ணீரலில் சீக்கிரம் அழிந்துவிடும். இதனால் 'ஹீமோகுளோபின்' அளவு குறைந்து 'மேக்ரோசைட்டிக் அனீமியா' (Macrocytic anaemia) எனும் ரத்தசோகை நோய் ஏற்படும்.

யாருக்குப் பற்றாக்குறை?

துரித உணவுப் பழக்கம் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் ஃபோலிக் அமிலப் பற்றாக்குறை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. குறிப்பாக, காய்கறி குறைவாகச் சாப்பிடுவோருக்கும் திருமண வயதில் உள்ள பெண்களுக்கும் இந்தப் பற்றாக்குறை அதிகம் உள்ளது. மசக்கை காரணமாக வாந்தியும் தலைச்சுற்றலும் இருக்கும்போது கர்ப்பிணிகள் சத்துள்ள உணவுகளைச் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்த வைட்டமின் குறைபாடு உள்ளது.

ஃபோலிக் அமில மாத்திரையைச் சாப்பிடுவதற்குப் பெண்கள் கர்ப்பம் அடைவதுவரை காத்திருக்கத் தேவையில்லை. திருமண வயதில் உள்ள பெண்கள் அனைவரும் திருமணமாவதற்கு முன்பே இந்த மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். திருமணமான பெண்களில் பெரும்பாலோர் திட்டமிட்டுக் கர்ப்பமடைவதில்லை. அவர்கள் கர்ப்பமடைந்துள்ளது தெரியவரும்போது கர்ப்பகாலம் 4 வாரங்கள்வரை முடிந்துவிடுகிறது. முன்கூட்டியே சாப்பிடப்படும் மாத்திரைகளால் மட்டுமே இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும்.

மேலும், கிராமங்களில் குழந்தைகளுக்கு ஆட்டுப்பாலும் பசும்பாலுக்கு ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு சோயா பாலும் ஊட்டி வளர்ப்பார்கள். இந்த இரண்டிலும் 'ஃபோலிக் அமிலம்' குறைவாக உள்ளது என்பதால் அவர்களுக்கு இந்த வைட்டமின் உள்ள சத்து டானிக் கண்டிப்பாகத் தரப்பட வேண்டும்.

folic-2jpg

‘ஃபோலிக் அமிலம்’ அதிகம் உள்ள உணவுகள்

அரிசி, கம்பு, முழுக்கோதுமை, மக்காச்சோளம், ஓட்ஸ், முளைகட்டிய பயறுகள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை, கொண்டைக்கடலை, காராமணி, பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, எள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் நிரம்பியுள்ளது.

பசலைக் கீரை, அவரைக் காய், தக்காளி, வாழைப் பழம், ஸ்ட்ராபெரி, புரோக்கோலி, பீட்ரூட், காளான், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கொத்தவரங்காய், கோதுமை ரொட்டி ஆகிய உணவுகளிலும் இந்த வைட்டமின் ஓரளவு உள்ளது. அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சி, ஆட்டு ஈரல், முட்டை, மீன் முதலியவற்றில் இது அதிகமுள்ளது. பாலிலும் பாலில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் இது மிகவும் குறைவாக உள்ளது.

தினமும் எவ்வளவு தேவை?

11 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஃபோலிக் அமிலம் 200 மைக்ரோ கிராம் தேவைப்படும். அதுவே கர்ப்பிணிகள் என்றால் 400 மைக்ரோ கிராமும் பாலூட்டும் தாய்மார்கள் என்றால் 300 மைக்ரோ கிராமும் தேவைப்படும்.

ஆரோக்கியத்தின் அடித்தளம்

நமது உடல் செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) எனும் மரபணுப் பொருளை உற்பத்தி செய்வதற்கு ஃபோலிக் அமிலம் தேவை. செல்களின் பகுப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவும் இந்த வைட்டமின் காரணமாகவே, நமது உடல் வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் தண்டுவட வளர்ச்சியும் நரம்பு மண்டல வளர்ச்சியும் சரியாக நிகழ்கின்றன.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சமச்சீர் உணவைச் சாப்பிட்டும், ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட்டும் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஊனமற்ற வருங்காலத் தலைமுறைக்கு ஃபோலிக் அமிலமே அடித்தளமாக உள்ளது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்