பற்பசையில் மாட்டின் குளம்பு

By பிருந்தா சீனிவாசன்

தினமும் காலையில் தூங்கி எழுந்த பிறகும், இரவு தூங்கப் போவதற்கு முன்பும் என்ன செய்வீர்கள்? பல் துலக்குவீர்கள் அல்லவா? பல் துலக்கப் பயன்படும் டூத் பேஸ்ட்டை தமிழில் பற்பசை என்று சொல்வார்கள். பற்பசை வருவதற்கு முன்னால் டூத் பவுடர் எனப்படும் பல்பொடிகள்தான் பயன்படுத்தப்பட்டன. இன்று பலப் பல வண்ணங்களிலும், சுவைகளிலும் பற்பசைகள் கிடைக்கின்றன. அந்தக் காலத்தில் எப்படி பல் துலக்கினார்கள் தெரியுமா? ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமான பொருட்களை அரைத்து பல்பொடியாகப் பயன்படுத்தினார்கள்.

ஆனால் பல்பொடி, பற்பசை எவற்றின் துணையும் இல்லாமல் வேப்பங்குச்சியிலும், ஆலங்குச்சியிலும் நம் முன்னோர்கள் பல் துலக்கினார்கள். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று தங்கள் அனுபவத்தைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

பயங்கரமான பற்பசை

எகிப்தியர்கள் கி.மு 5000 வாக்கில், பல் துலக்குவதற்காக ஒரு பசையைத் தயாரித்தார்கள். அது தற்போது இருக்கும் பற்பசை மாதிரி இனிப்பாக இருக்காது. அதன் சுவையே பயங்கரமாக இருந்தது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் அப்படி. எருதுகளின் குளம்பு, மரத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு வகை பிசின், எரிக்கப்பட்ட முட்டை ஓடு, மெருகேற்ற உதவும் ஒரு வகை மாவுக்கல் இவற்றுடன் தண்ணீரைச் சேர்த்துக் குழைத்த பசையைத்தான் பல் துலக்கப் பயன்படுத்தினார்கள்.

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்தே ஓரளவு நறுமணமுள்ள பற்பசையைத் தயாரித்தார்கள். அரைத்த பாறை உப்பு, புதினா, கறுப்பு மிளகு ஆகியவற்றையும் மூலப் பொருட்களாகச் சேர்த்தார்கள்.

இயற்கையின் பங்களிப்பு

பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் எலும்பையும் சிப்பியையும் மாவாக அரைத்து பல்பொடி போல பயன்படுத்தினார்கள். வாய்துர்நாற்றத்தை நீக்கும் பொருட்களையும் பற்பசையோடு சேர்த்து ரோமானியர்கள் பயன்படுத்தினார்கள். இவர்களைவிட சீனர்கள் அதிக பொருட்களைக் கொண்டு பற்பசை தயாரித்தார்கள். மருத்துவகுணம் கொண்ட வேர், புதினா, உப்பு இவற்றுடன் வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படும் பொருளையும் சேர்த்துக் கொண்டார்களாம். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த பல்துறை வல்லுநர் ஜிர்யப் என்பவர் அறிமுகப்படுத்திய பற்பசை, இஸ்லாமிய ஸ்பெயின் முழுக்க பிரபலமானது. அந்தப் பற்பசையில் பல்லுக்கு உறுதியளிக்கும் பொருட்களுடன் நறுமணப் பொருட்களும் சேர்ந்திருந்தன. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை.

பிறகு 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டன் மற்றும் இதர நாடுகளிலும் பற்பசையைப் பலரும் பயன்படுத்தினார்கள். பொதுவாக அவை சுண்ணாம்புக்கல் தூள், உப்பு, அரைத்த செங்கல் தூள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை யாக இருந்தன. பற்பசைகள் அறிமுகமானாலும் முதல் உலகப் போர் காலம் வரை பல்பொடிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

வேதிப் பொருட்களின் சேர்க்கை

1900களில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, பேக்கிங் சோடா போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட பற்பசைகள் அறிமுகமாகின. பிறகு இனிப்புச் சுவைக்காக கிளிசரினும், பல்லை வலுவாக்க ஸ்ட்ரான்ஷியமும் பற்பசையில் சேர்க்கப்பட்டன. 1806-ம் ஆண்டு வில்லியம் கோல்கேட் என்பவரால் தொடங்கப்பட்ட கோல்கேட் கம்பெனி, 1873-ம் ஆண்டு ஒரு வகை பற்பசையைத் தயாரித்து ஜாடிகளில் அடைத்து விற்பனை செய்தது. பிறகு 1892-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த வாஷிங்டன் ஷெஃபீல்டு என்பவர் தற்போது நாம் பயன்படுத்துவது போல பற்பசையை டியூபில் அடைத்து விற்பனை செய்தார். ஓவியர்கள் டியூபில் அடைக்கப்பட்ட பெயிண்டை எடுத்துப் பயன்படுத்துவதைப் பார்த்த இவருடைய மகன் கொடுத்த ஐடியாவால் விளைந்ததுதான் இந்த டியூப் பற்பசை.

ஆரம்பத்தில் காரீயத்தில்தான் டியூப் தயாரிக்கப்பட்டது. சமயங்களில் காரீயத்தின் நச்சு, பற்பசையுடன் கலந்து விஷத்தன்மையை ஏற்படுத்தியது. தவிர, பற்பசை டியூப் தயாரிப்புக்கு அதிகளவு காரீயம் தேவைப்பட்டதால் இரண்டாம் உலகப் போரின்போது காரீயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அலுமினியம், காகிதம், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொண்டு டியூப்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான டியூப்கள் பிளாஸ்டிக்கில் தயாராகின்றன.

பற்குழியைப் போக்க பற்பசைகளில் ஃபுளூரைடு சேர்க்கப்படுகிறது. ஒரே டியூபில் இரண்டு நிறங்களைக் கொண்ட பற்பசையை நியூயார்க்கைச் சேர்ந்த லியோனார்டு மராஃபினோ என்பவர் 1955-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்குவது நல்லது. அப்போதுதான் பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளும், கிருமிகளும் வெளியேறும். இனி தினமும் பல் துலக்கும் போது பற்பசை வந்த கதையையும் நினைத்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்