கதை: யார் சிறந்த மாணவர்?

By ஏ.ஆர்.முருகேசன்

பள்ளியே பரபரப்பாக இருந்தது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவருக்கான விருது இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்காகக் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக அக்கறையில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஒரு வாரமாக அனைவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் வைக்கப்பட்டன.

இன்று இறுதிப் பரிசோதனை. போட்டியில் இருக்கும் மாணவர்களை எல்லாம் ஓர் அறையில் வைத்து, கதவைப் பூட்டிவிட்டனர். ஒருவருக்கும் காரணம் புரியவில்லை.

“பூட்டிய அறைக்குள் என்ன பரிசோதனை?” என்று மயில்  வாத்திடம் கேட்டது.

“அக்கா, எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? உன்னை மாதிரிதான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்” என்று மைனாவைப் பார்த்தது வாத்து. அது பதில் சொல்லாமல், பாடிக்கொண்டிருந்தது.

“இந்த ஆந்தையைக் காணோமே? இதுவரை எல்லாப் பரிசோதனைகளிலும் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டு, இறுதிப் பரிசோதனைக்கு வராமல் எங்கே போனதோ?” என்று சிட்டுக்குருவி கவலைப்பட்டுக்கொண்டது.

“இங்கேதான் இருக்கேன் தங்கை. கொஞ்சம் நன்றாக உற்றுப் பார். நாற்காலியும் நானும் ஒரே வண்ணமாக இருப்பதால் உனக்குத் தெரியவில்லை” என்று கண்களை உருட்டியது ஆந்தை.

“கண்ணை உருட்டாதே. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு” என்று சிட்டுக்குருவி சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டது.

“எனக்குத் தெரிந்து அழகிய மயில், வலிமையான கழுகு, இரவில் அலையும் ஆந்தை, புத்திசாலி வாத்து… இவர்களில் ஒருவருக்குத்தான் சிறந்த மாணவர் பட்டம் கிடைக்கப் போகிறது” என்று புறா சொன்ன உடன், கிளி, குயில் போன்ற பறவைகள் சண்டைக்கு வந்தன.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, எல்லோரும் அமைதியானார்கள். இரண்டு கொக்குகள் சிறிய வண்டியை இழுத்துக்கொண்டு வந்தன. அதிலிருந்து உணவை எடுத்து, ஒவ்வொருவருக்கும் தட்டு நிறைய வைத்தன.

“எல்லோரும் சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, கொக்குகள் மீண்டும் கதவைத் தாழிட்டன.

“ஆஹா, இன்று ராஜ விருந்து!” என்றபடி சிட்டுக்குருவி உணவைக் கொத்த ஆரம்பித்தது.

“இப்படி ஒரு உணவை இதுவரை சாப்பிட்டதில்லை” என்றது கிளி.

காகம் மட்டும் சாப்பிடாமல், ஜன்னல் அருகில்  தட்டைத் தூக்கிக்கொண்டு சென்றது. ஜன்னல் திண்டில் அமர்ந்துகொண்டு, “நண்பர்களே, எல்லோரும் இங்கே வாருங்கள். சுவையான உணவு கிடைத்திருக்கிறது. பகிர்ந்து உண்ணலாம்” என்று அழைத்தது.

அருகில் பறந்துகொண்டிருந்த காகங்கள் ஜன்னலை நோக்கி  வந்தன. ஆளுக்குக் கொஞ்சம் தங்கள் அலகில் கவ்விக்கொண்டன. அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன.

சிறிது நேரத்தில் எல்லாப் பறவைகளும் சாப்பிட்டு முடித்தன.  குருவி, கிளி, புறா போன்ற சிறு பறவைகள் கால் பகுதி உணவை மட்டுமே சாப்பிட்டிருந்தன. கழுகு போன்ற பெரிய பறவைகளாலும் முழு உணவையும் சாப்பிட முடியவில்லை. எல்லோர் தட்டிலும் உணவு மீதி இருந்தது.

காகம் ஒவ்வொரு பறவை அருகிலும் சென்று, “உங்கள் வயிறு நிறைந்துவிட்டதா? வீணாகும் இந்த உணவை எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டது.

சகப் பறவைகள் ஏளனப் பார்வையுடன் உணவை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தன. ஆர்வத்தோடு தட்டுகளை எடுத்துக்கொண்டு ஜன்னல் அருகே வைத்தது காகம். வெளியே ஏராளமான காகங்கள் வந்துவிட்டன. அனைத்தும் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தன. காலியான தட்டுகளை ஓர் ஓரமாக அடுக்கி வைத்தது காகம்.

அப்போது கதவு திறக்கப்பட்டது. “உங்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் மேடைக்கு வரச் சொன்னார்” என்றது கொக்கு.

போட்டியில் பங்கேற்ற பறவைகள் மேடை நோக்கிச் சென்றன. காகம்  வகுப்பறையைப் பார்த்தது. உணவுப் பொருட்கள் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. வெளியில் இருந்த தன் நண்பர்களை அழைத்து, சுத்தம் செய்யச் சொன்னது. இரண்டே நிமிடங்களில் அறை சுத்தமானது. பிறகு மேடை நோக்கி வேகமாகச் சென்றது காகம்.

“இத்தனை நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?”

“அறையைச் சுத்தம் செய்தேன்.”

“அதுக்குதான் நாங்க இருக்கோமே. சீக்கிரம் போ” என்றது கொக்கு.

காகம் மேடையில் ஏறி ஓரமாக நின்றுகொண்டது.

தலைமை ஆசிரியர் இருவாட்சி மேடைக்கு வந்தது. “உங்களுக்கான பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துவிட்டன.  யார் சிறந்த மாணவர் என்று அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது. யாராக இருக்கும் என்று மேடையில் உள்ளவர்கள் சொல்லலாம்” என்று கேட்டது.

சிலர் தாங்கள்தான் என்று தன்னம்பிக்கையோடு சொன்னார்கள். இன்னும் சிலர் மகிழ்ச்சியோடு மற்றவர்களைப் பரிந்துரைத்தார்கள்.

“உங்கள் எல்லோருக்கும் திறமை இருக்கிறது. ஒருவரின் திறமையை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. அதனால் குணத்தை வைத்துதான் இப்போது யார் சிறந்த மாணவர் என்பதைத் தேர்வு செய்திருக்கிறோம். அதுக்காக வைக்கப்பட்ட பரிசோதனையில் நீங்கள் யாருமே சொல்லாத ஒரு பெயர்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவர் காகம். அறையில் அடைத்து வைத்தாலும்கூட, தான் மட்டுமே உண்ணாமல் தன் நண்பர்களை அழைத்து உணவைப் பகிர்ந்துகொண்டது.

நீங்கள் அனைவரும் சாப்பிடாமல் வீணாக்கிய உணவை, மற்றவர்களுக்குக் கொடுத்தது. நீங்கள் சிந்திய உணவுப் பொருட்களைச் சுத்தம் செய்தது. நீங்களே சொல்லுங்கள், காகத்தைவிட வேறு யாரைத் தேர்ந்தெடுக்க முடியும்? இந்த முடிவை அனைவருமே ஏற்றுக்கொள்வீர்கள்” என்று இருவாட்சி சொன்னதும், கரகோஷம் அதிர்ந்தது.

காகத்தின் தலையில் அழகான சிறிய கிரீடம் அணிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்