மூலிகையே மருந்து 03: குளிர்ச்சி தரும் கொடிப்பசலை!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

வி

ரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தைப் பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அந்த வகையில் உதட்டுக்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை! கூடவே குளிர்ச்சிக்குப் பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, தற்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.

கனிந்த கொடிப்பசலைப் பழங்களை விரல் நுனியில் சிதைத்து, ‘லிப்-ஸ்டிக்’ போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தைக் கொடுக்கும். இப்போதிருக்கும் லிப்-ஸ்டிக் வகையறாக்களுக்குப் பசலைப் பழங்களே முன்னோடி எனலாம். இதன் பழங்களை வைத்து உதட்டில் சாயம் பூசி மகிழ்ந்த சிறுவயது கிராமத்து நினைவுகள் பலருக்கும் பசுமை மாறாக் கவிதை!

பெயர்க் காரணம்:

கொடிப்பசலையின் தாவரவியல் பெயர் Basella alba. இதில் பச்சை, சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. சிவந்த தண்டுடைய வகைக்கான தாவரவியல் பெயர் Basella rubra. Basellaceae குடும்பத்தைச் சார்ந்தது. கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என்பன கொடிப்பசலைக்கு இருக்கும் பல்வேறு பெயர்கள்.

மருந்தாக:

பசலையின் நிறத்துக்கு அதிலுள்ள ‘ஆந்தோசயனின்கள்’ காரணமாகின்றன. உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்துக்கு இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுண்ணச்சத்து, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, ஆக்சாலிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு வகைகளில் சேர்த்து வர, ஊட்டத்தைப் பரிசளிக்கும். இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் ரத்த விருத்திக்கு உதவும். குறைந்த கலோரிகளுடன் நிறைவான நுண் ஊட்டங்களை வழங்குதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குப் பசலை சிறந்த ஆயுதம்.

28chnvk_kodi2.jpgவீட்டு மருத்துவம்:

குளிர்ச்சித் தன்மையுடையதால், மழைக் காலத்தில் பசலைக் கீரையின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. கார்காலம் அல்லாத மற்ற காலங்களில், இதன் இலைகளைப் பருப்பு சேர்த்துக் கடைந்து, மிளகு, சீரகம் சேர்த்து ருசித்துச் சாப்பிடலாம். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு இருக்கிறது.

பசலைக் கீரையைப் புளி நீக்கிச் சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். ஆண்மையை அதிகரிப்பதற்கான இயற்கை ஊட்டப்பொருள் இது. ஆய்வுகளின் முடிவில் ‘டெஸ்டோஸ்டீரோன்’ ஹார்மோனின் அளவை பசலை அதிகரிப்பதாகத் (Basal Testosterone) தெரியவந்திருகிறது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து அரிசி களைந்த நீரில் கலந்து பருகுவது ஒடிசா மக்களின் வழக்கம்.

ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலையை நசுக்கிக் கட்ட விரைவில் பலன் கிடைக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் தன்மையைக்கொண்டிருப்பதால், இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து உட்கொள்ளலாம்.

வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு, இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். கசகசாவோடு பசலை இலைகள், அதன் தண்டுகளைச் சேர்த்து அரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.

உணவாக:

இதன் இலைகளையும் தண்டுகளையும் தண்ணீரிலிட்டுத் துழாவ, நீருக்குக் குழகுழப்புத் தன்மை கிடைக்கும். குழகுழப்புத் தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் சூப் பவுடருக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரைக் கொண்டு சூப் வகைகளைத் தயாரிக்கலாம்.

28chnvk_kodi4.jpgright

மிளகு, பூண்டு, சில காய்களைக் கொண்டு சமைக்கப்படும் சத்துமிக்க ‘உதான்’ எனப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய சூப் வகையில் பசலை சேர்க்கப்படுகிறது. பலாக்கொட்டையோடு பசலையைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் குழம்பு வகை, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பிரபலம்.

பெரும்பாலான வீட்டு வேலிகளிலும் வீட்டுக்கு முன்பும் கொடியேறிக்கொண்டிருக்கும் ‘மணி-பிளாண்ட்’ எனும் அழகுத் தாவரத்துக்குப் பதிலாக, பசலைக்கொடிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அழகான - பசுமையான இந்தக் கொடி, கண்களுக்கு விருந்து படைப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் ஊட்டம் கொடுக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்