இனிப்பு தேசம் 08: எந்தக் கிழமையும் வேண்டாம் கிழங்கு!

By கு.சிவராமன்

ணவை வெற்றிகொள்ள இயலாதவர்களால், நீரிழிவு நோயை வெற்றிகொள்வது கடினம். முதல் பத்து ஓவரில் ‘தேமே’ என நகர்ந்து விட்டு, கடைசி பத்து ஓவரில் விளாசித் தள்ளி ஜெயிக்க சர்க்கரை நோய், ஐ.பி.எல். போட்டி அல்ல.

ஒவ்வொரு நாளும் ஓட வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெடல் வேண்டும். என்ன ஒரு வேதனையான விஷயம் என்றால், எல்லா கரிசனங்களையும் மீறி, எப்படியாவது நோய் வலைக்குள் நம்மைத்தள்ளும் புதிய உணவு வகைகள் ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றிப் புதுசு புதுசாக உருவாகி நம்மை அவற்றில் அடிமைப்படுத்துவதுதான்!

பணம் செய்யும் கிழங்கு

‘ஃபிங்கர் ஃப்ரைஸ்!’ உலகெங்கும் உருளைக்கிழங்கை நீளவாக்கில் செவ்வகத்துண்டுகளாக வெட்டி, பொரித்து விற்பனை செய்யப்படும் ஒரு பில்லியன் டாலர் நொறுக்குத்தீனி. ‘சிப்ஸ்’ அதன் ஒண்ணுவிட்ட தம்பி. உலகில் கணிசமானோரின் உடல் எடையைக் கூட்டி, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்களில் தள்ளியதில் இந்த இரண்டு வஸ்துக்களுக்கு பெரும்பங்கு உண்டு. இப்படி இந்த ‘ஃப்ரைஸை’ கொடுக்க, அந்த நிறுவனம் செய்யும் எந்த அட்டூழியமும் எவரும் அறிந்திராத ஒன்று.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் உருளை சிப்ஸ் கம்பெனிகளுக்குத் தர என்றே பிரத்யேகமாய், நீள வாக்கில் பருத்து வளரும் இயல்புடைய வீரிய ஒட்டுரக உருளை உருவாக்கப்பட்டது. நெடுங்காலம் முன்பு நம் பசியாற்ற, தென் அமெரிக்காவில் உள்ள பெரூ நாட்டில் உருவான உருளைக்கும், இந்த கம்பெனி படைக்கும் இப்போதைய உருளைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நீள நீள துண்டுகளால், பொக்கே போல் அவை அலங்கரிக்க, மற்ற நாடுகளில் ’ரஸ்ஸெட் பர்பேங்க் அண்ட் மாரிஸ் பைப்பர்’ (Russet Burbank & Maris Piper) வகை உருளைதான் வேண்டுமாம்.

இந்தியாவில் நல்ல பருத்த உருளைக்கென ஜோதி, சந்திரமுகி, அட்லாண்டா போன்ற வீரிய பருத்த ரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகைகளெல்லாம் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் படைத்தவை. தான் விரும்பும் பெரிய வடிவில் அவை விளைந்து தள்ள, பயன்படுத்தப்படும் உர ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏராளம். இவற்றின் கூறுகள், விளை மண்ணிலும், விளைவிப்பவன் உடலிலும் ஏற்படுத்தும், நலவாழ்வின் முறிவில் ஏற்படும் ஒலிதான், நாம் அதை ‘மொறுக் மொறுக்’ என ருசித்து நொறுக்கும் போது கேட்கப்படும் ஒலி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மூன்றாமிடம் தந்த ‘குண்டு!’

இந்தக் குப்பை உணவு வகைகளை, இளம்வயதில் ஏராளமாய்ச் சாப்பிட்டுத்தான் இந்திய தேசத்தை இனிப்பு தேசமாக்குகின்றோம். ஆம்! இந்த சிப்ஸ் வகையறாக்கள், அதை தொட்டுத்திங்கப் பயன்படுத்தும், சர்க்கரையும், அதிக உப்பும், பல ரசாயனக் கலவையும் சேர்ந்த தக்காளி சாஸ் என இவையெல்லாம்தான் இனிப்பு நோயை நம்முள் நங்கூரமிட அடித்தளம் அமைப்பவை. இவை குழந்தைகளின் எதிர்ப்பாற்றலைத் துரத்திவிடும்.

நிறுவனங்கள் தயாரிக்கும் சிப்ஸுகள் மட்டும்தான் ஆகாதா என்றால் இல்லை. நாம், வீட்டில் உருளையைத் துண்டுகளாகப் பொரியல் செய்து சாம்பாருக்குத் துணைக்கறியாகச் சாப்பிடுவதும்கூட சர்க்கரை நோயருக்குச் சிக்கலைத்தான் தரும். உருளை, இனிப்பு நோயினருக்கு முற்றிலும் அவசியமில்லாத ‘ஹைகிளைசிமிக்’ பொருள். தடித்த தோலும், குறைவான சர்க்கரையும் கொண்ட சிறிய உருளையை, உலகெங்கும், என்றோ நாம் தொலைத்துவிட்டோம். இப்போது வரும் உருளைக்கிழங்கு அதை சிப்ஸாக்கி, பொரிக்கையில் சிவந்த நிறம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, செயற்கையாக, அதன் ‘ஜீனோடைப்’பில் மாற்றம் செய்யப்படுகிறது. வீரிய ஒட்டுரகமாக படைக்கப்பட்ட இந்த ரசாயன குண்டு உருளையை உற்பத்தி செய்வதில், நாம்தான் உலகில் மூன்றாவது இடம்.

உருளை மட்டுமல்ல, எந்தக் கிழங்கும் இனிப்பு நோய்க்கு அவ்வளவாய் நல்லதல்ல. எப்போதுமே, பசிக்குச் சாப்பிடாமல், ‘வயிறார’ சாப்பிட்டே பழகிப்போனது, நாம் சீக்கிரமே இனிப்பு தேசத்தில் விசா வாங்கியதற்கு இன்னொரு காரணம். பீச்சில் விளையாடும் குழந்தைகள் மணற்குன்றுகள் குவிப்பது போல, இலையில் வெள்ளரிசிச் சோற்றை, குவியலாய்க் குவித்து, அதனுள் முட்டையையும் லெக் பீஸையும் முழங்கை வரை விட்டுத் தேடும், படையல் உணவு நீரிழிவு நோயருக்கு நிச்சயம் ஆகாது.

தட்டின் அளவைக் குறைங்க..!

‘அப்படித்தானே, ஆதி தமிழன் சாப்பிட்டான்?’, என வாதம் பண்ணுபவர்கள், ஆதி தமிழன் போல சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கத்துக்கு மெட்ரோவில் சடாரெனப் போகாமல், தினமும் விரைவாய் நடந்து அல்லது ஓடிப் போகவேண்டும். சர்க்கரை நோயாளி சோற்றின் அளவைக் குறைத்தே ஆக வேண்டும். இனி மாற்றி யோசித்து தட்டில் பரிமாற வேண்டும். ஆம்! இனி காய்கறி, மீன் துண்டுக்குத் தொட்டுக்க, சிறு குவளையில் அரிசிச் சோறு என மாற்றிப் பரிமாறலாம்.

கைகளால் வளைத்து உருட்டிக் கவளமாய் சாப்பிடும் பழக்கத்துக்குச் சிறிது ஓய்வு கொடுத்து, கொஞ்ச நாள் சிறு தேக்கரண்டியில் சாப்பிடுவதும்கூட அரிசிச் சாப்பாட்டு அளவைக் குறைக்கும் ஒரு சிறிய உத்தி. சாப்பிடும் தட்டேகூட இனி பொருட்காட்சி அப்பளம்போல் அளவில் பெரிதாய் இராமல், சிறு விட்டமுள்ள சிறிய டிபன் தட்டைப் பயன்படுத்துவது, ஆரப்பறக்கும் மனசை ஏமாற்றி உணவின் அளவைக் குறைக்க ஒரு உத்தி.

மதிய உணவில் வெள்ளைச் சோறுக்குப் பதில், கருப்பு அரிசி, சிகப்பு அரிசி பயன்படுத்துவதும் காய்கறிகளை கீரையைச் சேர்த்துக் கலந்த சோறாக கூட்டாஞ்சோறாகச் சாப்பிடுவதும்கூட ‘கிளைசிமிக் இண்டெக்ஸை’ குறைக்க உதவும் எளிய வழி.

(தொடரும்)
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

28 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்