கதை: பறக்கும் குதிரை!

By ஜி.சுந்தர்ராஜன்

ரத்தினபுரி நாட்டை உக்கிரசேனன் ஆண்டுவந்தார். அவர்  ஆட்சியில் மக்கள் பயந்துகொண்டே வாழ்ந்தனர். சின்னச் சின்ன தவறுகளுக்குக் கூட சிறைத் தண்டனை வழங்குவது மன்னரின் வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் உக்கிரசேனனின் கனவில் பறக்கும் குதிரை  வந்தது. அதில் ஏறி,  வான்வெளியில் உல்லாசமாக வலம் வந்தார். கண் விழித்துப் பார்த்தபோது, தான் கண்டது கனவு  என்று  புரிந்தது. கனவுதான் என்றாலும்  பறக்கும் குதிரையின் மீது பயணம் செய்த அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

உண்மையாகவே பறக்கும் சக்தி உடைய குதிரை  உண்டா என்ற கேள்வியும், அதற்கு விடை தேடும் ஆவலும் பிறந்தது.

விடிந்ததும் மந்திரியை அழைத்து, தான் கண்ட கனவையும்  அதுபோலப் பறக்கும் குதிரை தனக்கு வேண்டும் என்றும் சொன்னார்.

“நாளை நம் மக்களை அரண்மனைக்கு அழையுங்கள். பறக்கும் குதிரையைச் செய்து கொடுக்க முடியும் என்பவர்கள் மட்டுமே நாட்டுக்குள் இருக்கலாம். மற்றவர்களைச் சிறையில் அடையுங்கள்” என்றார் உக்கிரசேனன்.

மன்னனின் பிடிவாதக் குணத்தை மந்திரி  அறியாதவரல்ல. அவரிடம் வாதம் செய்வது வீண் என்பதால் அமைதியானார். மன்னரின் கட்டளைப்படி அந்தச் செய்தி நாடு முழுதும்  அறிவிக்கப்பட்டது.  அது மக்கள்  மனதில் பீதியை உண்டாக்கியது.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு ஒருவர் மன்னரிடம் மாட்டிக் கொண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்கள்.

அன்று குதிரைகளை வளர்த்துவரும் சிவபிரான் அழைத்து வரப்பட்டிருந்தார்.

“நீர் எவ்வளவு காலமாக குதிரை வளர்த்து  வருகிறீர்?”

“மன்னா, இது எனது முப்பாட்டன் காலத்து தொழில்!”

“அப்படி என்றால் உமக்குப் பறக்கும் குதிரையைப் பற்றித் தெரியுமா?”

சிவபிரானுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. இல்லை என்று சொன்னால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். உண்டு என்று சொன்னால் உடனே கொண்டு வா என்பார். இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

“என்ன யோசனை?”

“மன்னிக்க வேண்டும் மன்னா, பறக்கும் குதிரை  உள்ளதா என்று தெரியாது. ஆனால் குதிரையைப் பறக்க வைக்கும் உபாயம் உள்ளது.”

“அப்படியா.. என்ன அது?”

“அது உடனே செயல்படுத்தக் கூடியது அல்ல மன்னா. ஒரு வருடக் கால அவகாசம்  வேண்டும். பல மந்திர உச்சாடணங்கள்  செய்ய வேண்டும். குதிரைக்குப் பறப்பதற்கு ஏற்ற உணவு அளிக்க வேண்டும். இவை எல்லாம் சாத்தியப்பபட நீண்ட காலம் ஆகலாம்.”

“ஒரு வருடக் கால அவகாசம்  தருகிறேன். பறக்கும் குதிரையைத் தயார் செய்து கொடு” என்று சொல்லி, சிவபிரானை அனுப்பி வைத்தார் மன்னர்.

சிவபிரான் அப்படிச்  சொன்னதைக் கேட்டு ஊர் மக்கள் திகைத்தனர். மன்னரிடம் இப்படி  மாட்டிக்கொண்டாரே என்று பரிதாபப்பட்டனர். சிவபிரானின் மனைவி கோசலை கோபப்பட்டார்.

“குதிரையைப் பறக்க வைப்பது நடக்கக் கூடிய காரியமா?”

“நான் அப்படிச்  சொல்லவில்லை என்றால் மன்னர் சிறையில் தள்ளியிருப்பார். கொட்டத்தில் இருக்கும் குதிரைகளை யார் கவனிப்பது?” என்றார் சிவபிரான்.

ஓராண்டு கடந்தது. அன்று அரசவைக்கு வந்தார் கோசலை.

“மன்னா, எனக்கு நீதி வேண்டும்.”

“என்ன பிரச்சினை?”

“மன்னா, என்  சித்தி மகன்  விருந்தாளியாக வந்திருந்தான். அவனிடம் என் கணவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை. ஒரு வாரமாக அவனைக் காணவில்லை.  நான் சித்திக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.  தாங்கள்  என் கணவரைத் தீர விசாரித்து, என் தம்பியை ஒப்படைக்க வேண்டும்” என்றார் கோசலை.

“மந்திரியாரே, இவர் கணவரை அழைத்து வரச் சொல்லுங்கள்.”

சிவபிரானைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரைப் பார்த்ததும் பறக்கும் குதிரை ஞாபகம் வந்தது.

“பறக்கும் குதிரை வேலை முடிந்துவிட்டதா?”

“மன்னா, என் மீது குற்றம் சுமத்தியிருப்பவர் என் மனைவிதான். காணாமல் போனதாகச் சொன்னது என் மைத்துனனைத்தான். அவன் செய்த தவறுக்குத் தங்கள் முன் நான் குற்றவாளியாக நிற்கிறேன்” என்றார் சிவபிரான்.

“விளக்கமாக சொல்லுங்கள்.”

“மன்னா, நான் பறக்கும் குதிரையைத் தயார் செய்யும்போது  என் மைத்துனன் பார்த்து விட்டான். எப்படியோ விஷயத்தைத் தெரிந்து கொண்டு, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் பறக்கும் குதிரையில் ஏறிப்  பறந்துவிட்டான். நான் விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பதறிவிட்டேன். ஒரு வாரமாகப் பல ஊர்களில் தேடிப் பார்த்துவிட்டேன். என் மைத்துனனையும் காணவில்லை, குதிரையையும் காணவில்லை. தன் தம்பி செய்த தவறைப் புரிந்துகொள்ளாமல் என் மீது பழி சொல்கிறார். இதற்குத் தாங்கள்தான் நல்ல தீர்ப்பு  வழங்க வேண்டும் மன்னா” என்றார் சிவபிரான்.

மன்னருக்கு அச்சம் ஏற்பட்டது. ’பறக்கும் குதிரையில் ஏறிச் சென்றவனைக் காணவில்லை என்றால் அது மாயமாகிவிட்டது என்றுதானே அர்த்தம். அந்தக் குதிரையில் ஏறியிருந்தால் நானும் காணாமல் மாயமாகித்தானே போயிருப்பேன்? இந்த நாட்டுக்கு நான் மன்னனாக இருக்க முடிந்திருக்காதே? இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது என்று சொல்வது இதைத்தான் என்று நினைக்கிறேன். இனி எனக்குப் பறக்கும் குதிரை தேவை இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார் மன்னர்.

“பறக்கும்  குதிரையைச் செய்ய வேண்டாம். சிறையில் இருப்பவர்களை உடனே வெளியே அனுப்புங்கள்” என்று மன்னர் ஆணை பிறப்பித்தார்.

மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவபிரானும் கோசலையும் தங்களின் நாடகம் வெற்றி பெற்றதை நினைத்துச் சிரித்துக்கொண்டே இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

வாழ்வியல்

26 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்