உஷாராக உள்ளதா உணவுக்குழாய்?

By டி. கார்த்திக்

உங்களுக்குச் சாப்பிட்ட சில நேரத்திலேயே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? எதுக்களிப்புத் தொந்தரவு இருக்கிறதா? இந்தத் தொந்தரவுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். அலட்சியம் தொடர்ந்தால் ‘ஜெர்ட்’ (GERD - Gastroesophageal reflux disease) என்ற நோய் உங்களுக்கு வந்துவிடலாம். அதென்ன ‘ஜெர்ட்’ நோய்? 

உணவுக் குழாயில் வரக்கூடிய பொதுவான பிரச்சினைதான் இது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்குத் திரும்பி வருவதைத்தான்  ‘ரிஃப்ளக்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ‘ஜெர்ட்’ எனப்படும் இந்த நோயைப் பேச்சு வழக்கில் ‘எதுக்களிப்பு நோய்’, ‘நெஞ்செரிவு நோய்’ என்று அழைப்பதுண்டு. மனித உடலில் இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் ‘சுருக்குத் தசை’ இருக்கிறது. இதை ‘ஸ்ஃபின்க்டர்’ (Sphincter) என்று அழைப்பார்கள். இந்தச் சுருக்குத் தசை எப்போதும் மூடியே இருக்கும். இது ஒரு வழிப் பாதையைப் போன்றது.

நாம் உண்ணும் சாப்பாடு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்லும். சாப்பாட்டை இரைப்பைக்குச் செல்ல மட்டும் சுருக்குத்தசை அனுமதிக்கும். இரைப்பைக்குள் உணவு சென்றுவிட்டால், திரும்பவும் வெளியே வரவிடாது. இரைப்பையில் உள்ள அமிலம் எக்காரணம் கொண்டும் உணவுக் குழாயைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இயற்கையே செய்த அற்புதமான அம்சம் இது.

ஆனால், மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களால் இந்தச் சுருக்குத் தசை பலவீனமடையவும் செய்யலாம். அப்படிப் பலவீனமடைந்தால், எப்போதும் மூடியிருக்கும் சுருக்குத்தசை திறந்தே இருக்கும். ஒரு வழிப்பாதை என்பது இரு வழிப் பாதை ஆகிவிடும். விளைவு, இரைப்பைக்குச் சென்ற சாப்பிட்ட உணவு, இரைப்பையில் இருந்து உணவுக் குழாயிக்குத் திரும்பி வரத் தொடங்கும். இதற்குப் பெயர்தான்  ‘ரிஃப்ளக்ஸ்’. இரைப்பையில் இருக்கும் அமிலம், உணவுக் குழாயிக்கு வந்தால், ‘ஹார்ட் பர்ன்’ எனப்படும் நெஞ்சு எரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

வயிறுமுட்ட சாப்பிட வேண்டாம்!

இந்தப் பிரச்சினை குறித்து குடல் நோய் சிறப்பு மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் குடல் நோய் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநருமான எஸ்.எம். சந்திரமோகன் விளக்கினார். “இது ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உடலமைப்பு (structural). இன்னொன்று பழக்கவழக்க நடைமுறை (functional). மனிதர்கள் உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இந்த நோய் ஏற்பட முக்கியக் காரணம்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். மற்றவர்களுக்கும் இந்த நோய் வர வாழ்க்கை முறைதான் காரணம். கொழுப்பு உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, காபி, சாக்லெட், மசாலா, வறுத்த உணவு வகைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால் இந்த நோய் வரலாம். இவை தவிர புகைப் பழக்கம், மதுப் பழக்கமும் ஒரு காரணம்.

வயிறு முட்டச் சாப்பிட்டாலும் ‘ரிஃப்ளக்ஸ்’ வர வாய்ப்பு உண்டு. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டு உடனே படுத்துவிட்டாலும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். பொதுவாக, நடக்கும்போதோ நிற்கும்போதோ இரைப்பை கீழே இருக்கும். உணவுக் குழாய் மேலே இருக்கும். ஆனால், படுக்கும்போது உணவுக் குழாயும் இரைப்பையும் சம நிலைக்கு வந்துவிடும். அந்த நேரத்தில் வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தால், திறந்துவிட்ட குழாயைப் போல சாப்பிட்ட உணவு மேலே வர ஆரம்பித்துவிடும்” என்கிறார்.

மாற்றமே சிறந்த சிகிச்சை

உங்களுக்கு ‘ரிஃப்ளக்ஸ்’ தொந்தரவு இருந்தால், வாழ்க்கை நடைமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்வதுதான் நல்லது. வெறும் மருந்து மட்டுமே இந்த நோயைக் குணப்படுத்திவிடாது என்று எச்சரிக்கிறார் சந்திரமோகன். எந்த வகையில் வாழ்க்கை முறை மாற்றம் செய்ய வேண்டும்?

“இந்தப் பாதிப்பை அறிந்துகொள்ள எண்டோஸ்கோப்பி பரிசோதனை போதுமானது. உணவுக் குழாயை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை எண்டோஸ்கோப்பியே சொல்லிவிடும். ரிஃப்ளக்ஸை 50 சதவீதம்தான் மருந்துகள் மூலம் சரிசெய்ய முடியும். எஞ்சிய 50 சதவீதம் வாழ்க்கை முறை மாற்றமே சிகிச்சை. மருந்தை நம்பி மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் பாதி அறிகுறிகளைச் சரி செய்துவிடலாம். இதுதான் இதில் முக்கியம்” என்கிறார் அவர்.

தடுப்பது எப்படி?

இரைப்பையில் அமிலத்தைக் குறைப்பது, ஒரு வழிப் பாதையை ஒழுங்குபடுத்துவது, அமிலத்தைச் சமநிலைப்படுத்துவது, ‘முகோஸா’ படலத்தைப் பாதுகாப்பதற்கு போன்றவற்றுக்கு மருந்துகள் உள்ளன. மருந்தை மட்டும் உட்கொண்டுவிட்டு வாழ்க்கை முறையை மாற்றாமல் இருந்தால், பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் கதைதான் நடக்கும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, காரம் அதிகம் இல்லாமலும் மசாலா கலக்காமலும் சாப்பிட வேண்டும். வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது.

மது, புகைப் பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.  அசிடிட்டியை உண்டாக்கக்கூடிய சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடாமல் இருப்பது எல்லாமே வாழ்க்கை முறை மாற்றம்தான்” என்கிறார் சந்திரமோகன்.

பொதுவாக, எல்லோருக்கும் இரவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சாப்பிட்ட சற்று நேரத்தில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது அல்லது உறங்கச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கமும் இந்த நோய் வருவதற்கான வாசலைத் திறந்துவிடும்.

 “உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உண்ணுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இரவு உணவில் மசாலா கூடவே கூடாது. இரவு உணவைக் குறைவாகவே சாப்பிட வேண்டும். குறைவாக என்றால், இன்னொரு இட்லியைச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும்போது நிறுத்திவிடுவது நல்லது” என்கிறார் சந்திரமோகன்.

ushaarjpg

குழப்பம் வேண்டாம்!

‘நெஞ்சு எரிச்சல்’ எனப்படும் இந்த நோயால் நடு மார்பில் எரிச்சல் வரும். இதில் பலரும் நெஞ்சு எரிச்சலையும் நெஞ்சு வலியையும் குழப்பிக் கொள்வார்கள். நெஞ்சு எரிச்சலை நெஞ்சு வலி என்று நினைத்து மருத்துவரை அணுகினால் பிரச்சினை இல்லை. ஆனால், நெஞ்சு வலியை நெஞ்சு எரிச்சல் என்று நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருந்துவிட்டால் தவறாகிவிடும்.

நெஞ்சு எரிச்சலால் உயிருக்குப் பாதிப்பு வந்துவிடாது. ஆனால், நெஞ்சு வலி என்றால், உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலருக்கு மாரடைப்பு வரும்போது நெஞ்சு எரிச்சலையும் ஒரு அறிகுறியாகக் காட்டலாம். இதயத்தில் வெவ்வேறு பாகங்களும் வால்வுகளும் உள்ளன. இதில் சில பகுதிகளில் வரக்கூடிய மாரடைப்பு நெஞ்சு எரிச்சலுடன் கூடிய அறிகுறியுடன் வரலாம். அதனால், குழப்பம் ஏற்படலாம். நெஞ்சு எரிச்சலோ நெஞ்சு வலியோ எதுவாக இருந்தாலும் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்