பறவை தாத்தாவின் அழகான நாட்கள்!

By ஆசை

நம் ஊரில் சாலிம் அலியைப் ‘பறவை தாத்தா’ என்று அழைப்போமல்லவா! அதுபோல் உலகமெல்லாம் ‘பறவை தாத்தா’ என்று அழைக்கப்படுபவர் டேவிட் அட்டன்பரோ. அவர் ‘பறவை தாத்தா’ மட்டுமல்ல. தவளை தாத்தா, குரங்கு தாத்தா, திமிங்கிலம் தாத்தா என்று எல்லா உயிரினங்கள் பேரையும் சொல்லி அழைக்கலாம். அந்த அளவுக்கு இயற்கை உலகில் திரிந்து இயற்கையின் அதிசயங்களை நமக்குத் தொலைக்காட்சி மூலமாக அறிமுகப்படுத்தியவர் அவர்.

பறவைகளின் வாழ்க்கை, பாலூட்டிகளின் வாழ்க்கை, பூமியில் உயிர்வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அவர் தயாரித்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் மிகவும் பிரபலம். ‘காந்தி’ படம் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் டேவிட் அட்டன்பரோ. அவர் தனது 90-வது பிறந்த நாளைத் தற்போது கொண்டாடியிருக்கிறார். இயற்கை உலகில் அவர் வழியாக நமக்குக் கிடைத்த அற்புத தருணங்களில் சில இங்கே.

1. காடழிப்பும் லயர் பறவையும் (‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)

லயர் பறவையை ஒளிப்படம் எடுத்தபோது கேமராவின் ஷட்டர் சத்தத்தை அது மிமிக்ரி செய்தது. அடுத்து அது செய்தது அட்டன்பரோவை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியது; கூடவே, குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போது, பக்கத்தில் இயந்திர ரம்பத்தைக் கொண்டு மரங்களை யாரோ வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த இயந்திர ரம்பத்தின் சத்தத்தையும் லயர் பறவை மிமிக்ரி செய்தது அட்டன்பரோ படம் பிடித்த மகத்தான தருணங்களுள் ஒன்று.

2. டொக் டொக் யாரது? மரங்கொத்தி! (த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)

பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதில் அட்டன்பரோ பெரும் வித்தகர். தென்னமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு காட்டில் ஒரு மரத்தைத் தட்டுகிறார் அட்டன்பரோ. தனது பிரதேசத்துக்குள் யாரோ அந்நியர் அத்துமீறிவிட்டார் என்று நினைத்துக்கொண்ட ஒரு மேகலனிக் மரங்கொத்தி அதற்கு உடனடியாக பதிலளிக்கிறது.

அவர் தலைக்கு மேலே மரத்தில் தொற்றிக்கொண்டே அலகால் மரத்தைக் கொத்தி அட்டன்பரோ எழுப்பிய சத்தத்தை அதுவும் எழுப்புகிறது. கூடவே, அதன் இணையும் சேர்ந்துகொள்ள இயற்கை ரசிகர்களுக்குப் பெரும் விருந்து.

3. மந்த ராஜா போடும் புதிர்! (த லைஃப் ஆஃப் மேமல்ஸ், 2002)

ஸ்லோத் என்ற விலங்கு மரங்களில் வசித்துக்கொண்டு இலைகளை மட்டும் சாப்பிட்டு வாழக்கூடியது. பெயருக்கு ஏற்றவாறு மிகவும் மந்தமான விலங்கு அது. மரத்தில் மேலே இருக்கும் ஸ்லோத்துக்கு அருகில் சென்று ‘பூ’ என்று அவர் பயமுறுத்தியும் அது ஒன்றும் பெரிதாக அசையவில்லை. அதன் மந்தத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே அது வசிக்கும் என்கிறார் அட்டன்பரோ.

அதன் விசித்திரமான இயல்பொன்றை அவருக்கு உரிய பாணியில் வர்ணிக்கிறார். விட்டை போட மட்டுமே, வாரத்துக்கு ஒருமுறை ஸ்லோத் தரையிறங்கும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் விட்டை போடும். “இரையுண்ணிகளால் வேட்டையாடப்படும் ஆபத்து இருந்தும் விட்டை போட மட்டும் அது ஏன் தரையிறங்குகிறது? யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. எனினும், இந்த ஆபத்துக்கிடையேயும் அது இப்படிச் செய்வதால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தாக வேண்டும்” என்கிறார்.

4. நல்ல வேளை, பசிக்காத வேளை! (ஜூ க்வெஸ்ட், 1950-கள்)

1950-களில் இளைஞராக இருந்த அட்டன்பரோ பப்புவா நியூ கினியின் காடுகளுக்குச் செல்கிறார். அங்கே, மனித மாமிசத்தை உண்ணக்கூடிய வனவாசிக் கும்பலொன்றை எதிர்கொள்கிறார். பளபளக்கும் கத்தி ஒன்றையும் அவர் கவனிக்கிறார். பயத்தை மறைத்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்று ‘குட் ஆஃப்டர்நூன்’ என்று முகமன் கூறுகிறார். அவர்களும் அவரை நட்புணர்வோடு எதிர்கொள்கிறார்கள். நல்லவேளை அவர்களுக்கு அன்று பசியில்லை போலும்.

5. உலகத்துக்கு ஓர் எச்சரிக்கை! (‘ஸ்டேட் ஆஃப் த ப்ளானட், 2000)

2009-ல் ஈஸ்டர் தீவின் பிரம்மாண்ட மான சிற்பங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு அட்டன்பரோ விடுத்த கடுமையான இந்த எச்சரிக்கை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டியது: “இந்த பசிபிக் தீவில் வாழ்ந்து மறைந்த ராப்பா நூயி மக்கள் இங்குள்ள இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகச் சுரண்டித் தீர்த்ததால் அவர் களின் சமூகம் அழிவுற்றது. அவர்களைப் போல நாமும் செய்வோமானால் நமக்கும் அவர்களின் கதிதான் ஏற்படும்.”

நன்றி: ‘தி கார்டியன்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்