டிங்குவிடம் கேளுங்கள்: யாரிடம் கற்றுக்கொண்டார் காந்தி?

By செய்திப்பிரிவு

காந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாரிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டார்? காந்தியைப் பார்த்து அறவழிப் போராட்டத்தை யாராவது நடத்தி இருக்கிறார்களா, டிங்கு?     

– ஜெ. சா. யங்கேஷ்வர், 7-ம் வகுப்பு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம், நாமக்கல்.

அறவழிப் போராட்டங்களால் நினைத்ததை அடைய முடியும் என்று உலகத்துக்குச் சாதித்துக் காட்டியவர் காந்தி. உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். இவரது புத்தகங்களில் வன்முறை இல்லாத எதிர்ப்புக் கருத்துகள் இடம்பெற்றிருந்ததைப் படித்த காந்தி, அறவழிப் போராட்ட முறையால் ஈர்க்கப்பட்டார். தாமும் அதே வழியில் போராட முடிவெடுத்தார். அதில் மிகப் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார்.

காந்தியின் அறவழிப் போராட்ட வழிமுறையை உலகின் பல்வேறு தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மார்ட்டின் லூதர் கிங் முக்கியமானவர். அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காலகட்டம். அப்போது பேருந்தின் பின்பக்கத்தில்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உட்கார வேண்டும், அமெரிக்கர் யாருக்காவது இடம் இல்லை என்றால் எழுந்து இடம் தரவேண்டும் என்பது சட்டமாக இருந்தது.

அப்படி ஓர் அமெரிக்கருக்கு, ஆப்பிரிக்க அமெரிக்கரான ரோசா பார்க்ஸ் இடம் தர மறுத்துவிட்டார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அறவழியில் போராட்டத்தை மேற்கொண்டனர். பேருந்தைப் புறக்கணித்தனர். காரில் செல்ல வசதி இல்லாதவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, 381 நாட்கள் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தின் முடிவில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேருந்தில் தங்களுக்கான உரிமையை மீட்டு எடுத்தனர், யங்கேஷ்வர்.

விளையாட்டு எந்த நாட்டில் எப்போது தோன்றியது, டிங்கு?

– மா. கோவர்த்தனன், 5-ம் வகுப்பு, டாக்டர் எஸ்.ஆர்.கே. பள்ளி, ஆரணி, திருவண்ணாமலை.

இந்த நாட்டில்தான் விளையாட்டு ஆரம்பித்தது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது, கோவர்த்தனன். மிகப் பழங்காலத்திலேயே (15,300 ஆண்டுகளுக்கு முன்பு) பிரான்ஸ் நாட்டுக் குகை ஓவியங்களில் ஓட்டமும் மல்யுத்தமும் இடம் பெற்று இருந்திருக்கின்றன. கி.மு. 7000-ல் மங்கோலியாவின் குகைகளில் மல்யுத்தப் போட்டியை மக்கள் பார்ப்பதுபோன்ற ஓவியங்கள் இருந்திருக்கின்றன. கி.மு. 6000-ல் லிபியாவில் நீச்சலும் வில்வித்தையும் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

கி.மு. 766-ல் கிரீஸ் நாட்டில் பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது. இதில் குதிரைப் பந்தயம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றுள்ளன. பைபிளில் மல்யுத்த விளையாட்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் கால்பந்துதான் அதிகமாக விளையாடப்படுகிறது.

கால்பந்து போன்ற விளையாட்டை கி.மு. 2-ம் நூற்றாண்டில் சீனர்கள் கண்டுபிடித்துள்ளனர். தோலுக்குள் ரோமங்களை வைத்து பந்துபோல் உருவாக்கி, கைகளைப் பயன்படுத்தாமல் கால்களால் விளையாடி இருக்கிறார்கள். ‘Sport’ என்ற ஆங்கிலச் சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. ‘ஓய்வு’ என்று பொருள். ஓய்வு நேரத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்குவதற்கு உருவாக்கப்பட்டதுதான் விளையாட்டு. கடந்த 2 நூற்றாண்டுகளில்தான் மற்ற விளையாட்டுகள் தோன்றியுள்ளன.

பல் விழுந்தால் அதைச் சாணிக்குள் வைத்து வீசச் சொல்கிறார் பாட்டி. அம்மாவோ மண்ணுக்குள் புதைத்து வைக்கச் சொல்கிறார். இப்படிச் செய்யாவிட்டால் பல் முளைக்காது என்கிறார்கள். உண்மையா டிங்கு?

– வி. காவ்யாஸ்ரீ, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி.

இன்னும்கூட இதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்களா? எனக்குப் பல் விழுந்தபோதும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். பல் முளைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயத்தில் முதலில் நானும் இதை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் கடவாய்ப் பல் விழுந்தது. பல் முளைக்காவிட்டால்கூட வெளியில் தெரியாது என்பதால், குப்பையில் தூக்கிப் போட்டு, பல் முளைக்கிறதா இல்லையா என்று பார்த்துவிடும் முடிவுக்கு வந்தேன்.

மற்ற பற்களைப்போல் அந்தப் பல் விரைவில் முளைக்கவில்லை. கொஞ்சம் பயம் வந்தது. பல்லைப் புதைத்து வைக்காததை நினைத்து வருத்தப்பட ஆரம்பித்தபோது, பல் முளைக்க ஆரம்பித்தது. விழுந்த பல்லைப் புதைப்பதற்கும் புதிய பல் முளைப்பதற்கும் தொடர்பு இல்லை என்பது புரிந்தது. அதற்குப் பிறகு விழுந்த பற்களை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டேன். உடைந்த பல் வாசலில் கிடந்தால் காலில் குத்தலாம் என்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம், மற்றபடி பல்லைப் புதைப்பதற்கும் பல் முளைப்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, காவ்யா.

தேங்காய் எண்ணெய் ஏன் உறைகிறது, டிங்கு?

– மா. லத்தீஸ்வரன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

திரவப் பொருட்களைக் குளிர்வித்தால் திடப்பொருளாக மாறிவிடும். நெய் காய்ச்சும்போது திரவமாக இருக்கிறது. சற்றுக் குளிர்ந்தவுடன் சாதாரண வெப்பநிலையிலேயே மீண்டும் உறைந்துவிடுகிறது. தேங்காய் எண்ணெய் 16 டிகிரி சென்ரேட் வெப்பநிலைக்குச் செல்லும்போது உறைந்துவிடுகிறது. ஒவ்வொரு திரவப் பொருளுக்கும் அதன் உறையும் தன்மை மாறுபடும், லத்தீஸ்வரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்