திறந்திடு சீஸேம் 21: தம்மஸேதி மணி

By முகில்

ஹந்தவாடி – பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் பாதிவரை மியான்மரில் (பர்மா) அமைந்திருந்த ஒரு ராஜ்யம். அதன் பதினாறாவது அரசராக கி.பி.

1471-ல் அரியணை ஏறியவர் தம்மஸேதி. ஹந்தவாடி ராஜ்யத்தின் மிகச் சிறந்த அரசர், இவரது ஆட்சிக்காலம் மியான்மரின் பொற்காலம் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

அரசர் தம்மஸேதி, தனது ராஜ்யத்தில் எத்தனை மக்கள் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வரச்சொல்லி அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பினார். அந்த அதிகாரிகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியை மட்டும் மேற்கொள்ளாமல், அந்த மக்களுக்கு வரிகளை விதித்தனர். அவர்களிடமிருந்து உலோகப் பொருட்களையும் வசூலித்துவந்தனர்.

அதிகாரிகளின் இந்தச் செயல் அரசருக்குக் கடும்கோபத்தைக் கொடுத்தது. அரசர் எதுவும் தண்டனை விதித்துவிடுவாரோ என்று பயந்த அதிகாரிகள், அவரது கோபத்தைத் தணிக்கும்விதமாக யோசனை ஒன்றை முன்வைத்தனர். ‘இந்த உலோகத்தை எல்லாம் வைத்து புத்தர் ஆலயத்துக்கு மணி ஒன்றைத் தயார் செய்யலாம். அது நம் ராஜ்ய மக்களின் பங்களிப்புடன் செய்த தெய்விகச் சின்னமாக விளங்கும்’ என்று அவர்கள் சொன்ன யோசனையை அரசர் ஏற்றுக்கொண்டார்.

சுமார் 300 டன் அளவில் செம்பு உலோகத்தினாலான பொருட்கள் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டிருந்தன. அதனுடன் சில டன்கள் வெள்ளி, தங்கம், தகரம் போன்ற உலோகங்களையும் சேர்த்து மிகப்பெரிய மணி ஒன்றை கலை அம்சத்துடன் உருவாக்கினார்கள். அந்த மணியை மரகதக்கற்கள், நீலமணிக்கற்கள் கொண்டு அலங்கரித்தார்கள்.

அதற்கு ‘தம்மஸேதி மணி’ என்று பெயர் வைக்கப்பட்டது. 294 டன் எடை, சுமார் 18 அடி உயரம், 12 அடி அகலத்துடன் அந்த மணி பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டிருந்தது. மியான்மரின் டாகோன் நகரத்தில் (ரங்கூன், இன்றைய பெயர் யங்கோன்) அமைந்திருந்த உலகின் மிகப் பழமையான புத்த ஆலயங்களில் ஒன்றான ஷ்வேடகான் ஸ்தூபியின் வளாகத்தில் அந்த மணியை நிர்மாணிக்க அரசர் முடிவுசெய்தார். ஆலயம், சிங்கட்டாரா மலைக்குன்று மீது அமைந்திருந்தது.

கி.பி. 1484-ல் அந்த மணியை நிர்மாணிப்பதற்கான தேதி குறிக்கப்பட்டது. ஜோதிடர் ஒருவர், ‘இப்போது காலம் சரியில்லை. இந்த மணியிலிருந்து ஓசை வராது’ என்றார். அந்த ஆண்டிலேயே தம்மஸேதி மணி அங்கே நிர்மாணம் செய்யப்பட்டது. மணியை அடித்தார்கள். ஆனால், அதிலிருந்து வந்த ஒலி இனிமையாக இல்லை.

கி.பி. 1583-ல் ஷ்வேடகான் ஸ்தூபியைக் காண காஸ்பரோ பால்பி என்ற வெனீசியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் வந்தார். அவர் தனது பயணக்குறிப்பில், தம்மஸேதி மணியைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் அங்கே மிகப்பெரிய அறை ஒன்றில் பிரம்மாண்டமான மணியைக் கண்டேன். அந்த மணியில் ஒன்றை ஒன்று ஒட்டினாற்போல பெரிய எழுத்துகள் மேலிருந்து கீழ் நோக்கிப் பொறிக்கப்பட்டிருந்தன. அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.’

ஷ்வேடகான் ஸ்தூபிக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்ட தம்மஸேதி மணியை, அங்கே உள்ளே ஓர் அறையில் கண்டதாக காஸ்பரோ பால்பி குறிப்பிட்டிருக்கிறார். இடைப்பட்ட நூறு ஆண்டுகளில் அந்த மாற்றம் நடந்திருக்கலாம். கி.பி. 1552-ல் ஹந்தவாடி ராஜ்யம் முடிவுக்குவந்தது. அதேநேரத்தில் மியான்மரில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் மெதுவாகப் படர ஆரம்பித்தது.

ஃபிலிப் டி பிரிட்டோ இ நிகோட் என்பவர் போர்த்துக்கீசிய தளபதி. கி.பி. 1599-ல் மியான்மரின் சில பகுதிகள் மீது படையெடுத்து வென்றார். பர்மிய மன்னர்கள் சிலரைத் தோற்கடித்தார். மியான்மரில் போர்த்துக்கீசிய ராஜ்யம் அமைந்ததாக அறிவித்தார்.

கி.பி. 1608-ல் ஃபிலிப் டி பிரிட்டோவின் கண், தம்மஸேதி மணியின் மீது விழுந்தது. ‘இங்கே எதற்கு அநாவசியமாக இவ்வளவு பெரிய மணி? இந்த மணியை உருக்கினால் அந்த உலோகத்தைக் கொண்டு நிறைய பீரங்கிகள், ஆயுதங்கள் செய்யலாமே. ம்,

இதைக் கழற்றுங்கள்!’ – ஃபிலிப் டி பிரிட்டோ கட்டளையிட்டார். சிங்கட்டாரா மலைக்குன்றிலிருந்து, தம்மஸேதி மணியைக் கஷ்டப்பட்டு உருட்டிக் கீழே கொண்டுவந்தனர். யானைகள் கட்டி இழுக்கும் மரத்தாலான வாகனம் ஒன்றில் மணி ஏற்றப்பட்டது. பாகோ நதியை நோக்கி அதை இழுத்துச் சென்றனர். பாகோ நதியில் ஃபிலிப் டி பிரிட்டோவின் பெரிய படகு காத்திருந்தது. அதனுடன் மிகப்பெரிய மிதக்கும் மரக்கலன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அதில் மணியை ஏற்றினார்கள்.

படகு கிளம்பியது. நீரின் வேகமான ஓட்டத்தில் மணியைச் சிரமப்பட்டுதான் கொண்டு சென்றார்கள். பாகோ நதியும், யாங்கோன் நதியும் சங்கமித்து ஓடும் நீர்ப்பரப்பில் படகு தடுமாறியது. அதிக எடையைத் தாங்க இயலாது மரக்கலன் சரிந்தது. அதனுடன் படகும் கவிழ்ந்தது. ஆற்றின் நீருக்குள் மணி மூழ்கிப் போனது. உயிர்ச் சேதாரம் எல்லாம் இல்லை. ஆனால், ஃபிலிப் டி பிரிட்டோவால் மணியை மீட்க முடியவில்லை.

அடுத்த சில ஆண்டுகளிலேயே பர்மிய அரசரான அனாவுக்பெட்லுன்  தலையெடுத்தார். ஃபிலிப் டி பிரிட்டோவைப் போரில் வீழ்த்தினார். அவராலும், அவருக்குப்பின் வந்தவர்களாலும் மணியை ஆற்றுக்குள்ளிலிருந்து மீட்டு எடுக்க முடியவில்லை. பர்மாவின் அதிசயமாக விளங்கிய தம்மஸேதி மணியை, நானூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றைக்குவரை யாராலும் மீட்டெடுக்க முடியவில்லை. அது எங்கே விழுந்து காணாமல் போனது என்ற இடத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படி ஒரு மணியே செய்யப்படவில்லை. அது பொய். அதனால்தான் அந்த மணியை இத்தனை ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சிலரது கருத்தாக இருக்கிறது. இல்லவே இல்லை. இந்த நிகழ்வுகள் எல்லாம் ஃபிலிப் டி பிரிட்டோ மணியை அவமதித்ததால் உண்டான சாபம்தான்.

உலகின் அதிக எடைகொண்ட அந்தத் தம்மஸேதி மணியை எப்படியாவது கண்டுபிடித்து, மீண்டும் ஷ்வேடகான் ஸ்தூபி வளாகத்திலேயே நிர்மாணிக்க வேண்டும் என்பது புத்தர் மீது பற்றுகொண்ட பெரும்பாலான பர்மியர்களின் ஆசை. அதற்காகவே எக்கச்சக்கமாகச் செலவுசெய்து இன்றைக்கும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பர்மாவின் மிங்குன் என்ற இடத்தில் அமைந்த புத்தர் ஸ்தூபியில் கி.பி. 1810-ல் உலோக மணி ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. மிங்குன் மணியே, உலகின் அதிக எடை கொண்ட மணியாக இப்போது இருக்கிறது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்