பசுமைப் பள்ளி 11: பலகைக் காடு

By நக்கீரன்

வணக்கம் குழந்தைகளே! நான்தான் முல்லைப்பூ.

இலைகளுக்குள் விண்மீன்களை இறைத்ததுபோல் பூத்திருந்தன முல்லைப் பூக்கள். காற்றில் மிதந்துவந்தது அவற்றின் நறுமணம். ‘முல்லைத் திணை’ என்பது காடும் காடும் சார்ந்த இடமும் என்கிறார்கள். ஆனால், மரங்கள் அடர்ந்த காடாக இது இல்லையே! மேய்ச்சல் நிலங்களுடன் கூடிய காடாக அல்லவா இருக்கிறது? இதுதான் முல்லைத் திணையா?’

பசுமைப் பள்ளிக் குழந்தைகளின் மனங்களில் ஓடிய எண்ணத்தைப் புரிந்துக் கொண்டது முல்லைப்பூ.

“ஆமாம் குழந்தைகளே. முல்லைத் திணை என்பது தரைக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தில் இருக்கும் புல்வெளிகளும் மரங்களும் நிறைந்த காட்டுக்கு ‘சோலைக் காடு’என்று பெயர். எதுவாக இருந்தாலும் பசுமை நிறைந்த பகுதி என்றால், அது காடுதானே? நாட்டுக்குள் வசிக்கும் மக்களைவிட அதிகமான உயிரினங்கள் காட்டுக்குள்தானே வசிக்கின்றன?”

“ஆனால், காட்டுக்குள் இருக்க வேண்டிய விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றனவே, இது சரியா?” என்று கேட்டாள் பூவிழி என்ற சிறுமி.

“நல்ல கேள்வி. முதலில் உன்னிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். அதற்கு நீ பதில் சொல். நீ வசிக்கும் வீட்டை யாராவது இடித்துத் தள்ளிவிட்டால், உனக்கு எப்படி இருக்கும்?”

“ரொம்ப வருத்தமாக இருக்கும்”.

“அப்போது நீ எங்குப் போவாய்?”

“தெருவுக்குதான் போக வேண்டும்”

“அப்படியானால் மக்களுக்கு ஒரு நியாயம். காட்டு உயிரினங்களுக்கு ஒரு நியாயமா?”

பூவிழிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. முல்லைப்பூ தொடர்ந்து பேசியது.

“மனிதர்கள் வாழ்வதற்காகக் காட்டை அழிக்கிறார்கள். பிறகு காட்டு விலங்குகள் என்ன செய்யும்? காட்டின் பரப்பளவு குறையும்போது, உணவும் குறைந்து போகிறது. அதனால்தான், அவை உணவைத் தேடி ஊருக்குள் வருகின்றன. புரிகிறதா?”

குழந்தைகள் தலையை ஆட்டினர்.

“ஆனால், அப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், சிறுத்தைகள் அட்டூழியம்’ என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். ஒரு வேளை விலங்குகளுக்கும் செய்தி வெளியிடும் திறன் இருந்து, அதில் ‘மனிதர்கள் காட்டுக்குள் புகுந்து அடாவடி, காட்டைத் திருடும் மனிதர்கள்’எனச் செய்தி வெளியிட்டால் மனிதர்களுக்கு எப்படி இருக்கும்?.”

“அசிங்கமாக இருக்கும்” என்று பூவிழி பதில் சொன்னபோது, மற்ற குழந்தைகள் சிரித்தனர். முல்லைப்பூவும் சிரித்துவிட்டுச் சொன்னது:

“காடு என்பது உங்களுக்கான உயிர் மூச்சு. உங்கள் மூச்சை அழித்துவிட்டு வாழ்வது என்ன வாழ்க்கை? ஆனால், காடு என்றாலே மக்களுக்கு மரப்பலகை, மரப்பொருட்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. இப்போது சொல்லுங்கள் குழந்தைகளே காடு என்பது வெறும் பலகையா? பலகையை வைத்துக்கொண்டு மூச்சுவிட முடியுமா?”

“முடியாது”

“ஆனால், இன்று முல்லைத் திணை என்பது காடும் காடு சார்ந்த இடமும் என்பதற்குப் பதிலாக மரங்களை வெட்டிப் பலகையும் பலகை எடுக்கும் இடமுமாக மாறிவிட்டதே!”

முல்லைப்பூவின் துயரம் குழந்தைகளுக்கும் தொற்றிக்கொண்டது. காடு என்பதே பசுமைதானே? பசுமையை அழிய விடுவார்களா, நம் பசுமைப் பள்ளியின் குழந்தைகள்? அவர்கள் ஒன்றுகூடி உறுதிமொழி எடுத்தார்கள்.

‘இருக்கும் காடுகளைக் காப்போம். புதிய காடுகளை வளர்ப்போம்’.

(அடுத்து: வேதி வயல்)

கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்