இடம் பொருள் மனிதர் விலங்கு: போர்க்களத்தில் ஓர் அமைதிப் புறா!

By மருதன்

ந்தப் புறாவுக்குத் துப்பாக்கி என்றால் பிடிக்காது. ஒவ்வொருமுறை துப்பாக்கி வெடிக்கும்போதும் தன்னுடைய உருண்ட கண்களை அது மூடிக்கொள்ளும். அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்கும். அதன் அழகிய கருத்த உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். ஆனால், துப்பாக்கிகளுடன்தான் அது வாழ வேண்டியிருந்தது. காரணம் அது ஒரு ராணுவப் புறா. அமெரிக்காவுக்குச் சொந்தமானது.

ராணுவம் என்றால் என்னவென்று அந்தப் புறாவுக்குத் தெரியும். பெரிய பெரிய பூட்ஸ் அணிந்த வீரர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் கொண்டு சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். எதற்கு? அது தெரியாது. இவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர்? அதுவும் தெரியாது. எல்லா வீரர்களும் பூட்ஸ் அணிந்திருக்கிறார்கள். எல்லாரும் ஆயுதம் வைத்திருக்கிறார்கள். எல்லாரும் சுடுகிறார்கள். எல்லாரும் கொல்கிறார்கள். சரி, இவர்கள் எதற்காக உயிரைக் கொடுத்து இப்படிச் சண்டைபோட்டுக்கொள்கிறார்கள்? மற்ற புறாக்களிடம் கேட்டுப் பார்த்தது. அவர்களுக்கும் தெரியவில்லை. நமக்கென்ன, கொடுத்த வேலையைச் செய்துவிட்டுப் பறந்துசெல்வோம் என்று பதில் வந்தது. உண்மைதான், ஒரு புறாவால் வேறு என்னதான் செய்ய முடியும்?

புறாக்களுக்கான வேலை என்னவோ சுலபமானதுதான். ஏதோ காகிதத்தில் கிறுக்கி காலில் கட்டிவிட்டு, போ என்று விரட்டுவார்கள். எங்கிருந்து கிளம்பினோமோ அங்கே சென்று சேர வேண்டும். அதுதான் வேலை. சிக்கல் என்னவென்றால் இவர்கள் எங்கெல்லாம் போகிறார்கள் என்று கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். காடு, மேடு, மலை என்று எல்லா இடங்களுக்கும் கூடவே போக வேண்டும். எங்கே போனாலும், எத்தனை நாள்கள் ஆனாலும் வந்த வழியை மறக்கக் கூடாது. ஆரம்பித்த இடத்துக்குச் சரியாக வந்து சேரவேண்டும். காலில் கட்டி அனுப்பிய செய்தியை ஒப்படைத்துவிட்டால் வேலை தீர்ந்தது.

இந்தமுறை வீட்டை விட்டு ரொம்பத் தொலைவு வந்துவிட்டதை அந்தப் புறா உணர்ந்தது. வழி மறக்கவில்லை என்றாலும் இந்தமுறை கொஞ்சம் சவாலான வேலைதான் என்பது புரிந்தது. சரி எப்போது என்னைப் பறக்க அனுமதிப்பார்கள்? யோசனையுடன் வீரர்களைப் பார்த்தது. அவர்கள் பேசிக்கொள்வதையும் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தது. வீரர்கள் பலர் பதற்றமாக இருந்தார்கள். சிலர் மிகவும் கவலையுடன் தவித்துக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு என்ன ஆனது? இவ்வளவு ஆயுதங்கள் இருந்தும் ஏன் இவர்கள் பயப்படுகிறார்கள்?

பிறகுதான் விஷயமே புரிந்தது. இந்த வீரர்கள் எல்லோரும் அமெரிக்கர்கள். ஆனால் இப்போது பிரான்ஸ் என்னும் நாட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கர்களுடைய எதிரி ஜெர்மனி. அந்த ஜெர்மன் வீரர்கள் இப்போது பிரான்ஸில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். ஒரு வழிதான் இருக்கிறது. நாங்கள் இங்கே மாட்டிக்கொண்டிருக்கிறோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று மற்ற அமெரிக்க வீரர்களுக்குச் செய்தி அனுப்ப வேண்டும். அவர்கள் வந்து காப்பாற்றினால்தான் பிழைக்க முடியும்.

பிரச்சினை என்னவென்றால் ஏற்கெனவே ஒரு புறாவிடம் தகவல் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால், அந்தப் புறாவை ஜெர்மானியர்கள் சுட்டுவிட்டார்கள். இன்னொரு புறாவை அனுப்பினார்கள். அதுவும் மாட்டிக்கொண்டது. இப்போது இருப்பது ஒரு புறாதான். திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்கும் கறுப்புப் புறா. என் அருமை செர் அமி, உன்னை நம்பிதான் இங்கே 200 பேர் காத்திருக்கிறோம். நீயாவது எங்களைக் காப்பாற்று! புறாவைப் பிடித்து அதன் காலில் காகிதத்தைக் கட்டி பறக்கவிட்டார்கள்.

படபடவென்று இறக்கையை அடித்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தது அந்தப் புறா. அமெரிக்கர்கள் மட்டுமல்ல இனி எனக்கும் அந்த ஜெர்மானியர்கள் எதிரிதான். என்ன துணிச்சல் இருந்தால் இரண்டு புறாக்களை அவர்கள் சுட்டு வீழ்த்துவார்கள்? மேலும் செர் அமி என்றால் அன்புள்ள நண்பா என்றல்லவா பிரெஞ்சு மொழியில் பொருள்? இதற்காகவாவது அமெரிக்கர்களுக்கு உதவ வேண்டும் அல்லவா?

பறக்கும்போது இன்னொன்றும் தோன்றியது. ஆனால், என்னைப் போன்ற இரு புறாக்கள் கொல்லப்படுவதற்கு இந்த அமெரிக்க வீரர்களும் அல்லவா காரணம்? அவர்களுடைய சண்டையில் எதற்காக எங்களைப் பிடித்து இழுக்க வேண்டும்? எங்களை எதற்கு போர்க்களத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டும்? இந்த வேலை முடிந்த பிறகு மனிதர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிச்சென்றுவிட வேண்டும்.

இப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே முதல் குண்டு புறாவின் மீது பாய்ந்தது. துடித்தபடி தடுமாறி கீழே விழ ஆரம்பித்தது புறா. அப்படி விழும்போது இரண்டு விஷயங்களை அது நினைத்துக்கொண்டது. இறந்துபோன தன்னுடைய இரு புறா நண்பர்களை. இந்தச் செய்தி போய்ச் சேர வேண்டும் என்று காத்திருக்கும் 200 அமெரிக்கர்களை. கீழே விழுந்த புறா தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் பறக்க ஆரம்பித்தது. தன்னை நோக்கி பறந்த குண்டுகளை அது பொருட்படுத்தவில்லை. பறந்துகொண்டே இருந்தது. வீடு போய்ச் சேரும்வரை அது நிற்கவேயில்லை.

முதல் உலகப் போரில் 200 வீரர்களைக் காப்பாற்றியதற்காகப் பின்னர் இந்தப் புறாவுக்கு விருது எல்லாம் கொடுத்தார்கள். வீரமிக்க அமெரிக்கப் புறா என்று பலரும் புகழ்ந்தார்கள். அந்தப் புறா தன் மனத்துக்குள் சொல்லிக்கொண்டது. எனக்கு வீரம் தேவையில்லை. புகழோ பதக்கமோ தேவையில்லை. நான் அமெரிக்கப் புறாவும் அல்ல. நான் ஒரு புறா. தயவு செய்து புறாக்களைப் புறாக்களாக மட்டும் இருக்கவிடுங்கள், போதும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்