அந்த மூன்று முகங்கள்..!

தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்பதுதான், இந்த ஆண்டின் மிக முக்கியமான, அழுத்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! அந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பாலினச் சிறுபான்மையினர் கொண்டாடி வரும் வேளையில், இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் நாளில் இந்தியத் தன்பாலின ஈர்ப்பாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய மூன்று முகங்கள்...

சித்தார்த் கவுதம்

பிரிவு 377-க்கு எதிராக ‘நாஸ் அறக்கட்டளை’ சட்டப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அந்தப் பிரிவை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் இவர்.

siddharthjpg

1989-ல் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்காகத் தன் நண்பர்களுடன் இணைந்து ‘எய்ட்ஸ் பேத்பாவ் விரோதி அந்தோலன்’ எனும் அமைப்பை ஏற்படுத்தினார். எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியாவில் தோன்றிய முதல் அமைப்பு இதுவாகும்.

1994-ல் திஹார் சிறைவாசிகளுக்கு ஆணுறை வழங்கப்படு வதைத் தடை செய்தார் அப்போதைய ஐ.ஜி. கிரண் பேடி. அதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புதான் முதன்முதலில் பிரிவு 377-ஐ நீக்க முதல் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

அதற்கும் முன்பே 1991-ல் ‘லெஸ் தேன் கே’ எனும் தலைப்பில் இந்தியாவில் உள்ள தன்பால் ஈர்ப்பாளர்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை இந்த அமைப்பு வெளியிட்டது. அதுதான், தன்பால் ஈர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வெளியான முதல் அறிக்கை. இந்த அறிக்கை வெளியான அடுத்த சில மாதங்களில் தன் 28 வயதில் சித்தார்த் கவுதம் இறந்துவிட்டார்.

டொமினிக் டி’சோஸா

இந்தியாவில் எய்ட்ஸ் நோய்க்கு எதிராகச் செயலாற்றிய மிக முக்கியமான செயற்பாட்டாளர் இவர். டொமினிக் ஒரு குருதிக் கொடையாளர். வழக்கம் போல அருகிலிருந்த மருத்துவமனையில் ரத்த தானம் செய்துவிட்டு வந்தார்.

dominicjpgright

அது 1989-ம் ஆண்டு. கோவாவின் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ், கட்டாய ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் டொமினிக்கின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவாவிலேயே இவருக்குத்தான் முதன்முதலில் அந்தத் தொற்று தாக்கியிருப்பது பிறகுதான் தெரிந்தது..!

ரத்த தானம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த அடுத்த சில மணி நேரத்தில், அவரைத் தேடி போலீஸ் வந்தது. காரணத்தைக் கூறி, அவரைக் கைது செய்து மருத்துவமனை ஒன்றில், காசநோய்ப் பிரிவில் தனிமைப்படுத்தி வைத்தனர். அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி, 64 நாட்களுக்குப் பிறகு விடுதலையானார். இந்தச் சட்டப் போராட்டத்தின்போது, டொமினிக் தமிழகத்துக்கு வந்து அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்துக் கைகுலுக்கினார்.

அது தொடர்பான ஒளிப்படம் பத்திரிகைகளில் வெளியாகி, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஒரு புதிய சமூக இயக்கத்துக்கு வித்திட்டது. அவருக்காக வாதாடியவர் ஆனந்த் க்ரோவர் எனும் வழக்கறிஞர். இவரால்தான் இன்று எய்ட்ஸ் தாக்குதலுக்கு உள்ளானோர் பல உரிமைகளைப் பெற முடிந்திருக்கிறது.

பின்னாளில் பிரிவு 377-க்கு எதிரான போராட்டத்தில் இவர்தான், முதன்மை வழக்கறிஞராக இருந்தார். பிறகு இவர்கள் இருவரும் இணைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி, மேற்படி கட்டாய ரத்தப் பரிசோதனைச் சட்டம் நாடு முழுவதும் அமலாவதைத் தடுத்து நிறுத்தினர்.

டொமினிக், மருத்துவமனை யிலிருந்து வெளிவந்த பிறகு, இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு நிதியத்தில் (WWF) தான் பார்த்து வந்த பணியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிறகு, எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘பாசிட்டிவ் பீப்பிள்’ எனும் அமைப்பை ஏப்ரல் மாதம் 1992-ல் ஏற்படுத்தினார். அதன் மூலம் பலர் பயனடைந்துள்ளார்கள்.

அந்த அமைப்பை ஏற்படுத்திய அடுத்த ஒரு மாதத்தில் அவர் இறந்துவிட்டார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குநர் ஒனிர் இயக்கிய ‘மை பிரதர்… நிகில்’ எனும் திரைப்படமும், எழுத்தாளர் சித்தார்த் தன்வந்த் சங்வி எழுதிய ‘தி லாஸ்ட் ஃபிளமிங்கோஸ் ஆஃப் பாம்பே’ எனும் நாவலும், சோபன் முல்லர் இயக்கிய ‘டொமினிக்ஸ் ட்ரீம்’ எனும் ஆவணப்படமும் வெளிவந்துள்ளன.

ரியாத் வின்சி வாடியா

1996-ம் ஆண்டு. தன்பாலின ஈர்ப்பு குறித்து, நாட்டில் பரவலான விழிப்புணர்வு இருக்கவில்லை. ஆனால், அப்போதே ‘பாம்கே’ என்ற தலைப்பில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து ஆறு குறும்படங்கள் இணைந்த ஒரு தொகுப்புத் திரைப்படம் வெளியானது. இந்தியாவில் அப்படி ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிய முதல் திரைப்படம் அனேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

riyathjpg

அந்தத் திரைப்படத்தை இயக்கியவர்தான் ரியாத் வின்சி வாடியா. இன்று பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் ராகுல் போஸ், ‘தி பாய்ஃபிரெண்ட்’ எனும் இந்தியாவில் வெளியான முதல் ‘கே’ நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் பி.ராஜ் ராவ் போன்றோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படமே, ராஜ் ராவின் கவிதை ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டது.

ஆண்கள் மட்டுமே ‘ஆக்‌ஷன்’ நாயகர்களாக இருந்துவந்த வேளையில், ‘ஃபியர்லஸ் நாதியா’ என்ற பெயரில், முதன்முதலில் ஒரு பெண்ணை ‘ஆக்‌ஷன்’ நாயகியாகக் கொண்டு வெளியான படம் ‘ஹன்ட்டர்வாலி’ (1935). இந்தப் படத்தை இயக்கியவர்கள் ‘வாடியா மூவிடோன்’ எனும் பிரபலப் படத் தயாரிப்பு நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய வாடியா சகோதரர்களின் வழித்தோன்றல்தான் இந்த ரியாத் வின்சி வாடியா.

அதனால் அவருக்குத் திரைப்படம் மேல் ஆர்வம் இருந்ததில் ஆச்சரியமில்லை. 1993-ல் ‘ஃபியர்லெஸ்’ என்ற பெயரில் நடிகை ‘ஃபியர்லெஸ் நாதியா’ குறித்து ஆவணப்படம் ஒன்றை இயக்கினார். அது பல சர்வதேச விருதுகளை வென்றது.

தன்னைத் தன்பாலின ஈர்ப்பாளராக வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட வாடியாவுக்கு 1995-ல் எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. வசதி இருந்தும் அந்த நோய்க்கு அவர் மருத்துவம் பார்த்துக்கொள்ள வில்லை. காரணம், அப்போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் மேல் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. அதை எதிர்க்கும் விதமாகவே அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்தார்.

ராஜ் ராவின் நாவலை அடிப்படையாக வைத்து ‘நேக்கட் ரெயின்’ எனும் முழு நீள ‘கே’ திரைப்படத்தை இயக்கி வந்த வேளையில், வயிற்றுக் காசநோய் காரணமாக அவர் 2003 நவம்பர் 30-ம் தேதி இறந்தார். அந்தப் படம் முடிக்கப்படவேயில்லை. அவர் இறந்த பிறகு அவரது நினைவாக, அறிமுகத் திரைப்பட இயக்குநர்களுக்கான ‘ரியாத் வாடியா’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

உலகில் முதன்முதலில் இரண்டு ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்களிடம்தான் எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. இன்று அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ரத்தப் பரிசோதனை, ரத்த தானம் ஆகியவற்றில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘தேசிய ரத்த மாற்று கவுன்சில்’ ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ரத்த தானம் செய்வதைத் தடை செய்திருக்கிறது. இனி, இதை எதிர்த்து எவ்வளவு காலம் போராட வேண்டுமோ..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்