மாய உலகம்: ஏன் வரலாறு கற்க வேண்டும்?

By மருதன்

அன்புள்ள இந்து,

இந்நேரம் நீ உனது பதிமூன்றாம் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருப்பாய்! உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஏராளமான பரிசுகளும் வாழ்த்துகளும் வந்து குவிந்திருக்கும். சிறகுகள் விரித்து கனவுலகில் மிதந்து கொண்டிருப்பாய்!

நானோ உன்னைவிட்டுப் பிரிந்து எங்கோ ஒரு சிறைச்சாலையில் அடைப்பட்டுக் கிடக்கிறேன். என் நெஞ்சம் முழுக்க வாழ்த்தும் அன்பும் நிறைந்துள்ளன. ஆனால், அவற்றை எப்படி உன் சிறிய கரங்களில் சேர்ப்பது?

தவித்துத் தவித்துப் புரண்டுகொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது. நான் ஏன் உனக்குக் கடிதம் எழுதக் கூடாது? மறுநொடியே உற்சாகத்தோடு எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால், பேனா நகர மறுத்தது. என்ன எழுதுவது?

பொதுவாக உன் வயது குழந்தைக்கு எல்லோரும் என்ன எழுதுவார்கள்? ஒழுங்காகப் பள்ளிக்குப் போ. பாடம் படி. அம்மா சொல்வதைக் கேள். ஒழுங்காகச் சாப்பிடு. நேரம் தவறாமல் உறங்கு. இப்படிக்கு, அப்பா. அவ்வளவுதானே?

உண்மையில் நானும் இப்படித்தான் உனக்கு எழுதத் தொடங்கினேன். ஆனால், இரண்டு வரிக்கு மேல் தொடர முடியவில்லை. அலுத்துவிட்டது. எழுதும் எனக்கே இப்படி என்றால் பாவம், நீ என்ன செய்வாய்? அப்பாவாச்சே என்று சகித்துக்கொண்டு அரை மனதோடு படிப்பாய். ஆரம்பிக்கும்போதே எப்போது முடியும், எப்போது போய் விளையாடலாம் என்று உன் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்.

அது போக, இன்னொரு கேள்வியும் எழுந்தது. உன்னைவிட வயது அதிகம் என்னும் ஒரே காரணத்துக்காக அதைச் செய் இதைச் செய்யாதே, அப்படிச் செய் இப்படிச் செய்யாதே என்று உனக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கும் தகுதியை நான் பெற்றுவிட்டேனா? எல்லாம் தெரிந்த மேதாவியா நான்? உலக அறிவை எல்லாம் கரைத்துக் குடித்தவனா? தவறுகளே செய்யாதவனா? இல்லையே! நீ பள்ளிக்குச் செல்கிறாய், நான் செல்வதில்லை. இந்த ஒரு வேறுபாடு போக நாம் இருவருமே மாணவர்கள்தான், இல்லையா?

இந்த எண்ணம் உதித்ததுமே தெளிவும் கிடைத்துவிட்டது. நம் இருவருக்கும் வகுப்புகள் எடுக்கும், நம் இருவரையும் வழிநடத்தும், நாம் தவறுகள் இழைக்கும்போது எல்லாம் கண்டிக்கும் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரை ஏன் நான் உனக்கு அறிமுகம் செய்யக் கூடாது? நாம் இருவரும் கரங்கள் கோத்துக்கொண்டு அவர் முன்னால் அமர்ந்து ஏன் பாடம் படிக்கக் கூடாது?

என்னை நம்பு, இந்து. வரலாறு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, சிறந்த கதை சொல்லியும்கூட. உனக்குக் கதை படிக்கப் பிடிக்கும்தானே? அப்படியானால் வரலாறும் உனக்கு நிச்சயம் பிடிக்கும். அவரை உனக்கு அறிமுகம் செய்வதைக் காட்டிலும் சிறந்த பரிசு என்னிடம் வேறு இல்லை.

வரலாறு ஒரே ஒரு நீண்ட கதையைத்தான் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. அது நம் கதை. மனிதகுலத்தின் கதை. காட்டில் விலங்குகளோடு விலங்குகளாகப் புழுதியில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நாம், இன்று விண்வெளிக்குப் பயணம் செய்யும் அளவுக்கு எப்படி உயர்ந்தோம்? குகைகளில் கோடுகள் கிழித்துக்கொண்டிருந்த நாம் எப்படி மாபெரும் கலை படைப்புகளை உருவாக்கினோம்? ஒவ்வொரு சொல்லாகத் திக்கித் திக்கிப் பேசத் தொடங்கி மாபெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் அறிவியல் கோட்பாடுகளையும் வளர்த்தெடுக்கும் ஆற்றலை எவ்வாறு பெற்றோம்?

இவ்வளவு ஆற்றல்களைப் பெற்ற பிறகும் ஏன் நம் உடலில் புழுதி ஒட்டிக்கொண்டிருக்கிறது? திறன்மிக்க நம் கரங்கள் ஏன் ஆயுதங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன? நம் அழகிய குரல் வளத்தைக் கொண்டு ஏன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்? உலகை எல்லாம் கைப்பற்றிய பிறகும் ஏன் சக மனிதர்களோடு போட்டியிட்டு அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்?

நீங்கள் எப்போதெல்லாம் இணைந்திருக்கிறீர்களோ அப்போதெல்லாம் மனிதர்களாக இருக்கிறீர்கள் என்கிறது வரலாறு. நெருப்பு, சக்கரம், ஓவியம், மொழி, பாடல், இசை, கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஜனநாயகம் அனைத்தும் மனிதர்களின் கூட்டு உழைப்பினால் உருவானவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு, ஒரு நாடு இன்னொரு நாடோடு, ஒரு கண்டம் இன்னொன்றோடு கரம் கோத்துக்கொள்ளும்போது மாபெரும் அதிசயங்கள் நிகழ்கின்றன.

ஆப்பிரிக்கா இல்லாமல் ஐரோப்பா இல்லை. ஐரோப்பா இல்லாமல் ஆசியா இல்லை. ஆசியா இல்லாமல் உலகம் இல்லை. கிரேக்கர்களும் ஈரானியர்களும் ஐரோப்பியர்களும் இஸ்லாமியர்களும் இல்லாமல் இந்தியா இல்லை.

ஒரு மனிதன் இன்னொருவனுக்கு எதிராகத் திரும்பும்போது, ஒரு மதம் இன்னொன்றைப் பகையாகக் கருதும்போது, ஒரு நாடு இன்னொன்றை அடிமைப்படுத்த விரும்பும்போது, ஒரு சாதி இன்னொன்றைவிட உயர்ந்ததாக இருக்கும்போது, ஒரு நிறம் இன்னொன்றை இழிவாகப் பார்க்கும்போது நம் ஆற்றல் தேய்கிறது. நம் கலையும் இலக்கியமும் அறிவியலும் வண்ணம் இழக்கின்றன. நாம் மீண்டும் குகைக்குத் திரும்புகிறோம்.

வரலாறு நம் ஆசிரியராக மாறும்போது நாம் பரந்த மனதோடு உலகையும் உயிர்களையும் தழுவிக்கொள்கிறோம். வரலாறு சொல்வதை நாம் கேட்கத் தொடங்கும்போது சிறைகளும் போர்களும் மோதல்களும் பிரிவினைகளும் ஒழியும். அப்போது புதிய இந்தியாவும் புதிய உலகமும் பிறக்கும். உன் பிறந்த நாளில் இப்படி ஒரு நம்பிக்கையை ஏந்திக்கொண்டிருப்பது என்னை எவ்வளவு உற்சாகப்படுத்திவிட்டது தெரியுமா, இந்து?

ஜவாஹர்லால் நேரு

(சிறையில் இருந்து நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் சுமார் 1000 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது).

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்