இடம் பொருள் மனிதர் விலங்கு: ஆப்பிரிக்கா ஏன் இப்படி இருக்கிறது?

By மருதன்

பசி எடுக்கிறது. வீட்டுக்குள் சென்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. என்ன செய்யலாம்? பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று கடன் கேட்கலாம் என்றால் அவரும் வாசலில் வந்து பாவமாக நின்றுகொண்டிருக்கிறார். ஒருவரிடமும் பணமில்லை. எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கும் வேலை இல்லை. ஒருவருக்கும் உருப்படியான வீடு இல்லை. ஒருவருக்கும் நல்ல துணிகள் இல்லை. இருந்தாலும் பசி எடுக்கத்தானே செய்கிறது?

அவர்களுக்குத் தெரிந்த வழி ஒன்றுதான். வீட்டிலுள்ள குழந்தையை வேலைக்கு அனுப்புவது. ஐந்து வயதானால் போதும், அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடவேண்டும். வீட்டுக்குப் பக்கத்தில் நிலம் இருந்தால் அங்கே சென்று பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கவேண்டும். குளம், ஆறு, நதி அருகில் இருந்தால் படகில் ஏறி பெரியவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கவேண்டும். பக்கத்தில் நகரங்கள் இருந்தால் சாலை ஓரத்தில் அமர்ந்து ஷூ பாலிஷ் போடவேண்டும்.

சில குழந்தைகளைச் சுரங்கங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். பெரிய பெரிய குழிகளில் இறங்கி, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று, மண்ணைத் தோண்டவேண்டும். அல்லது கல்லை உடைக்கவேண்டும். அல்லது, உடைந்த கற்களை, மண்ணைச் சுமந்துவந்து வெளியில் கொட்டவேண்டும்.

இந்த வாய்ப்புகள்கூட கிடைக்காத பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய உடல் மெலிந்திருக்கும். ஒரு சின்ன கரண்டியைக்கூட தூக்கமுடியாது. இப்படிப்பட்டவர்கள் கையில் ஒரு தட்டைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். உணவு, காசு என்று எது கிடைத்தாலும் சரி.

இந்தக் குழந்தைகள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய குறைந்தபட்ச வயது 5. அதிகபட்ச வயது 17. பாடப் புத்தகங்களையும் பேனா, பென்சிலையும் ஒருமுறைகூட நேரில் பார்க்க முடியாமல் இப்படி எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் தெரியுமா? ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள்.

அங்கோலா, போட்ஸ்வானா, காங்கோ, எத்தியோப்பியா, கென்யா, நைஜீரியா என்று தொடங்கி ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இந்தக் குழந்தைகளை நீங்கள் பார்க்கலாம். உலகம் முழுக்க இப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஆப்பிரிக்காவில்தான் இவர்களுடைய எண்ணிக்கை அதிகம். ஆப்பிரிக்காவில்தான் ஆபத்தான பல வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதில் விநோதம் என்ன தெரியுமா? உலகிலேயே அதிக இயற்கை வளங்கள் ஆப்பிரிக்காவில்தான் இருக்கின்றன. அதிக வளம் என்றால் அதிகப் பணம். அதிகப் பணம் என்றால் அதிக வளர்ச்சி. அதிக வளர்ச்சி இருக்கும் இடத்தில் அதிக மகிழ்ச்சி. இப்படித்தான் நாம் நினைப்போம் அல்லவா? ஆனால் ஆப்பிரிக்காவுக்கு மட்டும் இதெல்லாம் ஏன் பொருந்தவில்லை?

இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஆப்பிரிக்காவில் ஏன் குழந்தைகள் ஷூ பாலிஷ் போடவேண்டும்? தங்கமும் வைரமும் பிளாட்டினமும் கொட்டிக் கிடக்கும் ஒரு கண்டத்தில் ஏன் இப்படியொரு பரிதாபமான நிலை? நிலக்கரி, எண்ணெய், கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் ஏன் மக்களுக்கு வசிக்க வீடு இல்லை?

உலகிலேயே அதிகமான ஏழைகள் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வாழ்கிறார்கள். அதிகப் பிரச்சினைகளை ஆப்பிரிக்க மக்கள்தான் சந்திக்கிறார்கள். அதிக நோய்கள் அவர்களைத்தான் தாக்குகின்றன. கலகங்களும் கலவரங்களும் உள்நாட்டுப்

போர்களும் அங்கேதான் அதிகம் நடைபெறுகின்றன. ஏன்?

இப்படி யோசியுங்கள். ஏன் ஒரு நாடு பணக்கார நாடாகவும் இன்னொன்று ஏழை நாடாகவும் இருக்கிறது? இதையே வேறு மாதிரியாகவும் கேட்கலாம். ஒரு நாடு பணக்கார நாடாக இருப்பதற்கும் இன்னொன்று ஏழை நாடாக இருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

இருக்கிறது என்கிறது ஆப்பிரிக்கா. எது ஆப்பிரிக்காவின் பலமோ அதுவே அதன் பலவீனமாகவும் மாறிவிட்டது. தங்கமும் வைரமும் பிளாட்டினமும் மலை மலையாக இருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு மற்ற நாடுகள் சும்மா இருக்குமா?

மெல்ல மெல்ல ஆப்பிரிக்காவுக்குள் அந்நியர்கள் நுழைய ஆரம்பித்தார்கள். இது உனக்கு, அது எனக்கு என்று பங்கு போட ஆரம்பித்தார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலும் பழங்குடி மக்களே இருந்தனர் என்பதால் சுலபமாக அவர்களைத் தோற்கடிக்க முடிந்தது. 1870-ம் ஆண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் 10 சதவிகிதம் காலி. 1914-ம் ஆண்டுக்குள் 90 சதவிகித ஆப்பிரிக்காவை வெளி நாடுகள் விழுங்கிவிட்டன. ஆப்பிரிக்காவின் வளமும், ஆப்பிரிக்காவின் பலமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஆப்பிரிக்காவை விழுங்கிய பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் வேக வேகமாக வளர ஆரம்பித்தன. ஆப்பிரிக்காவில் ஏழைகள் அதிகமாகிக்கொண்டே போனார்கள். அடிமைப்படுத்திய நாடுகளிலோ பணக்காரர்கள் அதிகமாகிக்கொண்டே போனார்கள்.

ஆப்பிரிக்காவை அபகரித்ததன்மூலம் மட்டும்தான் இந்த நாடுகள் பணக்கார நாடுகளாக மாறின என்று சொல்ல முடியாது. அதேபோல், அந்நியர்களின் ஆக்கிரமிப்புகள் மட்டுமே ஆப்பிரிக்காவின் ஏழ்மைக்குக் காரணம் என்றும் சொல்ல முடியாது.

இருந்தாலும் ஒரு விஷயம் முக்கியம். வளம், வறுமை இரண்டுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது. ஆப்பிரிக்காவின் நிலைமை மாறவேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

விளையாட்டு

24 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்