சித்திரக்கதை: மனம் மாற்றிய கூண்டுப் பறவை

By செய்திப்பிரிவு

செர்யோஷாவுக்கு அன்று பிறந்த நாள். அன்று நிறையப் பரிசுகள் கிடைத்தன.பம்பரங்கள்,சாய்ஞ்சாடும் குதிரை, படங்கள் என இன்னும் நிறையப் பரிசுகள். அவற்றில் பறவை பிடிக்கும் கூண்டும் ஒன்று. அவன் மாமா பரிசாகக் கொடுத்த இந்தப் பரிசை, மிகச்சிறந்த பரிசாகக் கருதினான் செர்யோஷா. சிறிய மரச்சட்டத்தில் வலை அடித்த கூண்டு அது.

கொஞ்சம் தானியங்களை உள்ளே போட்டுக் கூண்டைத் தோட்டத்தில் வைத்துவிட்டால் போதும். தானியங்களைத் தின்பதற்கு ஏதாவது ஒரு பறவை உள்ளே வந்ததும் அதன் மரக் கதவு தானாக மூடிக்கொள்ளும்.செர்யோஷாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவனுடைய அம்மாவிடம் காட்டுவதற்கு ஓடினான்.

அவள் அதைப் பார்த்துவிட்டு, “ரொம்ப மோசமான விளையாட்டுச் சாமான் இது. ஏன் பறவைகளைப் பிடித்துத் துன்பப் படுத்தணும்?” என்று செர்யோஷைப் பார்த்துச் சொன்னாள்.

அவன், ‘‘நான் அவற்றைப் பிடித்துக் கூண்டில் அடைச்சு வைப்பேன். அவை எனக்காகப் பாடும். நான் அதுகளுக்குச் சாப்பாடு கொடுப்பேன்” என்றான்.

செர்யோஷா கொஞ்சம் தானியங்களை அந்தக் கூண்டுக்குள் போட்டு, அதைக் கொண்டு போய்த் தோட்டத்தில் வைத்தான். அவன் ரொம்ப நேரமாகக் காத்திருந்தான்.ஒரு பறவையும் வரவில்லை.

அவனைப் பார்த்துப் பறவைகள் பயந்தன. கூண்டின் அருகில் கூடப் பறக்கவில்லை. செர்யோஷா இரவு உணவுக்காக வீட்டிற்குள் போய்விட்டான். கூண்டைத் தோட்டத்திலேயே விட்டு விட்டான். சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் போது கூண்டு அடைபட்டு இருந்தது. ஒரு சிறிய பறவை முட்டி மோதிக் கொண்டிருந்தது. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தபடி செர்யோஷா கூண்டைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போனான்.

“அம்மா, இங்கே பாருங்க! நான் ஒரு பறவையைப் பிடிச்சிட்டேன். அநேகமா அது நைட்டிங்கேலாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அதோட இதயம் எப்படித் துடிக்குது பாருங்க” என்று அவன் சொன்னான்.

அம்மா அவனிடம், ‘‘இது பாடும் சிஸ்கின் பறவை. அதைத் துன்பப்படுத்தாதே. கூண்டைத் திறந்து அதைப் போக விடு” என்று சொன்னாள்.

‘‘இல்லம்மா, நான் அதுக்குச் சாப்பாடு கொடுப்பேன்.குடிக்கத் தண்ணீரும் கொடுப்பேன்”என்றான் செர்யோஷா.

அவன், சிஸ்கினை கூண்டில் அடைத்து, அதற்குத் தானியங்களும் தண்ணீரும் வைத்தான். ஒரு இரண்டு நாட்களுக்குத் தினமும் கூண்டைச் சுத்தம் செய்தான். ஆனால் மூன்றாவது நாள் அவன் அந்தச் சின்னப் பறவையை மறந்தே போனான். தண்ணீர் மாற்றவும் தீனி போடவும் மறந்து போனான்.

“பாத்தியா, நான் சொன்னேன்ல, நீ அந்தப் பறவையை மறந்துட் டீல்ல. அதை வெளியில விட்டிரு” என்று அம்மா மீண்டும் சொன்னாள்.

உடனே செர்யோஷா, “இல்லை..நான் மறக்கலை. இதோ..நான் உடனே கூண்டைச் சுத்தம் செய்து, தண்ணீர் மாத்தப் போறேன்” என்று சொன்னான். கூண்டுக்குள் கையை விட்டு அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். பயந்து போன சிஸ்கின், கூண்டுக் கம்பிகளில் முட்டி மோதியது. செர்யோஷா கூண்டைச் சுத்தம் செய்து முடித்துவிட்டுத் தண்ணீர் எடுத்து வரச் சென்றான். அவன் கூண்டை மூடாமல் போய் விட்டதை அம்மா கவனித்தாள்.

அவள், செர்யோஷாவைக் கூப்பிட்டாள், ‘‘செர்யோஷா! கூண்டை மூடிட்டுப் போ! இல்லேன்னா அந்தப் பறவை வெளில போய்க் காயப்படுத்திக்கப் போகுது..”

அவள் சொல்லி முடிக்கும் முன்பே அந்தச் சிறிய சிஸ்கின் கூண்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டது. அதன் வழியே சந்தோஷமாகத் தன் சிறிய சிறகுகளை விரித்துப் பறந்தது. சன்னலைத் தேடி அறையெங்கும் அலைந்தது. சன்னலில் கண்ணாடி இருப்பது தெரியாமல் வேகமாக அதில் முட்டியது. அப்படியே சன்னலின் அடியில் பொத்தென்று விழுந்தது.

செர்யோஷா ஓடி வந்து அதைத் தூக்கிக் கூண்டுக்குள் வைத்தான். சிஸ்கின் உயிருடன் இருந்தது. அது சிறகுகளை விரித்து மூச்சு திணறலோடு கிடந்தது. செர்யோஷாவுக்கு அதைப் பார்த்துப் பார்த்துக் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“அம்மா! நான் என்ன செய்ய?” என்று அழுதுகொண்டே கேட்டான்.

‘‘இனி உன்னால ஒண்ணும் செய்ய முடியாது” என்று அம்மா சொன்னாள்.

செர்யோஷா நாள் முழுதும் அந்தக் கூண்டின் அருகிலேயே, சிஸ்கின் வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவு அவன் படுக்கப் போகும்போது அது உயிருடனே இருந்தது.அவனுக்கு ரொம்ப நேரமாய்த் தூக்கம் வரவில்லை. கண்களை மூடும் போதெல்லாம் சிஸ்கின் மூச்சு திணறலோடு துடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. காலையில் எழுந்ததும் கூண்டை நோக்கி ஓடினான். அங்கே சிஸ்கின் தன் சிறிய கால்கள் விரைத்திருக்க இறந்து கிடந்தது.

அதன் பிறகு செர்யோஷா பறவைகளை ஒரு போதும் பிடிக்க முயற்சிக்கவில்லை.

தமிழில்: உதயசங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்