கதை: பேராசை

By கீர்த்தி

 

கிழம்பூ காட்டில் குரங்கும் அணிலும் வசித்துவந்தன. அவை நல்ல நண்பர்களாகவும் இருந்தன. காட்டில் விளையும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, விளையாடிப் பொழுதைக் கழித்துவந்தன.

காட்டில் மழையே பெய்யவில்லை. அதனால் செடி, கொடிகள் வாடிப் போயின. மரங்களும் பூக்கவோ, காய்க்கவோ இல்லை. குரங்குக்கும் அணிலுக்கும் முன்புபோல உணவு கிடைக்கவில்லை. அவை ஆங்காங்கே மிஞ்சியிருந்த கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வந்தன. சில வாரங்களில் உணவே இல்லாமல் போய்விட்டது.

உடனே அணில் குரங்கிடம், "நண்பனே! இனியும் இந்தக் காட்டில் உணவு கிடைக்கும் என்று தோன்றவில்லை. நீ ஒரு திசைக்குச் சென்று உணவு தேடு. நான் வேறு திசைக்குச் சென்று உணவு தேடுகிறேன்" என்று சொன்னது. குரங்கும் ஒப்புக்கொண்டது.

தினமும் காலையில் குரங்கும் அணிலும் உணவு தேடிச் சென்றுவிட்டு, மாலையில் திரும்பிவந்தன. இவ்வாறு சில நாட்கள் கழிந்தன.

ஒருநாள் மாலை திரும்பி வந்த குரங்கு அணிலிடம், "நண்பனே, நீ மாலையில் தினமும் உற்சாகமாகத் திரும்பி வருவதைப் பார்த்தால் உனக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆனால் எனக்கு மிகக் குறைவான உணவே கிடைக்கிறது. நீ போகும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் செல்வாயா?" என்று கேட்டது.

குரங்கைப் பார்க்க அணிலுக்கும் பாவமாக இருந்தது. "சரி நண்பா, நாளை நான் போகும் இடத்துக்கு உன்னையும் அழைத்துச் செல்கிறேன்" என்று சொன்னது அணில்.

மறுநாள் அணில் குரங்கை அருகிலுள்ள கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒரு பெரிய பழத் தோட்டம். பல்வேறு பழங்கள் பழுத்துக் கிடந்தன.

அணில் குரங்கிடம், "நண்பனே! வேலியோரம் நிற்கும் மரங்களிலுள்ள பழங்களை மட்டும் நாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விட வேண்டும்" என்று சொன்னது. குரங்கும் "சரி" என்றும் ஒப்புக் கொண்டது.

குரங்கும் அணிலும் தேரட்டத்தின் வேலியோரம் நின்ற மரங்களிலுள்ள பழங்களை மட்டும் சாப்பிட்டுப் பசியாறின. பிறகு இரண்டும் புறப்பட்டுச் சென்றன. குரங்கின் மனதில் வேறு எண்ணம் முளைத்தது.

’என்ன இவன்... இந்தத் தேரட்டம் முழுவதும் விதவிதமாக ஏராளமான பழங்கள் பழுத்துக் கிடக்கின்றன. ஆனால் வேலியோரம் மட்டும் உள்ள பழங்களைத் தின்றுவிட்டுப் போகலாம் என்கிறான். இரவு இவன் அறியாமல் நாம் மட்டும் வந்து பழங்களைச் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டது குரங்கு.

மறுநாள் காலை அணில் குரங்கைப் பார்க்கச் சென்றது. அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. குரங்கு உடல் முழுவதும் காயங்களுடன் முனகியபடி படுத்துக் கிடந்தது.

"நண்பனே, என்ன ஆனது? உன் உடல் முழுவதும் எப்படிக் காயம் ஏற்பட்டது?" என்று உண்மையான அக்கறைறோடு கேட்டது அணில்.

"நண்பனே, நீ அழைத்துச் சென்ற பழத்தோட்டத்துக்காரர் என்னை நன்றாக அடித்துவிட்டார்" என்று கண்ணீரோடு செரன்னது குரங்கு.

"தோட்டக்காரர் உன்னை அடித்தாரா? நானும் பல நாட்களாக அந்தத் தோட்டத்தில் போய்ப் பழங்களைச் சாப்பிடுகிறேன். அவர் என்னை அடித்ததே இல்லையே. உன்னை மட்டும் ஏன் அடித்தார்? நாம் இருவரும் ஒன்றாகத்தானே அந்தத் தோட்டத்துக்குப் போனோம். இதெல்லாம் எப்போது நடந்தது?" என்று அணில் கேட்டது.

"நண்பனே! நேற்று உனக்குத் தெரியாமல் அந்தி சாயும் நேரத்தில் அந்தப் பழத்தோட்டத்துக்கு மீண்டும் போனேன். வேலியோர மரங்களைத் தாண்டி உள்ளே சென்றேன். அங்கே வாழை, சீதாப்பழம், பலாப்பழம் போன்றவை பழுத்துக் கிடந்தன. நான் அவற்றைச் சாப்பிடும்போது தோட்டக்காரர் வந்து என்னை அடித்துவிட்டார்" என்று முனகியபடி சொன்னது குரங்கு.

"நண்பனே, நான்தான் ஏற்கெனவே சொன்னேனே… வேலியேரரம் இருக்கும் மரங்கள் எல்லாம் கொய்யா மரங்கள். கொய்யா என்றால் ‘பறிக்காத’ என்று பொருள். கொய்யாப் பழம் என்றால் மனிதர்கள் பறிக்காத பழம் என்று சொல்வார்கள். அந்தப் பழங்களை மனிதர்கள் நம் போன்ற விலங்குகளுக்காகவே விட்டு வைத்திருக்கிறார்கள். நாம் அவற்றைச் சாப்பிட்டுப் பசியாற வேண்டும். அதைத் தாண்டி போகக் கூடாது என்பதற்காகத்தான் வேலியோரம் அந்த வகை மரங்களை நட்டு வளர்க்கிறார்கள். உள்ளே மனிதர்கள் சாப்பிடவும், வியாபாரம் செய்வதற்கும் உரிய மரங்களை நட்டு வளர்க்கிறார்கள். நீ அவற்றைச் சாப்பிடச் சென்றது தவறுதானே?" என்று கேட்டது அணில்.

"ஆமாம் நண்பா, என் பேராசையால் கிடைத்த துன்பம் இது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன்" என்று சொன்னது குரங்கு.

"நல்லது நண்பா! கிராமத்து மனிதர்கள் இன்னும் நம் போன்ற பிராணிகள் மீது அன்பு கொண்டவர்கள்தான். அவர்கள் நமக்காகவும் சில மரங்களை வளர்க்கத்தான் செய்கிறார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். பேராசையால் அந்த மக்களின் உழைப்பைத் திருடக் கூடாது" என்றது அணில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்