பொடி வைத்துப் பேசும் குட்டிப் பொடியர்கள்

By கிங் விஸ்வா

உங்களுக்கு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் தொடர் நினைவிருக்கிறதா? 1950-களில் பெரிதாகப் பேசப்பட்ட உலகமயமாக்கலுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். சுதந்திரத்தைப் பெரிதாக மதிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் குணாதிசயங்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட தொடர். அதன் அரசியலைப் புரிந்துகொண்ட பிரான்ஸ் மக்கள், உடனடியாக ஆஸ்ட்ரிக்ஸை தங்கள் ஆதர்ச நாயகனாக அங்கீகரித்து, பெருவெற்றி பெற வைத்தனர். அதைப்போலவே ஒரு நுணுக்கமான அரசியலை முன்வைத்து 1958-ல் உருவாக்கப்பட்ட இன்னொரு காமிக்ஸ் தொடர்தான் ஸ்மர்ஃப்ஸ் (Smurfs).

ஸ்மர்ஃப்ஸ் என்றால்?

இந்த வார்த்தை உருவான விதம் ஒரு சுவாரசியமான கதை. ஒருநாள் மதிய உணவருந்தும்போது, மேஜை மீதிருந்த உப்பை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டார் காமிக்ஸ் ஓவியர் பேயோ. ஆனால், உப்புக்கான வார்த்தையைச் சொல்லாமல், “அந்த ஸ்மர்ஃபைக் கொஞ்சம் கொடுங்களேன்?” என்று கேட்க, அவருடன் இருந்த மற்றொரு படைப்பாளி ஆந்த்ரே ஃபிரான்ஃக்வினும் இந்த வார்த்தை விளையாட்டில் சேர்ந்துகொண்டார். “சரி, அப்படியானால் முதலில் நான் ஸ்மர்ஃபிவிட்டு, பிறகு நீங்கள் இதை ஸ்மர்ஃபலாமா?” என்று கேட்டார். அதன்பிறகுதான் இத்தொடரின் ஆரம்பப் புள்ளி உருவானது.

எல்லாச் சொற்களுக்கும் பொதுவான அர்த்தம் என்று ஒன்று இருந்தாலும், இத்தொடரைப் பொறுத்தவரையில், ஸ்மர்ஃப் என்றால் ‘ஏதாவது செய்வது’ என்றுதான் அர்த்தம். இந்த ஸ்மர்ஃபுக்கு உரிய தமிழ் வார்த்தையாக ‘பொடிவது’ (பொடி வைத்துப் பேசுவது) என்று வைத்துக்கொண்டால், ‘நான் இன்று பொடியப் போகிறேன்’ என்று சொன்னால், நீங்கள் செய்யப்போகும் ஒரு செயலைக் குறிக்கும். நான் தூங்கப் போகிறேன் என்பதை ‘நான் பொடியப் போகிறேன்’ என்றுதான் ஸ்மர்ஃப்ஸ் சொல்வார்கள்.

யார் இந்த ஸ்மர்ஃப்ஸ்?

1950-களில் பிரெஞ்சு காமிக்ஸ் படைப்பாளியான பேயோ ‘ஜோஹான் & பீவிட்’ என்கிற தொடரை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஒரு வீரன், அவனது குள்ள நண்பனின் சாகசங்களைக் கொண்ட இத்தொடரில், ஒரு குறிப்பிட்ட கதையில் அவர்களுக்கு உதவுவதற்காக நீல நிறத்திலான தோலைக் கொண்ட, வெள்ளை உடை உடுத்தி ஒரே மாதிரித் தோற்றமளிக்கும் குள்ளர்களை உருவாக்கினார். அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு, அவர்களுக்கு என்றே தனியாக ஒரு கதைத்தொடரை ஆரம்பித்தார், பேயோ. அதுதான் ‘ஸ்மர்ஃப்ஸ்’. இதுவரையில் வந்துள்ள இந்தப் பொடியர்களின் 31 காமிக்ஸில், 16 கதைகளை அவரே முழுமையாகத் தயாரித்தார். மற்றவை, அவரது நேரடி மேற்பார்வையில் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டன.

குள்ளர்களின் உலகம்

அடர்ந்த காட்டுக்குள்ளே காளான்களால் ஆன வீடுகளில் வசிப்பவர்கள்தான் இந்தப் பொடியர்கள். அனைவரும் ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும், குணாதிசயத்தைப் பொருத்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர் உண்டு. சோம்பேறிப் பொடியன், புத்திசாலிப் பொடியன், கோபக்கார பொடியன், வெறுப்பு காட்டும் பொடியன் என்று பலர். தலைவராக இருப்பவர் வயதான ‘பாபா ஸ்மர்ஃப்’. இவர்கள் அனைவரும் கூட்டாக வாழும் வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது, அனைவருக்காகவும் ஒன்றாகச் சமைப்பது, ஒன்றாக உணவு சேகரிப்பது என்று குழுவாகவே அனைத்து வேலைகளையும் பகிர்ந்துகொண்டு செய்வார்கள். முழுக்க முழுக்க ஆண்களை மட்டுமே கொண்ட இக்குழுவில் குழப்பம் விளைவிப்பதற்காக இவர்களின் எதிரி காரமெலால் உருவாக்கப்பட்ட ஒரே பெண் கதாபாத்திரம்தான் ‘பொடினி’.

ஸ்மர்ஃப் படம்

இதுவரையில் இரண்டு கார்ட்டூன் அனிமேஷன் படங்கள் வந்திருந்தாலும், இந்த வாரம் வெளியாக உள்ள ‘Smurfs The Lost Village’ படத்திலிருந்து, கதையை ஆரம்பக் கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றனர். இந்த மூன்றாவது படம் ஒரு ஜாலியான தேடல் படலம். புத்திசாலிப் பொடியன், சொதப்பல் பொடியன், பலசாலிப் பொடியன் ஆகிய மூவரின் துணையுடன் பொடினி செய்யும் சாகசங்கள்தான் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம். பொடியர்களை அழித்துவிட்டு, உலகிலேயே மிகச் சிறந்த மந்திரவாதியாக மாறத் துடிக்கும் காரமெல், அதற்கு அவன் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள், பாபா ஸ்மர்ஃபின் பேச்சைக் கேட்காமல், கிராமத்தை விட்டு வெளியேறும் பொடினியும் மூன்று பொடியர்களும் என்ன மாதிரியான சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதையும், பிறகு அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதும்தான் கதை.

பொடியர்கள் தலையில் அணிந்தி ருக்கும் தொப்பி, பழங்கால ரோமானியர்களின் தொப்பி போல இருக்கும். இந்தத் தொப்பி, ஒருவகையில் சுதந்திரத்தைக் குறிக்கும். உலகமயமாக்கலுக்கு எதிரான தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கான உருவகமாக இந்தத் தொப்பியைப் பேயோ பயன்படுத்தி இருந்தார். அந்தச் சுதந்திரமான தேடல் தற்கால வாழ்க்கை சார்ந்தும் தேவைப்படுகிறது என்பதால், இப்போதும் அந்தத் தொப்பி முக்கியமான ஒன்றாகவே திகழ்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

23 mins ago

சுற்றுச்சூழல்

29 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்