இளம் தொழில்முனைவோர்: சகலகலா வினுஷா!

By ஸ்நேகா

பலருக்கு எதிர்காலத்தில் மருத்துவர், ஆசிரியர், விஞ்ஞானி அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். வெகு சிலரே தாங்கள் நினைத்ததுபோல அந்தக் குறிப்பிட்ட துறையில் நிபுணராக உருவாகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வினுஷா. இவர் இன்னும் வித்தியாசமானவர். எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று நினைத்தாரோ, அதை 9 வயதிலேயே சாதித்துவிட்டார். ஆம்...வினுஷா இப்போதேஒரு தொழில்முனைவோராக இருக்கிறார்.

‘ஃபோர் சீஸன்ஸ் பேஸ்ட்ரி ’ என்ற இவருடைய நிறுவனத்தில் கப் கேக்குகள்தாம் ஸ்பெஷல். இளவேனிற் காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் ஆகிய நான்கு காலங்களைக் குறிக்கும் விதத்தில் வண்ணத்திலும் வடிவமைப்பிலும் வித்தியாசம் காட்டி, கப் கேக்குகளை உருவாக்கி வருகிறார் வினுஷா.

சென்னை ராமாபுரத்திலுள்ள அமிர்த வித்யாலயாவில் 5-ம் வகுப்பு படிக்கும் வினுஷாவுக்கு பேக்கிங் கலை மீது ஆர்வம் வந்தது எப்படி? “எல்லோரையும் போலவே எனக்கும் கேக், சாக்லெட் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை என் அம்மாவின் பிறந்தநாளுக்கு கேக் செய்து கொடுக்க விரும்பினேன். நானும் என் தோழியும் சேர்ந்து செய்ய ஆரம்பித்தோம்.என்ன ஆச்சரியம்,முதல் தடவையே கேக் சுவையாக வந்துவிட்டது. அந்த நிமிடத்தில்தான் எனக்கு பேக்கிங் மீது ஆர்வம் உருவானது. என் அம்மாவும் அப்பாவும் என் விருப்பத்தைப் புரிந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

அடிப்படை விஷயங்களை முறையாகக் கற்றுக்கொண்டேன். யூடியூபில் கேக் தொடர்பான வீடியோக்களைப் பார்த்தேன். என்னுடைய கப் கேக்குகள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் சீஸன் கேக்குகளைச் செய்ய ஆரம்பித்தேன்’’ என்கிற வினுஷா, கேக் செய்வதோடு நிறுத்தவில்லை.அதை விற்பனை செய்யவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.பல்வேறு புத்தகங்களைப் படித்து, வியாபார நுட்பத்தைக் கற்று வருகிறார்.

“2019 செப்டம்பரில் என் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதோ ஓராண்டை நிறைவு செய்துவிட்டேன். என்னை உற்சாகப்படுத்தவும் என்னைப் போன்ற மாணவர்களைத் தொழில் முனைவோராக உருவாக்கவும் வெளிநாட்டிலிருந்து நூருதின் அஹமது அங்கிள் ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார். என்னுடைய பொறுப்பு இப்போது அதிகமாகிவிட்டது” என்கிறார் வினுஷா.

கேக்கோடு சாக்லெட், சாண்ட்விச் போன்றவற்றையும் விற்பனை செய்கிறார். Baking Kit மூலம் தொழில்நுட்ப உதவி இல்லாமலே, குழந்தைகள் எளிதாக கேக் செய்யும் முறையைக் கற்றுக்கொடுக்கிறார். தன்னைப் போன்ற மாணவர்களுக்கு கேக் செய்முறை வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.

படித்துக்கொண்டே இத்தனை வேலைகளையும் எப்படிச் செய்யமுடிகிறது?

“படிப்புதான் முக்கியம். படிச்சிட்டுதான் மற்ற வேலைகளைச் செய்யணும்னு அம்மாவும் அப்பாவும் சொல்லிருக்காங்க. அதனால் ரொம்ப வேகமாகப் படிச்சிட்டு பேக்கிங்குக்கு வந்துடுவேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். பள்ளிகள், கல்லூரிகளில் உத்வேகமூட்டக்கூடிய உரைகளை நிகழ்த்தறேன்.தொலைக்காட்சியில் ‘வினுஷா கிச்சன்’ என்ற நிகழ்ச்சியை வழங்கறேன். இதெல்லாம் போக நிறைய புத்தகங்களையும் படிக்கிறேன். நண்பர்களுடனும் விளையாடுகிறேன். அரட்டையடிக்கிறேன்”என்கிற வினுஷாவுக்கு அடுத்தடுத்த திட்டங்களும் உண்டு.

“காய்கறி, பழங்கள், பூ, பலூன் விற்பவர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும். எதிர்காலத்தில் பெரிய அளவில் பேக்கிங் இன்ஸ்டிடியூட் ஆரம்பித்து, குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும்!’’

வினுஷாவின் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

7 mins ago

சினிமா

13 mins ago

கருத்துப் பேழை

3 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்