உங்கள் டாக்டர் எப்படி?

By டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா

 

மு

ன்பொரு காலத்தில் கிராமங்களில் நாட்டு வைத்தியர் என்று ஒருவர் இருந்தார். சாதாரண மனிதர். கிராமத்தினருடன் இயல்பாகப் பழகுவார். சுகவீனங்களுக்கு மருந்து கொடுப்பார். கொடுத்த பணத்தை வாங்கிக்கொள்வார். வழியில் கண்டால், “என்ன? தலைவலி எப்படியிருக்கிறது” என்று கரிசனையுடன் விசாரிப்பார். நல்லது கெட்டதற்கு வீட்டுக்கு வந்துபோவார்.

பின் ஆங்கில மருத்துவர்கள் வந்தார்கள். கோட்டு சூட்டு போட்டிருந்தார்கள். கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டி இருந்தார்கள். அவர்களில் குடும்ப டாக்டர்களும் இருந்தார்கள். குடும்ப நண்பர்கள்போலப் பழகினார்கள். எல்லா நோய்களுக்கும் மருந்து கொடுத்தார்கள். அறிவுரைகளையும் வாரி வழங்கினார்கள். இப்போது இவர்களும் அருகிவரும் ஒரு இனமாகிவிட்டார்கள். பழைய தமிழ்த் திரைப்படங்களில் மட்டும்தான் இவர்களை இனிமேல் பார்க்க முடியும்.

இப்போதெல்லாம் ஒரு நோய்க்கு ஒரு சிறப்பு மருத்துவர் என்ற நிலை வந்துவிட்டது. தலைவலிக்கு ஒருவர், மூட்டுவலிக்கு ஒருவர், நுரையீரலுக்கு ஒருவர், கல்லீரலுக்கு ஒருவர் என்று பலவிதமான வல்லுநர்கள் வந்துவிட்டார்கள். ஆனால், சாதாரண உடல் உபாதைகளுக்கு பொதுநல மருத்துவர் என்று ஒருவர் இருந்த காலம் இன்னும் மலையேறிவிடவில்லை. பொதுநல மருத்துவர்களை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே கூறவேண்டும்.

நீண்ட காலமாக ஒரே மருத்துவரிடம் போவதில் பல அனுகூலங்கள் உள்ளன. உங்கள் மருத்துவ வரலாறு அவருக்கு அத்துப்படியாக இருக்கும். உங்கள் குடும்ப வரலாற்றையும் (குடும்ப ரகசியங்கள் உட்பட) அவர் அறிந்து வைத்திருப்பார். ஆனால், அவருக்கு இருக்கும் நேரம் குறைவு. உங்களைப் பார்த்துப் பேசவும் உடலைச் சோதிக்கவும் பத்து பதினைந்து நிமிடங்கள் கிடைத்தால், அது உங்கள் அதிர்ஷ்டம். சரி, விஷயத்துக்கு வருவோம்.

மக்கள் எதிர்பார்ப்பு

ஒரு மருத்துவரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன? இது குறித்து நெடுங்காலமாகவே பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதில் ஒரு ஆய்வை மட்டும் பார்ப்போம். பொதுநல மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை, அவர்கள் கூறியபடி நோயாளிகள் உட்கொள்வதில்லை என்பது நெடுங்காலமாகவே மருத்துவர்கள் அறிந்த ஒன்றுதான். மருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள் அல்லது ஒழுங்காக எடுப்பது இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை நிவர்த்தி செய்ய மருத்துவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. மருந்தைப் பற்றி விளக்கமளிப்பது, அதை எடுக்க வேண்டிய விவரங்களை எழுதிக் கொடுப்பது ஆகியவை இவற்றுள் சில. ஆனால் இம்மாதிரியான நடைமுறைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கவில்லை. எனவே, இதை உளவியல் அடிப்படையில் அணுக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, நோயாளிகளைப் பார்க்கும்போது நோயுடன் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி மருத்துவர்கள் பேச வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஓர் ஆசிரியரிடம் மருத்துவர் பேசும்போது “உங்கள் பள்ளி நிர்வாகம் எப்படி நடக்கிறது?” என்பதுபோல் நோயாளியின் தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி பேச ஊக்குவிக்கப்பட்டது. அதிகம் வளர்ப்பானேன்? இதன் பிறகு நோயாளிகள் முன்னைவிட முறைப்படி மருத்தை உட்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்த ஆய்வு உணர்த்துவது என்ன? மருத்துவர் நோயாளியின் மேல் தனிப்பட்ட அக்கறை காட்டும்போது அவர் கூறுவதை நோயாளி மதித்து நடக்கிறார். இந்த அக்கறை என்பது நோயாளியின் மேல் காட்டும் பரிவோ இரக்கமோ அல்ல, வர்த்தகத் துறையில் வாடிக்கையாளரின் பெயரை நாட்குறிப்பில் குறித்துக்கொண்டு அவரை அடுத்த முறை காணும்போது, “உங்கள் புதிய ஆடி கார் எப்படி இருக்கிறது?” என்று கேட்கும் போலி சினேகிதமும் அல்ல. உண்மையான கரிசனையோடு கேட்கப்படும் ஒரு கேள்வி. இதை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.

அக்கறையான ஒரு கேள்வி

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பல மாதங்களாக நெஞ்சு வலியோடு மருத்துவரைப் பார்த்து வருகிறார். எத்தனையோ எக்ஸ்ரே, இ.சி.ஜி., ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தாயிற்று. எந்த நோயும் இருப்பதாகத் தெரியவில்லை. பல மருந்துகளை உட்கொள்கிறார், நெஞ்சு வலி மட்டும் குறைந்தபாடில்லை. ஆனால், அவர் விடாப்பிடியாக தொடர்ந்து மருத்துவரைப் பார்க்க வருகிறார். ஒரு நாள் பழைய மருத்துவர் இல்லை. அவருடைய இடத்தில் ஒரு புதிய மருத்துவர் வந்திருக்கிறார். அந்தப் பெண் பழைய கதையை மீண்டும் ஒரு முறை பாடுகிறார். மருத்துவர் அவரது பழைய மருத்துவக் குறிப்புகளைப் வாசித்துவிட்டு, உங்களுக்கு இப்போது எத்தனை வயது?” என்று கேட்கிறார், ‘இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையா’ என்ற தோரணையில், “ஐம்பத்தி நான்கு” என்கிறார் அந்த பெண். மருத்துவர் சற்று யோசித்து விட்டு, “உங்கள் தாயார் இறக்கும்போது அவருக்கும் ஐம்பத்தி நான்கு வயதுதான், இல்லையா?” என்று கேட்கிறார்.

இதைக் கேட்டவுடன் அந்தப் பெண் விக்கி விக்கி அழுக ஆரம்பித்தார். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. “எனக்கு ஏதும் நடந்தால் என் பெண்ணின் கதி என்ன என்று எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. நான் பட்ட கஷ்டங்களை அவள் படக்கூடாது” என்று கூறுகிறாள். டாக்டர் கேட்ட கேள்வி அவர் மனதைத் தொட்டுவிட்டது. அவ்வளவுதான், அதற்குப்பின் அவர் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்கவில்லை.

சிறந்த மருந்து எது?

இதுதான் மருத்துவர் காட்டும் அக்கறை; நோயாளின் வரலாற்றை அறிந்து அவர் மீது காட்டும் கரிசனை; இரு உள்ளங்களுக்கு இடையே நடைபெறும் உணர்ச்சிப் பரிமாற்றம்; மருத்துவருக்கும் அவர் பார்க்கும் நோயாளிக்கும் இடையே உள்ள அந்தரங்க உறவு. இந்த அக்கறையைத்தான் மருத்துவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு பற்றி மருத்துவ மாணவர்களுக்கு நிறையவே போதிக்கப்படுகிறது. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளிலேயே மிக முக்கியமான மருந்து ‘மருத்துவர்தான்’ என்றும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால், பல மருத்துவர்கள் இதை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

சரி. இதை மருத்துவர்களிடம் போய்ச் சொல்லுங்கள், ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் கோபத்துடன் மனதுக்குள் நினைத்துக்கொள்வதை உணர முடிகிறது. மருத்துவ ஏடு ஒன்றுக்கு எழுத வேண்டிய கட்டுரை இந்தப் பகுதிக்குத் தவறாக வந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? இல்லை.

27CHVAN_Thambiraja.TAMUyir.IMGஇன்று மருத்துவம் வர்த்தகமயமாகி வரும் நிலையில் நோயாளி ஒரு வாடிக்கையாளராக மாறிவிட்டார் என்பதுதான் அவலம். வர்த்தகத் துறையில் ஒரு வழக்குமொழி உண்டு: ‘வாடிக்கையாளர் கூற்று எப்போதும் சரியானதே’ (The customer is always right).

 

எனவே, நோயாளி என்ற வாடிக்கையாளர் தம் உரிமையை நிலைநாட்ட நினைப்பதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டுவர நினைப்பதிலும் தவறில்லை!

 

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்