பார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்ணாடி

By ஜெ.ஞானசேகர்

வெப்பமண்டல நாடான நமது நாட்டில், அடிக்கடி வெளியில் செல்பவர்கள் அவதிப்படுவது கண் எரிச்சலால். ஆண்டின் பெரும்பாலான நேரம் வெயில் தகிக்க, கண் எரிச்சலை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழும். இதற்குக் கைகொடுப்பவை சன் கிளாஸ் அல்லது கூலிங் கிளாஸ் என்று அறியப்படும் குளிர் கண்ணாடிகள்.

பலருக்கும் கண்ணாடி தவிர்க்க முடியாததாகிவிட்டது. பார்வைக் குறைபாடு இல்லாதவர்கள்கூட ஸ்டைலுக்காகவும் குளிர்ச்சிக்காகவும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர்

பறிபோகும்

வெயிலில் இருந்து மட்டுமில்லாமல், தூசியிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் பெரிய சவால்தான். இதற்காகத் தரமில்லாத கண்ணாடிகளைப் பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைப் பறிகொடுத்துக் கொண்டிருப்பதைப் பலரும் உணர்வதில்லை.

பாலிதீன் பைகளில் சுற்றி, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ணக் கண்ணாடி விற்கும் கடையை, ஒவ்வொரு முக்கியச் சாலையோரத்திலும் ஒன்றையாவது பார்க்க முடியும். அங்கே குறைந்த விலைக்குப் பலரும் கண்ணாடிகளை வாங்கி விடுகிறோம். அதன் ஆயுள் சில மாதங்கள்தான் என்றாலும், விதவிதமான கண்ணாடிகளை அணிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வம்.

இந்தக் கண்ணாடிகளில் ஏதோ ஒரு தயாரிப்புக் குறைபாடு இருக்கும். பெரும்பாலான நேரம் அது கண்ணாடியாகவே இருக்காது, பிளாஸ்டிக் அல்லது ஒரு வகை ஃபைபராக இருக்கும். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. பிரபல கண்ணாடி நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, பெரும்பாலான கடைகளில் இந்தக் குறைந்த விலை கண்ணாடிகள்தான் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

"தரமற்ற கண்ணாடிகளை வாங்கி அணிவது கண்ணாடி அணிவதன் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. தொடர்ந்து தரமற்ற கண்ணாடிகளைப் பயன்படுத்தினால் பார்வைக் குறைபாடு நிச்சயம் ஏற்படலாம். தரமான கண்ணாடிகளிலும் கீறல், சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டால் உடனடியாகக் கண்ணாடியை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், கூர்ந்து பார்த்துக் கண்ணுக்கு அழுத்தம் தந்து பார்வைக் குறைபாடு ஏற்பட நேரிடலாம்.

பார்வைக் குறைபாட்டுக்காகக் கண்ணாடி அணிந்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாகும். இதைத் தவிர்க்கக் கண்ணாடியை உறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்" என்கிறார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் பி. தியாகராஜன்.

அதேபோல, மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமல் யாரும் கண்ணாடி அணியக் கூடாது. பெரும்பாலோர் பாதிப்பு மோசமான பிறகே, கண் மருத்துவரிடம் செல்கின்றனர். கண் பாதுகாப்பைக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும்.

எழுத்துகளைக் குழந்தை நன்கு வாசிக்க ஆரம்பிக்கும்போது, கண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அனைவரும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல நிலையில் குழந்தை பிறந்தாலும் கண் பரிசோதனை அவசியம். அதேபோல, தினமும் கண்ணுக்கு 8 மணி நேர ஓய்வு கொடுப்பதும் மிக அவசியம்.

ஏன் வேண்டாம்?

சூரிய வெளிச்சத்தில் இருந்தும், கண் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கத்தான் குளிர் கண்ணாடிகளை அணிவதாக நினைக்கிறோம். ஆனால், தரமான குளிர் கண்ணாடிகள் செய்யும் வேலையே வேறு. அவை, புறஊதா எனப்படும் யு.வி. கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. கடுமையான வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைத் தடுக்கின்றன.

பார்வையைப் பாதிக்கும் சில ஒளி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பணிகள் எதையும் குறைந்த விலையில் வாங்கும் கண்ணாடிகள் செய்வதில்லை. மேலும், பாதிப்புகளை மோசமாக்கவே செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்