சித்திரக் கதை: அணிலுக்கு வந்த ஞானோதயம்!

By கீர்த்தி

மரப்பொந்து ஒன்றில் அப்பு என்ற ஒரு அணில்குட்டி இருந்தது. அப்புவின் அம்மா, அப்பா அணில்கள் அப்புக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தன. இரண்டு அணில்களும் வெளியே போய்ச் சுவையான பழங்கள், கொட்டைகள் எல்லாம் கொண்டுவரும். அப்பு ஜாலியாகச் சாப்பிட்டுவிட்டு விளையாடும். அப்பு எந்த வேலையும் செய்யாது. எதற்கெடுத்தாலும் பிடிவாதக் குணமும் இருந்தது.

அப்பு கொஞ்சம் வளர்ந்தது. ஒரு நாள் அப்பா அணில் அப்புவிடம், “அப்பு! இனி நீ வெளியே போய் உணவு தேடப் பழகிக்கோ” என்று அறிவுரை சொன்னது.

“போங்கப்பா! அதுக்குத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே. நான் ஏன் தேடணும்?” என்று சொல்லி அப்பு சிரித்தது.

அப்பு சொன்னதைக் கேட்டு அம்மா, அப்பா அணில்களுக்கு வருத்தம் வந்தது. ‘சரி, நாளாக நாளாக அப்பு மாறுவான்’ என்று தம்மைத் தாமே அவை சமாதானம் செய்துகொண்டன. நாட்கள் கடந்தன. ஆனால், அப்பு மாறவேயில்லை.

அப்புவுக்குக் கயல், குஞ்சம்மா என்ற இரு காகங்கள் நண்பர்களாக இருந்தன. அப்பு எப்போதும் நன்றாகத் தின்று, தூங்கி, காகங்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கும். ஒருநாள் அப்புவின் அம்மா, அப்பா அணில்கள் உணவு தேடி வெளியே போய்விட்டன. அப்போது கயலும் குஞ்சம்மாவும் அப்புவைப் பார்க்க வந்தன.

“அப்பு! எவ்ளோ நாள்தான் இங்கேயே நாம் விளையாடுறது? நாம எங்காவது தூரமாய்ப் போய்ட்டு வரலாம்” என்றன.

காகங்கள் சொன்னதும், அப்புவுக்கு வெளியே போக ஆசை வந்தது. “சரி! போகலாம். நீங்கள் பறந்து போவீர்கள். நடந்து வந்தால் எனக்குக் கால் வலிக்குமே” என்றது.

அதற்குக் கயல், “ஒண்ணு செய்யலாம். ஓலையில் ஒரு குட்டிக் கூடை செய்வோம். அதில் நீ ஏறிக்கோ. நாங்கள் கூடையைத் தூக்கிக்கிறோம். நீ ஜாலியா வரலாம்” என்று சொன்னது.

கயல் யோசனை அப்புவுக்குப் பிடித்தது. கஷ்டமில்லாமல் ஊரைச் சுற்றலாம் என்று நினைத்த அப்பு, “அப்படியே செய்யலாம்” என்றது.

கயலும் குஞ்சம்மாவும் சிறிய கூடையைச் செய்தன. அப்பு அந்தக் கூடையில் ஏறிக்கொண்டது. கயலும் குஞ்சம்மாவும் கூடையைத் தூக்கிக்கொண்டு பறந்தன. அப்பு விமானத்திலிருந்து பார்ப்பதுபோல, கீழே பார்த்து ரசித்தது.

ரொம்ப தூரம் பறந்த கயலும் குஞ்சம்மாவும் களைத்துப் போயின. அப்படியே தரையில் இறங்கி, கூடையை இறக்கி வைத்தன. அப்பு கூடையிலிருந்து வெளியே வந்தது. மூன்றும் கொஞ்சநேரம் ஓய்வெடுத்தன. பிறகு காகங்கள் இரை தேடிச் சென்று சாப்பிட்டன.

அப்புவுக்குப் பசி தாங்க முடியவில்லை. அப்புவுக்குத்தான் உணவு தேடிப் பழக்கமே இல்லையே. அது கயலிடம், “நண்பா! எனக்குப் பசிக்குது. நீங்க எனக்கு ஏதாவது உணவு தேடிக் கொடுங்க” என்றது.

“அப்பு! இவ்ளோ தூரம் உன்னை நாங்க தூக்கிக்கிட்டு வந்ததே பெரிய விஷயம். உணவு வேறு தேடணுமா? நீயே தேடிக்கோ” - என்றன கயலும் குஞ்சம்மாவும்.

“அப்புறம் ஏன் என்னைக் கூட்டிட்டு வந்தீங்க?” என்று கோபத்தோடு கேட்டது அப்பு.

“நீ வரேன்னு சொன்னதால கூட்டிட்டு வந்தோம். பிடிக்கலைன்னா நீ ஏன் வந்த?” என்று அவை பதிலுக்குக் கேட்டன.

உடனே அப்பு “உங்கள நம்பி வந்தேனே. இங்கிருந்து போய்டுங்க” என்று கோபமாகப் பேசியது. அப்பு தங்களைத் திட்டியதால் வருத்தடைந்த கயலும் குஞ்சம்மாவும் பறந்து போயின.

அப்புவுக்கோ பசி கூடியது. ஐயோ! எனக்கு உணவு தேடத் தெரியாதே. காகங்கள் இப்படி என்னை தொலைதூரத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார்களே என்று நினைத்த அது, நடக்க ஆரம்பித்தது.

அப்போது, “தம்பி… ” என்று அழைக்கும் குரல் கேட்டு அப்பு திரும்பியது. ஒரு வாதுமை மரம் அப்புவைப் பார்த்துச் சிரித்தது.

“மரமே! நீயா கூப்பிட்டாய்?” என்று கேட்டது அப்பு.

“நான்தான் கூப்பிட்டேன். உனக்குப் பசிக்கிறதா? வா! இந்தா பிடி வாதாம் கொட்டைகள். நீ சாப்பிடு” என்று சொன்னதும், வாதாம் கொட்டைகளை உடனே வாங்கித் தின்றது அப்பு. இப்போதுதான் அதற்குக் கொஞ்சம் தெம்பு வந்தது.

“மரமே! முன்பின் தெரியாத எனக்குச் சாப்பாடு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்றது அப்பு.

“அணில் குட்டியே! நீ என் சகோதரன். இங்கே நான் நிற்க உன்னோட பாட்டன் அணிலோ, முப்பாட்டன் அணிலோதான் காரணம். அணில்கள் சில சமயம் பழங்களைத் தின்னுவிட்டு, மீதியை அப்புறம் தின்ன மண்ணில் புதைத்து வைக்கும். ஆனால், புதைத்ததை மறந்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு அணில் புதைத்து வைத்த விதையிலிருந்து வளர்ந்தவன் நான். அப்போ உனக்கு நான் சகேரதரன்தானே?” என்று கேட்டது மரம். அப்பொழுதுதான் அப்புவுக்குத் தம் இனத்தவரைப் பற்றிய உண்மைகள் புரிந்தன.

‘என் அப்பாவும் அம்மாவும் தினமும் உணவு தேடிப் போறாங்க. சில சமயம் பழத்தைப் பறிச்சுப் புதைத்து வைக்கிறாங்க. அவர்கள் அவற்றை மறந்துவிட்டாலும், பின்னாளில் பெரிய மரமாக மாறி, பல உயிரினங்களுக்கு உணவைத் தருதே. என் அம்மா அப்பா என்னை இரை தேடக் கற்றுக்கொள்ளச் சொல்லியும் கேட்காம சோம்பேறியாக இருந்துட்டேனே. இனி அப்படி இருக்கக் கூடாது’ என்று நினைத்த அணில்குட்டி அப்பு, தன்னைப் பற்றிய விஷயங்களை வாதுமை மரத்திடம் சொன்னது.

“போனது போகட்டும்! இனியாவது உணவை நீ தேடிச் சாப்பிடு. மற்றவர்களுக்கும் உதவு. என் மரத்துல கூடு கட்டிப் புறாக்கள் வாழ்கின்றன. அவற்றிடம் உன்னை உன் அம்மா அப்பாவிடம் கூட்டிக்கொண்டு போகச் சொல்கிறேன்” என்று சொன்னது வாதுமை மரம். மரம் சொன்னதும் அப்புவைத் தூக்கி சென்று அதன் பெற்றோரிடம் சேர்த்தன புறாக்கள்.

ரொம்ப நேரம் அப்புவைக் காணாமல் தவித்த அம்மா, அப்பா அணில்கள் அதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தன.

“அப்பா! நீங்கள் உணவு தேடச் சொல்லியும் நான் கேட்கல. இன்னைக்கு அந்தப் பலனை அனுபவிச்சேன். எம்மேல தவறை வைச்சுக்கிட்டு கயலையும் குஞ்சம்மாவையும் விரட்டிவிட்டுட்டேன். இனி நீங்கள் சொல்வதை நான் கேட்குறேன். முதல்ல கயலிடமும் குஞ்சம்மாவிடமும் மன்னிப்பு கேட்டுட்டு வரேன்” என்று சொன்னபடி காகங்களைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்டது.

அப்பு திருந்தியதைப் பார்த்துக் காகங்கள் மகிழ்ச்சிகொண்டன.

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்