பூமி என்னும் சொர்க்கம் 10: மிதக்கும் பனி மலைகள்!

By என்.ராமதுரை

ஒரு தம்ளர் பழச்சாற்றில் சில பனிக்கட்டித் துண்டுகளைப் போட்டால் அவை மிதக்கும். பல பனை மர உயரம் கொண்ட பிரம்மாண்டமான பனிப் பாளங்களும் அதேபோல கடலில் மிதக்கும். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பனிப் பாளங்களைத்தான் மிதக்கும் பனி மலை என்று கூறுகிறார்கள்

மிதக்கும் பனி மலை ஒன்றின் மீது டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கிப் போனது பற்றிய திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டில் அட்லாண்டிக் கடலில் பனி மலை மீது மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர்.

இப்போதெல்லாம் கப்பல்களில் ராடார் கருவி உள்ளது. தொலைவில் பனி மலை இருந்தால் ராடார் கருவியானது அதைக் காட்டிக் கொடுத்துவிடும். பனி மலை மீது டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கிய காலத்தில் ராடார் கண்டுபிடிக்கப்படவில்லை.

மிதக்கும் பனி மலைகள் எங்கிருந்து வருகின்றன? வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள கிரீன்லாந்தில், உறைபனி மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போகும். அளவுக்கு மீறி உறை பனி சேர்ந்து விட்டால் அது இறுகி, கெட்டியான பாறை போல ஆகிவிடும். நிலப் பகுதியின் விளிம்பு நோக்கி நகர்ந்து வரும்போது இந்த ராட்சத பனிக்கட்டிப் பாளங்களில் விரிசல் விட்டு அவை பெரும் சத்தத்துடன் கடலில் விழும்.

கடலில் விழும் பாளங்கள், நீரில் மிதக்க ஆரம்பித்து அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பிக்கும். வட துருவப் பகுதியைப் பொருத்தவரை இவை தெற்கு நோக்கி அட்லாண்டிக் கடலின் வட பகுதிக்கு வந்து சேரும். பெரிய குன்று அளவுக்கு மிதக்கும் பனி மலைகளும் உண்டு. இதுவரை காணப்பட்டதில் 295 கிலோ மீட்டர் நீளமும் 37 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட மிதக்கும் பனி மலைதான் மிகப் பெரியது. கிட்டத்தட்ட ஒரு தீவு அளவுக்கு இது இருந்தது.

பனி மலையின் பெரும் பகுதி நீருக்குள் மூழ்கியிருக்க, சிறிய மேல் பகுதி மட்டும்தான் வெளியே தெரியும். இவை பயங்கர எடை கொண்டவை என்பதால் எந்தக் கப்பல் மீது மோதினாலும் கப்பலுக்குத்தான் ஆபத்து.

கோடைக் காலத்தில்தான் இவை வெளியே தலை காட்டும். இப்போதெல்லாம் மிதக்கும் பனிமலைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணித்துக் கப்பல்களுக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். பனிமலை நடமாட்டத்தைக் கண்காணிக்கவே தனிப் பிரிவு உள்ளது. அமெரிக்கா - ஐரோப்பா இடையே அட்லாண்டிக் கடலில் கப்பல் போக்குவரத்து அதிகம் என்பதே இதற்குக் காரணம்.

மிதக்கும் பனிமலைகள் தெற்கே வர வர குளிர் குறைந்து போகும். அப்போது சூரிய வெப்பத்தால் அவை முழுவதுமாக உருகிப் போய்விடும். வெப்ப மண்டலப் பிராந்தியம் என்பதால் இந்தியாவை அடுத்துள்ள கடல் பகுதிகளில் மிதக்கும் பனிமலைகளைக் காண இயலாது.

தென் துருவத்தில் அண்டார்டிக் கண்டத்தில் உறை பனி நிறைய சேரும்போது இப்படி மிதக்கும் பனிமலைகள் தோன்றும். இவை வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும். ஆனால் அண்டார்டிகாவை ஒட்டிய கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகம் இல்லை என்பதால் ஆபத்து குறைவு.

வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ராட்சதப் பனிமலைகள் நல்ல தண்ணீரால் ஆனவை.

அண்டார்டிகா பனிமலைகளை இழுத்து வரமுடியும் என்றால் தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும். ஆனால் அவை வந்து சேருவதற்குள் உருகிவிடும்.

பொதுவாக மிதக்கும் பனி மலைகள் வெண்மை நிறத்தில்தான் காணப்படும். சூரிய ஒளி இதன் மீது படும்போது பனி மலைகள் அந்த ஒளியை நன்கு பிரதிபலிக்கும். சில நேரம் பனி மலைகள் லேசான நீல நிறத்தில் காட்சி அளிப்பதும் உண்டு.

சமீபத்தில் அண்டார்டிகாவிலிருந்து கிளம்பிய ஒரு பனி மலையானது சற்றே பச்சை நிறம் கொண்டதாகக் காட்சி அளித்தது. அந்தப் பனிக் கட்டியில் கலந்திருந்த கனிமங்களே இதற்குக் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்