மாய உலகம்: இப்படிக்கு ஆபிரகாம் லிங்கன்

By செய்திப்பிரிவு

மருதன்

அன்புள்ள பள்ளி ஆசிரியருக்கு,

என் மகனின் கல்வி இன்று தொடங்குகிறது. அவனை உங்கள் மாணவர்களுள் ஒருவனாக இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவன் எடுத்து வைக்கும் முதல் அடி இது. அவனை உங்கள் கரங்களில் நான் ஒப்படைக்கிறேன். பள்ளிக்கூடம் நிச்சயம் அவனுக்கு ஒரு பெரும் புதிராக இருக்கப் போகிறது.

பூனைக்குட்டிபோல் நினைத்தபோதெல்லாம் உறங்கிக்கொண்டு, விழித்திருக்கும் நேரமெல்லாம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துகொண்டு இருந்த அவனுக்குத் தினமும் இத்தனை மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும், இத்தனை மணிக்குள் வகுப்பறைக்குப் போயாக வேண்டும், இத்தனை மணி நேரம் ஓரிடத்தில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டும் என்னும் ஒழுங்குமுறை அச்சத்தையே ஏற்படுத்தும்.

அவன் நிச்சயம் அழுவான். உங்களையும் உங்கள் வகுப்பறையையும் உங்கள் பள்ளியையும் அவன் உளமார வெறுப்பான். அவனை அருகில் அழைத்து, அவன் தோள்மீது கை போட்டு, சில வார்த்தைகள் எனக்காக அவனிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில அடிப்படைகளை அவனுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உன் தந்தையார் என்பதோ அவர் எவ்வளவு படித்தவர் என்பதோ எந்தப் பதவியில் இருக்கிறார் என்பதோ உன்னை எந்த வகையிலும் உயர்த்தவோ தாழ்த்தவோ போவதில்லை என்பதை தொடக்கத்திலேயே அவனுக்குத் தெளிவுபடுத்திவிடுங்கள். உன் தந்தையிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது அல்லது இல்லை என்பதைப் பொறுத்து நீ மதிப்பிடப்பட மாட்டாய் என்பதையும் கையோடு சொல்லிவிடுங்கள்.

பள்ளி என்பது ஒரு சிறிய உலக உருண்டை. அமைதியும் இருக்கும் சத்தமும் இருக்கும். உண்மையில், சத்தமும் அமைதியும் வெவ்வேறானவை அல்ல என்று அவனுக்கு விளக்குங்கள். சுதந்திரத்தின் மற்றொரு பெயர்தான் கட்டுப்பாடு. வாசிப்பின் மற்றொரு பெயர் விளையாட்டு. கற்றுக்கொடுப்பதன் மற்றொரு பெயர் கற்றுக்கொள்ளுதல். அறியாமைதான் அறிவாக மலர்கிறது. நீ தனித்துவமிக்க ஒரு மலர்.

அதேநேரம் பூந்தோட்டத்தின் ஒரு பகுதிதான் நீ என்று அவனிடம் சொல்லுங்கள். அந்தத் தோட்டத்தில் மலர்களோடு முள்ளும் இருக்கும், பெரும்பாலும் ஒளிந்தே இருக்கும். ஏற்பும் நிராகரிப்பும் கலந்தே இருக்கும். உன்னோடு உடன்படுபவர்களை மட்டுமல்ல, உன்னோடு முரண்படுபவர்கள் பலரையும் இங்கே நீ சந்திப்பாய் என்று அவனிடம் சொல்லுங்கள். உன்னை ஏற்பவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல, எதிர்ப்பவர்கள் அனைவரும் எதிரிகளும் அல்ல என்பதையும் தெளிவுபடுத்திவிடுங்கள்.

சிறிது காலம் போனால் பள்ளியே உன் உலகமாக மாறிப் போகும். ஆனால், நிஜ உலகம் வகுப்பறைக்கு வெளியில்தான் நீண்டுகிடக்கிறது என்பதை அவனுக்கு நினைவுபடுத்துங்கள். பள்ளி என்பது படிக்கும் இடம், உலகம் என்பது வாழுமிடம் என்று அவன் நினைத்துவிடக் கூடாது. கற்பதும் வாழ்வதும் வெவ்வேறானவையல்ல என்று அவனுக்குச் சொல்லுங்கள்.

உனக்கு வீடொன்று இருப்பதும், நேரம் தவறாமல் உன் மேஜைக்கு உணவு வந்து சேர்வதும், உடுத்திக்கொள்ள நல்ல ஆடை இருப்பதும், படிக்கப் புத்தகங்கள் இருப்பதும், பேனாவும் பென்சிலும் இன்னபிறவும் கேட்பதற்கு முன்பே கையில் கிடைப்பதும் இயல்பானவை என்று அவன் தவறாக நினைத்துக்கொண்டுவிடப் போகிறான். வீடின்றி, ஆடையின்றி, உணவின்றி, படிக்க வசதியின்றி, பேனா பென்சில் இன்றி உலகம் முழுக்க எத்தனை லட்சம் குழந்தைகள் இருளிலும் பசியிலும் அறியாமையிலும் துவண்டு கிடக்கிறார்கள் என்பதை அவனுக்குத் தயவுசெய்து உணர்த்துங்கள்.

அவர்கள் குடும்பமும் உன் குடும்பமும் ஒரே உலகில்தான் அருகருகில் வசிக்கின்றன என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள். உன் கையிலிருப்பது உன்னைப்போல் ஓராயிரம் குழந்தைகளின் கரங்களுக்குச் சென்று சேராத ஒரு புத்தகம். ஓராயிரம் குழந்தைகள் கால் பதிக்க முடியாத வகுப்பறையில் உனக்கென்று ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கிறது. உன் முன்னால் இருக்கும் கரும்பலகையை ஓராயிரம் குழந்தைகள் காண இயலாமல் தவிக்கிறார்கள். உனக்குக் கிடைத்திருக்கும் ஆசிரியர் ஓராயிரம் குழந்தைகளுக்குக் கிடைக்காதவர் என்று அவனிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.

உன் வயதுக் குழந்தைகள் ஒரு துண்டு ரொட்டிக்கு முதுகு வளைக்கிறார்கள். அவர்கள் உனக்காகவும் சேர்த்தே உழைக்கிறார்கள் என்று அவனிடம் சொல்லுங்கள். அதைக் கேட்டு அவன் குற்றவுணர்வு கொள்ள நேரிடும். பரவாயில்லை. அந்த உணர்வு காலம் முழுக்க அவனை விட்டு நீங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அழுக்கைக் கண்டு, அறியாமையைக் கண்டு, கிழிந்து தொங்கும் ஆடையைக் கண்டு, தகரக்கூரைகள் கொண்ட குடியிருப்பைக் கண்டு, சாக்கடையைக் கண்டு அவன் முகம் சுளிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். என் வீடு, என் நாடு, என் மொழி, என் மதம் என்று அவன் சுருங்கிப்போய்விடக் கூடாது. மற்றவர்களின் உணவு வழக்கத்தை, மற்றவர்களின் கடவுளை, மற்றவர்களின் வாழ்க்கை முறையை, மற்றவர்களின் நம்பிக்கைகளை மதித்து நடந்தால்தான் உன் கல்வி முழுமையடையும் என்று அவனிடம் சொல்லுங்கள்.

அவன் தன் நண்பர்களைத் தேர்வு செய்யும்போது தயவு செய்து உடனிருங்கள். ஏன் வெள்ளைக் கரங்களையே பற்றிக்கொள்கிறாய்? ஏன் உன்னைப் போலிருப்பவர்களோடும் உன்னைப்போல் சிந்திப்பவர்களோடும் மட்டும் இணைந்திருக்கிறாய்? பெண்களோடு பழகுவதற்கு ஏன் தயங்குகிறாய் என்று அவன் போதாமைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.

அவன் நிச்சயம் தடுமாறுவான். நிச்சயம் கீழே விழுவான். தடுக்காதீர்கள். அவனாகவே எழுந்திருக்கட்டும். அவனுக்கான பாடங்களை அவனே கற்றுக்கொள்ளட்டும். அன்பால் அவனை நிரப்புங்கள். அவன் புலன்களைக் கூர்மைப்படுத்துங்கள். அவனை அகலப்படுத்துங்கள். அவன் இதயத்துக்குள் ஒளியைப் பாய்ச்சுங்கள். ஒரு மனிதனாக அவனை என்னிடமும் இந்த உலகிடமும் திருப்பித் தாருங்கள்.

நன்றி.

அன்புடன்
ஆபிரகாம் லிங்கன்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்