நாட்டுக்கொரு பாட்டு - 21: பிரெஞ்சு தேசத்தின் எழுச்சிப் பாட்டு!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ். இதை நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள். இந்த நாட்டைச் சுற்றி கிழக்கே ஜெர்மனி, ஆஸ்திரியா, தென் கிழக்கே இத்தாலி, தெற்கே ஸ்பெயின் நாடுகள் உள்ளன. புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம், 'டிஸ்னி லாண்ட்' ஆகிய சுற்றுலா மையங்கள் இங்குதான் உள்ளன. இதன் தலைநகர் பாரிஸ்.

விருப்பம்

‘ல மர்சியேஸ்' என்ற பிரெஞ்சு தேசிய கீதம் 1792-ல் க்ளாத் ஜோசஃப் த வில் என்பவரால் இயற்றப்பட்டது. 1792 ஏப்ரல் 25 அன்று ஸ்ட்ராஸ்ப்ர்க் நகர மேயர், தனது விருந்தினர் கவிஞர் க்ளாத் ஜோசஃப் த வில் தனக்கு ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாய்நாட்டுக்கு உள்ள ஆபத்தை உணர்ந்து, போரிட வருமாறு வீரர்களை அழைக்கும் விதமாக அமைய வேண்டும் என்றும் கூறினார். மேயரின் வேண்டுகோளை ஏற்று, க்ளாத் ஜோசஃப் இயற்றியதே இப்பாடல். இந்தப் பாடலை அவர், பிரெஞ்சுப் படையில் இருந்த மார்ஷல் நிக்கோலாவுக்கு அர்ப்பணித்தார்.

போருக்காக…

ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்ஸ் போர் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இயற்றப்பட்ட இப்பாடல், ‘போர் கீதம்’ என்றே அழைக்கப்பட்டது. இது ஒரு புரட்சிப் பாடல்; சுதந்திர பாடல்; சர்வாதிகாரம், அந்நிய ஊடுருவலுக்கு எதிராக மக்களை உத்வேகப்படுத்தும் பாடல்.

தடை

1795-ம் ஆண்டு ஜூலை 14 அன்று பிரெஞ்சு தேசியக் கூட்டம், இப்பாடலை குடியரசுப் பாடலாக ஏற்றுக்கொண்டது. ஆனால் முதலாம் நெப்போலியன், வேறு ஒரு பாடலை தேசிய கீதமாக வைத்துக்கொண்டார். அரசர்கள் பத்தாம் லூயி, பதின்மூன்றாம் லூயி, இப்பாடலுக்குத் தடை விதித்தார்கள். ஆனால், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், ‘மர்சியேஸ்' பாடல், சர்வதேச புரட்சிப் பாடலாக ஒலிக்கத் தொடங்கியது. 1879-ல் மீண்டும் பிரெஞ்சு தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது.

1792 மே மாதம் மெர்சலைஸிலிருந்து பிரெஞ்சு தலைநகருக்கு வந்த தன்னார்வலர்கள், இப்பாடலைப் பாடியவாறே தெருக்களில் வலம் வந்தார்கள். அதிலிருந்து, ‘மர்சியேஸ்' என்ற செல்லப் பெயரும் தேசிய கீதத்துடன் ஒட்டிக் கொண்டது.

எங்கும் பாடலாம்

ஐரோப்பிய நாட்டு தேசிய கீதங்களில் காணப்படும் எழுச்சிநடை இசைக்கெல்லாம், பிரெஞ்சு பாடலே முன் மாதிரி. தேசிய விழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே மற்ற நாடுகளின் தேசிய கீதங்கள் இடம் பெறும். ஆனால், பிரான்ஸ் நாட்டு கீதம் அந்த நாட்டு மரபு வழி இசையிலும், ஜனரஞ்சக இசையிலும்கூட இடம் பிடிக்கிறது. மிக நீண்ட இப்பாடலின் முதல் பத்தி மட்டுமே பாடப்படுகிறது.

பிரெஞ்சு தேசிய கீதம் ஏறத்தாழ இப்படி ஒலிக்கும்:

ஆலன்ஸ் என்ஃபண்ட்ஸ் டீ லா பேட்ரீ

லா ஜோர் டீ க்ளோய்ர் எஸ்ட் அரைவ்

கான்ட்ர நோஸ் டீ லா டையரனீ..

லீடன்டார்ட் சங்க்லான்ட் எஸ்ட் லெவி..

என்டன்டஸ் வோ.. டான்ஸ் லாஸ் கேம்பன்ஸ்

முகிர் ஸெஸ் ஃபெரொசஸ் சால்டாட்ஸ்

ஈஸ் வியனென்ட் ஜஸ்க் டான்ஸ் வோஸ் ப்ராஸ்

எகோர்ஜர் வாஸ் ஃபில்ஸ் வாஸ் கேம்பன்ஸ்.

ஆக்ஸ் ஆர்ம்ஸ் சிடியோன்ஸ்

ஃபார்மஸ் வாஸ் பெடாலிய்ன்ஸ்

மார்ச்சான்ஸ் மார்ச்சான்ஸ்

க்யூன் சங் இம்ப்பர்

அப்ரூவே நாஸ் சிலான்ஸ்.

இதன் உத்தேச தமிழாக்கம்:

தந்தை நாட்டின் பிள்ளைகளே எழுந்திருங்கள்

மகிமையின் நாள் வந்து சேர்ந்துவிட்டது.

நமக்கு எதிராக, சர்வாதிகாரத்தின்

கொடூரப் பதாகை உயர்த்தப்பட்டிருக்கிறது.

அந்த வெறி கொண்ட வீரர்களில் உறுமல்

நமது நாட்டுப்புறங்களில் கேட்கின்றதா?

உங்கள் பிள்ளைகள், மகளிரின் குரல் வளையைத் துண்டிக்க அவர்கள் உங்களுடைய கரங்களுக்குள் வந்துவிட்டார்கள்.

ஆயுதங்கள், குடிமக்கள்,

நமது படைகளாய் உருவாகட்டும்.

நடை போடுவாம்! நடை போடுவோம்!

தூய்மையற்ற (எதிரிகளின்) குருதியில்

நமது களங்கள் மூழ்கட்டும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

7 mins ago

க்ரைம்

25 mins ago

ஜோதிடம்

23 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

32 mins ago

சினிமா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

40 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்