சித்திரக்கதை: பல்லு தேய்க்காத பலசாலி

By மு.முருகேஷ்

பேருதான் காட்டு ராஜா. ஆனா, உலக மகா சோம்பேறியா இருந்துச்சு அந்த சிங்கராஜா.

எப்பப் பாத்தாலும் தூங்கிக்கிட்டே இருக்கும். எழுந்து ஒருநாளும் வேட்டைக்குப் போனதே கிடையாது. யாராவது வேட்டையாடிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தா, அதை மிரட்டிப் பிடுங்கிச் சாப்பிடுறதில மட்டும் படுகில்லாடி.

கண்ணைத் திறந்தா தூக்கம் போயிடுமேன்னு, நாள் கணக்கா கண்ணை மூடித் தூங்கிக்கிட்டே இருந்துச்சு சிங்கராஜா.

சிங்கராஜாவுக்கு அவுங்க அம்மா, அப்பா எவ்வளவோ புத்திமதி சொன்னாங்க. யார் சொன்னதையும் கேட்கவேயில்லை.

அந்தக் காட்டுக்கு ஒரு முனிவர் வந்தாரு. சிங்கராஜா இப்படிச் சோம்பேறியா இருக்கிறதைப் பாத்தாரு முனிவர். ஏதாவது ஒரு வழி செஞ்சு, இந்தச் சோம்பேறி ராஜாவைத் திருத்தணும்னு நினைச்சாரு.

அடுத்த நாள்-

“சிங்கராஜா, சிங்கராஜான்னு...” கூப்பிட்டாரு முனிவர்.

கண்ணைத் திறக்காமலேயே “ம்...என்ன சொல்லுங்க...?” அப்படீன்னுச்சு சிங்கராஜா.

“சிங்கராஜா, நீங்க உலக மகா வீரன்னு எனக்குத் தெரியும். நீங்க எவ்வளவுக்கெவ்வளவு தூங்குறீங்களோ, அவ்வளவு வீரம் உங்க உடம்பில சேரும். இதைத் தெரியாதவங்கதான் உங்களைச் சோம்பேறின்னு திட்டுறாங்க. நீங்க உங்க விருப்பம்போல தூங்குங்க. ஆனா, ஒண்ணை மட்டும் தினமும் காலையிலே மறக்காம செஞ்சிடுங்க...!” அப்படின்னு தயங்கித் தயங்கி முனிவர் சொன்னாரு.

“என்ன செய்யணும், சொல்லுங்க...?” என்று கேட்டுச்சு சிங்கராஜா.

உடனே, முனிவர், “தினமும் காலையில எழுந்து நீங்க பல்லைத் தேய்ச்சிட்டு, அப்புறமா உங்க விருப்பம்போல தூங்குங்க. நீங்க அப்படிச் செஞ்சா உங்களோட பலம் என்னைக்கும் குறையவே குறையாது..”ன்னு சொன்னாரு.

“ப்பூ, இவ்வளவுதானா! இனிமே செஞ்சாப் போச்சு...!”என்றபடி கண்ணை மூடிப் படுத்திடுச்சு சிங்கராஜா.

மறுநாள் காலையில எப்படியோ கண்ணை லேசா கசக்கிக்கசக்கி விழிச்சிடுச்சு. ஆனா, பல்லைத் தேய்க்கிறது பெரிய அலுப்பா இருந்துச்சு சிங்கராஜாவுக்கு.

‘என்ன செய்யலாம்?’ யோசிச்சது சிங்கராஜா.

சட்டுனு அதுக்கொரு யோசனை தோணுச்சு. உடனே, காடு முழுக்க அந்த அறிவிப்பைச் செய்யச் சொன்னது.

“நாளையிலேர்ந்து காட்டில உள்ள விலங்குகள்ல தெனமும் யாராவது ஒருத்தரு வந்து, சிங்கராஜாவுக்குப் பல் தேய்ச்சி விடணும்...இது சிங்கராஜாவோட உத்தரவு….!”

அறிவிப்பால் காடே கிடுகிடுத்தது. சிங்கராஜாவுக்குப் போய் யார் பல் தேய்த்து விட முடியும்? எல்லா விலங்குகளும் பயந்து நடுங்கிச்சு.

அடுத்த நாள் -

ஒரு குட்டி முயல் மட்டும் துணிஞ்சு வந்துச்சு.

“சிங்கராஜாவுக்கு நான் பல் தேய்த்து விடுகிறேன்...”என்று சொன்னுச்சு.

அடுத்த நாள் விடிகாலையிலேயே போய், சிங்கராஜாவை எழுப்பிடுச்சு குட்டி முயல்.

தூங்கிக்கிட்டிருந்த சிங்கராஜா, “அதற்குள்ள என்ன அவசரம்?”ன்னு கண்ணைத் திறக்காமலேயே சிணுங்கிச்சு.

“சூரியன் வர்றதுக்குள்ளே விடிகாலையிலேயே பல்லைத் தேய்ச்சுக்கணும். அப்படிச் செஞ்சாத்தான் உங்க உடம்பிலுள்ள பலம் என்னைக்கும் குறையாது...ராஜா!” என்று சொன்னுச்சு குட்டி முயல்.

வேறு வழியில்லாம உடம்பை முறுக்கிக்கிட்டு எழுந்திடுச்சு சிங்கராஜா.

“உங்க பல்லைத் தேய்க்கிற அளவுக்குப் பெரிய வேப்பங்குச்சியை என்னால உடைக்க முடியாது. நீங்கதான் எனக்கு உடைச்சித் தரணும்...”அப்படீன்னு குட்டி முயல் கேட்டுச்சு.

சிங்கமும் பக்கத்திலிருந்த மரத்திலிருந்து, ஒரு பெரிய வேப்பங்குச்சியை ஒடிச்சிக்கிட்டு வந்துச்சு. அதை வாங்கிய குட்டி முயல், “ம்ம்...வாயைத் திறங்க...” ன்னு சொன்னுச்சு.

சிங்கராஜாவும் ‘ஆ’ன்னு பெரிசா வாயைத் திறந்துச்சு.

இதுதான் சமயம்னு வாய்க்குள்ளே போச்சு குட்டி முயல். பெரிய வேப்பங்குச்சியால சிங்கத்தின் இடப்பக்க கன்னத்திலும், வலப்பக்க கன்னத்திலும் மாறிமாறிக் குத்திச்சு.

சிங்கராஜாவால் வலி பொறுக்க முடியலே. “அய்யோ...நீ என்ன பண்றே...?”என்று கத்திச்சு சிங்கராஜா.

“ராஜா, உங்க உருவமோ ரொம்ப பெரிசு. நானோ குட்டி முயல், நான் இப்படி ரெண்டு பக்கமும் பலமா அழுத்தித் தேய்ச்சாத்தான் உங்க பல்லு நல்லா சுத்தமாகும். உங்க உடம்புல உள்ள வீரமும் குறையாம இருக்கும்”ன்னுச்சு குட்டி முயல்.

சிங்கராஜாவால் எதுவும் மறுத்துப் பேச முடியலே. குட்டி முயல் வேப்பங்குச்சியால் சிங்கராஜாவின் வாயை கண்டபடி குத்திக் காயப்படுத்திடுச்சு.

இன்னியோட நாலு நாளாச்சு. சிங்கராஜாவால் வாயைக்கூட திறக்க முடியலே. வாயெல்லாம் ஒரே காயம். தூக்கமே வரலே. முணகிக்கொண்டே படுத்திருந்துச்சு சிங்கராஜா.

“ பல்லைத் தேய்க்க சோம்பேறிப்பட்டு, இப்படி ஆயிடுச்சே.. என்னோட பல்லை நானே தேய்ச்சிருந்தா, என் வாயைப் புண்ணாகி இருக்குமான்னு” நினைச்சிக்கிட்டே சிங்கராஜா முணகியது.

எப்போதும் தூங்கிக்கிட்டே இருக்குற சிங்கராஜா இப்போது முழுச்சுக்கிட்டு இருக்குறத காட்டுல இருக்குற விலங்குகள் எல்லாம் ஒளிந்திருந்து அதிசயமா பார்த்துச்சுங்க.

அப்போ அங்க வந்த முனிவர், “சோம்பேறியா இருந்தா பெருங்கஷ்டம் வரும்கிறதை சிங்கத்தைப் பார்த்து புரிஞ்சுக்கிட்டா சரின்னு எல்லா விலங்குகளுக்கும் சொல்லிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார்.

ஓவியம்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்