மாய உலகம்: மர்மத்தைக் கண்டுபிடிப்போம்!

By மருதன்

ஒரு நாள் அகதா கிறிஸ்டி காணாமல் போய்விட்டார். வீடு முழுக்கத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடமும் உறவினர் களிடமும் விசாரித்துப் பார்த்தார்கள். பலனில்லை என்பதால் காவல் துறையிடம் ஓடினார்கள். காலை முதல் அகதாவைக் காணவில்லை. நீங்கள்தான் கண்டுபிடித்துத் தர வேண்டும்!

அகதா யார், அவர் வயது என்ன, என்ன செய்கிறார், அவர் பார்க்க எப்படி இருப்பார் எனஎல்லாவற்றையும் விசாரித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு காவலர்கள் தேடத் தொடங்கினார்கள். முதலில் சிக்கியது அகதாவின் கார். உள்ளே அகதாவும் இல்லை, அவர் எங்கே சென்றிருப்பார் என்பதற்கான தடயமும் இல்லை. வீட்டிலிருந்து காரை ஓட்டிக்கொண்டு வந்தவர், காரை மட்டும் விட்டுவிட்டு எங்கே மாயமாய் மறைந்துவிட்டார்?

கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகில் ரயில் நிலையம் ஒன்று இருப்பதைக் காவல் துறையினர் கண்டனர். ஓ, அப்படியானால் இங்கே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு எங்காவது ரயிலில் போய்விட்டாரா? எனில், எங்கே? வரைபடத்தை எடுத்து விரித்து வைத்துக்கொண்டு யோசித்தார்கள். இந்த இடத்திலிருந்து ஒருவர் ரயிலில் ஏறுகிறார் என்றால் அவர் எங்கெல்லாம் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது? ஒரு பட்டியலைத் தயாரித்தார்கள். பிறகு எல்லா இடங்களுக்கும் ஒரு குழுவை அனுப்பி அகதாவைத் தேட ஆரம்பித்தார்கள்.

ஆரம்பித்தபோது 4 அல்லது 5 பேர் இருந்தார்கள். இப்போது அகதாவைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 500 ஆக வளர்ந்திருந்தது. அகதாவின் புகைப் படத்தை அவர் வீட்டிலிருந்து வாங்கி, அதை நன்றாகப் பெரிதாக்கி மளமளவென்று அச்சிட்டு எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். வருவோர், போவோரிடம் எல்லாம் படத்தை நீட்டி, இந்தப் பெண்ணை எங்காவது பார்த்தீர்களா என்று விசாரணை நடத்தினார்கள். இல்லையே, இல்லையே என்று எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று என்று நாள்கள் ஓடிக்கொண்டே இருந்தன. பயிற்சிபெற்ற மோப்ப நாய்கள் அகதாவின் வீடு தொடங்கி கார் வரை மோப்பம் பிடித்தபடி லொள், லொள் என்று அங்கும் இங்கும் ஓடி, இறுதியில் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டன. வார இறுதி நாள்களில் அக்கம் பக்கத்துக்காரர்கள் தங்கள் பங்குக்கு அகதாவின் படத்தைக் கையில் ஏந்திக்கொண்டு காடு, மேடு என்று எல்லா இடங்களிலும் தேடத் தொடங்கினார்கள். அகதாவின் மர்மத்தை இங்கிலாந்து செய்தித்தாள்கள் தினம், தினம் அலசி, ஆராய்ந்தன. அப்படி என்னதான் ஆகியிருக்கும்? எங்கேதான் போனார்? இவ்வளவு பேர் தேடியும் எப்படி ஒருவர் கண்ணிலும் அவர் இதுவரை படவில்லை? காற்றோடு காற்றாக ஒரு பெண் மாயமாக மறைவது உண்மையில் சாத்தியமா?

கொஞ்சம் பொறுங்கள். அகதா கிறிஸ்டியின் நாவலில்தானே இப்படியெல்லாம் அதிசயமான, மர்மமான, பயமுறுத்தக்கூடிய விஷயங்கள் எல்லாம் நடக்கும்? என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று இரவெல்லாம் கோட்டான்போல் கண்களை உருட்டி உருட்டி பக்கங்களைப் பரபரவென்று நகர்த்திக்கொண்டே இருப்போம். கடைசிப் பக்கத்தில், சில நேரம் கடைசிப் பத்தியில், சில நேரம் கடைசியோ கடைசி வரியில் நாம் தேடும் விடை கிடைக்கும். ‘ஆ' என்று முதலைபோல் வாயைப் பிளப்போம். முதலை போல் வாயை மூட மறந்தும் விடுவோம். இப்போதோ அகதாவே காணாமல் போயிருக்கிறார். மர்ம நாவல் எழுதுபவரே மர்மமாக மறைந்துவிட்டால் என்னதான் செய்வது?

சரியாகப் பத்தாவது நாள் அகதா கிறிஸ்டி கண்டுபிடிக்கப்பட்டார். காரை நிறுத்திவிட்டு, ரயில் ஏறி, ஏதோ ஓர் ஊரில் இறங்கி, ஓர் ஓட்டலில் வேறொரு கற்பனை பெயரில் அறை எடுத்து அவர் தங்கியிருந்தது தெரியவந்தது. என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது அகதா இப்படிச் சொன்னார்:

‘பாட்டு கேட்டேன். படித்தேன். தூங்கினேன். கனவு கண்டேன். என்னைப் பற்றிப் பல செய்திகள் வந்ததைப் பார்த்தேன். வித விதமாகச் சாப்பிட்டேன். அகதா காணாமல் போய்விட்டதைப் பற்றி பலரும் பலவிதமாகக் கற்பனை செய்து பேசிக்கொண்டிருந்தார்கள். நீ என்ன நினைக்கிறாய், அவள் எங்கே போயிருப்பாள் என்று என்னிடமே சிலர் கேட்டார்கள். நானும் ஒரு கற்பனை கதையை அவர்களுக்குச் சொன்னேன். இப்படியாகப் பத்து நாள்கள் ஓடியே போய்விட்டன.’

எதுவுமே நடக்காததுபோல் மீண்டும் மர்ம நாவல்களை எழுதத் தொடங்கினார் அகதா. ஒவ்வொன்றையும் மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆர்வத்தோடு அள்ளிக்கொண்டார்கள். ஒவ்வொரு கதையிலும் பெரிய மர்மம் இருக்கும். படிக்கும் ஒவ்வொருவரும் துப்பறிவாளராக மாறி அந்த மர்மத்தைத் துப்புத் துலக்கத் தொடங்குவார்கள். இதுதான் நடந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் ஒரு விடையைக் கற்பனை செய்து வைப்பார்கள். கடைசியில் எல்லோருடைய கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மர்மத்தை அகதா தீர்த்து வைப்பார்.

அகதா எழுதிய எல்லாக் கதைகளுக்கும் முடிவு தெரிந்துவிட்டது. ஆனால், அந்தப் பத்து நாள் மர்மம் மட்டும் நீங்கவேயில்லை. தயவுசெய்து சொல்லிவிடுங்கள், அகதா ஏன் அன்று காணாமல் போனீர்கள் என்று யார் யாரோ, எப்படி எப்படியோ அவரிடம் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். ஒரு சொல்கூட வரவில்லை அவரிடமிருந்து. அப்படி நடந்திருக்கும், இப்படி நடந்திருக்கும் என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து பலர் பல விதங்களில் துப்பறிந்து பார்த்துவிட்டார்கள். பலனில்லை.

‘யோசியுங்கள்’ என்று கண்களைச் சிமிட்டுகிறார் அகதா கிறிஸ்டி. ‘எவ்வளவு பெரிய மர்மமாக இருந்தாலும் யோசிக்க, யோசிக்க பலவிதமான விடைகள் கிடைக்கும். இருப்பதிலேயே மிகவும் எளிமையான விடைதான் சரியான விடை! இதுதான் உங்களுக்கான துப்பு. இனி நீங்கள் துப்பறிய ஆரம்பியுங்கள்!’

(இங்கிலாந்தைச் சேர்ந்த அகதா கிறிஸ்டி உலகப் புகழ்பெற்ற துப்பறியும் எழுத்தாளர்.)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்