ஒளிந்து விளையாடும் சூரியன், பூமி

By வி.தேவதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னால் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அன்றைய தினம் நிலா டீச்சர் குடும்பத்தினரும் சந்திரன் உதயமானவுடனேயே மொட்டை மாடியில் நின்று பார்த்தனர். பௌர்ணமி நிலவையே அவர்களால் பார்க்க முடிந்தது. கிரகண நிலவைப் பார்க்க முடியவில்லை.

என்றாலும், மொட்டை மாடியிலே உட்கார்ந்துகொண்டு கிரகணம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டு கவினும், ரஞ்சனியும் நிலா டீச்சரைத் துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.

“அம்மா சந்திர கிரகணம்னா என்னன்னு முதல்ல சொல்லுங்கம்மா” என்றான் கவின்.

“பூமியோட நிழல் சந்திரன் மேல விழும். அதான் சந்திர கிரகணம்” என்றார் நிலா டீச்சர்.

“ஒண்ணுமே புரியல. வெளக்கமா சொல்லுங்கம்மா” என்றாள் ரஞ்சனி.

பௌர்ணமியும் அமாவாசையும்

“சரி சொல்றேன். கிரகணம் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி நிலாவோட இயக்கத்தைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும். நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு உங்களுக்குத் தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.

பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலா வோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் ‘அமாவசை’னு சொல்றோம்.

அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம். ஒரு கட்டத்துல பூமியோட இன்னொரு பக்கத்துக்கு நிலா வந்திடும். அப்போ சூரியன பார்த்துகிட்டு இருக்கும் மொத்த பரப்புலயும் சூரிய ஒளிபட்டு எதிரொளிக்கும்போது முழு நிலவை, அதாவது பௌர்ணமியைப் பார்க்கலாம்.

அப்புறம் தொடர்ந்து நகர நகர நிலா மேலே சூரிய ஒளி படுற பரப்பு குறைஞ்சுகிட்டே போகும். அதனால சூரிய ஒளியை எதிரொலிக்கிற நிலவோட பரப்பும் குறைஞ்சுகிட்டே போறதாலே, நாளுக்கு நாள் நிலவு தேயுற மாதிரி இருக்கும். மீண்டும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா வரும்போது, நிலா மேல சூரிய ஒளி விழுறதை நம்மால பார்க்க முடியாது. அதுதான் அமாவாசை தினம்.

இப்படியாகப் பூமியைச் சுத்தி நிலா தொடர்ந்து நகர்ந்துகிட்டே இருக்கும். அமாவாசையும் பௌர்ணமியும் மாத்தி மாத்தி வந்துகிட்டே இருக்கும்.

கிரகணங்கள்

இப்படிச் சுத்தி வர நிலா எப்போதாவது மட்டும்தான் சூரியன், பூமி இருக்குற ஒரே நேர்க்கோட்டுல வரும். அப்படி வரும்போது கிரகணம் ஏற்படும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது நேர்க்கோட்டில் வந்தா, அந்த நாள்ல சூரிய கிரகணம் நடக்கும். அன்னைக்குப் பூமிக்கு வரும் சூரிய ஒளியை நிலா மறைக்கும். இது அமாவசை அன்னைக்குத்தான் நடக்கும்.

அதேபோல் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டுல வந்தா, அன்னைக்கு நிலா மேல விழும் சூரிய ஒளியைப் பூமி மறைக்கும். அந்த நாளில்

சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். பௌர்ணமி அன்னைக்குத்தான் இது நடக்கும்.

பூமியோட நிழல் படற நேர்க் கோட்டுப் பகுதியில நிலா நுழைய ஆரம்பிச்சதும் கொஞ்சம், கொஞ்சமா அது மறையும். நேர்க்கோட்டுப் பகுதியை விட்டு வெளியே வரும்போது, மீண்டும் நிலா தெரிய ஆரம்பிக்கும். இதுதான் சந்திர கிரகணம்" என்றார் நிலா டீச்சர்.

“முழு கிரகணம், பகுதி கிரகணம் என்றெல்லாம் சொல்றாங்களே அப்படின்னா என்னம்மா” என்றாள் ரஞ்சனி.

“அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரு நேர்க்கோடு வரைஞ்சா, அதே நேர்க்கோட்டுல நிலாவோட மையப் புள்ளி கடந்து போக நேரிட்டால் அன்னைக்கு முழு கிரகணம் ஏற்படும். அப்படியில்லாம நிலாவோட மையப் புள்ளி நேர்க்கோட்டுக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் போகும்போது முழுமையாக மறைக்கப்படாது. அன்னைக்குப் பகுதி கிரகணத்தைதான் பார்க்க முடியும்" என்றார் நிலா டீச்சர்.

ஏன் பார்க்கலை?

“இப்ப வந்துட்டு போச்சே, அந்தச் சந்திர கிரகணத்தை நம்மளால ஏம்மா பார்க்க முடியல” என்று கேட்டான் கவின்.

“அன்னைக்குச் சூரியனுக்கும், பூமிக்குமான நேர்க்கோட்டை நிலா கடந்து போகிற நிகழ்வு என்பது நம்மூர்ல நிலா உதிக்கும் நேரத்துக்கு முன்னாடியே நடந்து முடிஞ்சிடுச்சு. அதனாலதான் அன்னைக்கு நம்மளால பார்க்க முடியல. நமக்குக் கிழக்கே இருக்கக்கூடிய சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகள்ல சூரிய உதயத்தையும், சந்திர உதயத்தையும் நமக்கும் முன்னாடியே பார்க்க முடியும். அதனால, அன்னைக்கு அந்த நாடுகள்ல உள்ள மக்கள் சந்திர கிரகணத்தைப் பார்த்திருப்பாங்க”என்றார் நிலா டீச்சர்.

“நாம இனி சந்திர கிரகணத்தை பார்க்கவே முடியாதா” என்று ஏக்கத்துடன் கேட்டான் கவின்.

“அடுத்தது சூரியன், பூமியோட நேர்க்கோட்டை சந்திரன் கடந்து போகிற நிகழ்ச்சி 2015 ஏப்ரல் 4-ம் தேதி நடக்கப் போகுது. அன்னைக்கு நாம சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்” என்று முடித்தார் நிலா டீச்சர்.

அம்மா கூறிய தகவல்களால் திருப்தியடைந்த கவினும் ரஞ்சனியும் அடுத்த ஆண்டு நடக்கப் போகிற சந்திர கிரகணத்தைப் பார்க்ககும் ஆவலோடு, மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்