புகழ்பெற்ற கதை: கடைசிப் பூ

By ஜேம்ஸ் தர்பர்

பன்னிரண்டாவது போர் பற்றி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அதில் மனித குல நாகரிகமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக அழிந்து போயின. கிராமங்கள், நகரங்கள் எல்லாம் காணாமல் போயின. பயிர்நிலங்கள், காடுகள் துடைத்து அழிக்கப்பட்டன. பூங்காக்கள், தோட்டங்கள் எரிக்கப்பட்டன. அனைத்துக் கலைப்பொருட்களும் நொறுக்கப்பட்டன.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் விலங்குகளைவிடவும் இழிந்தவர்களாகிப் போனார்கள். தங்கள் எஜமானர்களிடம் உணவும் பாசமும் இல்லாமல் போனதால், நாய்கள்கூட மனிதர்களை விட்டு அகன்றன.

புத்தகங்கள், ஓவியங்கள், பாடல்கள் தடை செய்யப்பட்டன. இதனால் செய்வதற்கு வேலை ஏதும் இல்லாமல் போன மக்கள், நேரம் வீணாவதாக நினைக்கத் தொடங்கினார்கள். பல நூற்றாண்டுகள் இப்படியே கடந்தன.

கடைசியாக நடந்த போரில் தப்பிய சில போர்த்தளபதிகளுக்கும்கூட, போரில் யார் வென்றது, யார் தோற்றது என்பது மறந்து போயிருந்தது.

இளைஞர்கள்-இளம்பெண்கள் ஒருவரால் மற்றொருவர் ஈர்க்கப்படாமல் போனார்கள். அனைவருக்கும் வாழ்வளித்த புவியிலிருந்து அன்பு காணாமல் போயிருந்தது.

ஒரு நாள் ஓர் இளம்பெண், கடைசியாகத் தப்பிப் பிழைத்திருந்த ஒரு மலரைப் பார்த்தாள். இப்போதுதான் முதன்முறையாக ஒரு மலரை அவள் பார்க்கிறாள். அது வதங்கியிருந்தது.

‘அந்தக் கடைசி மலர் விரைவில் மடியப் போகிறது’ என்ற தகவலை அனைவருக்கும் அவள் சொன்னாள். ஆனால், யாருமே அவள் சொன்னதை கண்டுகொள்ளவில்லை. ஒரே ஓர் இளைஞன் மட்டும், அவள் சொன்னதைக் கேட்டான்.

அந்த இளைஞனும் இளம்பெண்ணும் அந்தக் கடைசி மலரை நன்கு பராமரித்தார்கள். விரைவிலேயே அந்த மலர் மலர்ந்தது. அந்த மலரின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு தேனீயும் ஒரு பறவையும் அதை நாடி வந்தன.

மலர்கள் இரண்டாகின! நான்காயின! ஏராளமான பூக்கள் மலர்ந்துவிட்டன! காடுகளும் தோட்டங்களும் மீண்டும் உருவாகின. இளைஞனும் இளம்பெண்ணும் ஒருவரை மற்றொருவர் தொட்டுக்கொண்டது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. உலகில் மீண்டும் அன்பு பிறந்தது.

அந்த இளைஞன்-இளம்பெண்ணின் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்தார்கள். அவர்கள் சிரிக்கவும் ஓடவும் கற்றுக்கொண்டார்கள். மனிதர்களை நாடி நாய்கள் திரும்பிவந்தன.

ஒரு செங்கல் மீது மற்றொரு செங்கல்லை வைத்து வீட்டைக் கட்டலாம் என்பதைச் சில இளைஞர்கள் கண்டறிந்தார்கள். விரைவில் எல்லோருமே வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள். வீடுகளின் கூட்டம் கிராமங்கள், நகரங்களாக வளரத் தொடங்கியது.

இசை, மீண்டும் பிறந்தது. இசைக் கலைஞர்கள், மாயாஜாலம் செய்பவர்கள்… தையல்காரர்கள், செருப்பு தைப்பவர்கள்… கலைஞர்கள், கவிஞர்கள்… ராணுவவீரர்கள்… கொல்லர்கள், தச்சர்கள்… படை துணைத்தலைவர்கள், தலைவர்கள்… படைத் தளபதிகள், படைத்துறை தலைவர்கள் எல்லோரும் தோன்றினார்கள்…

மீண்டும் மதத் தலைவர்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்கள்.

வாழ்வாதாரம் தேடி ஒரு சிலர் ஒரு திசையிலும், வேறு சிலர் எதிர்த் திசையிலும் சென்றார்கள். சமவெளிக்குச் சென்றவர்கள், மலைப்பகுதிக்குச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரைவிலேயே நினைக்கத் தொடங்கினார்கள். அதேபோல மலைப்பகுதிக்குச் சென்றவர்கள், சமவெளிக்குச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தொடங்கினார்கள்.

பற்றியெரிந்த இந்த அதிருப்தித் தீயில் கடவுளின் பெயரைச் சொல்லி, மதத் தலைவர்கள் எண்ணெய்யை ஊற்ற ஆரம்பித்தார்கள். உலகம் மீண்டும் ஒரு போரில் இறங்கியது. இந்த முறை ஒட்டுமொத்த அழிவு ஏற்பட்டது.

மிச்சம் இருந்தது -

ஓர் ஆண்

ஒரு பெண்

ஒரேயொரு மலர் மட்டுமே.

(போர்கள் ஏன் தேவையில்லை என்பதைப் பற்றி அமெரிக்க எழுத்தாளரும் ஓவியருமான ஜேம்ஸ் தர்பர், 1939-ல் எழுதிய உலகப் புகழ்பெற்ற கதை ‘The Last Flower’.) ‘கடைசிப் பூ’ புத்தகம் தமிழில் இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. தொடர்புக்கு: வாசல் பதிப்பகம்-மதுரை: 9842102133, பாரதி புத்தகாலயம்-சென்னை: 044-24332924

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்