வாயு ஏற்படுவது ஏன்?

By கு.கணேசன்

வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.

வாயுத் தொல்லை எது?

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டி ருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

வாயு எப்படி வருகிறது?

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

கெட்ட வாடை ஏன்?

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.

சத்தம் ஏன் கேட்கிறது?

பலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன? பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.

வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?

நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.

அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.

என்ன சிகிச்சை?

வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.

வாயுக்கு எதிரிகள்!

மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

வாயுவைக் கட்டுப்படுத்த

எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

39 mins ago

ஜோதிடம்

42 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்