கதை: பலமும் பலவீனமும்

By தொண்டி முத்தூஸ்

ஓடைக் கரையில் இருந்த பொந்தில் ஆமை வசித்துவந்தது. அதற்குப் பக்கத்தில் உள்ள புற்றில் ஒரு நாகம் குடியிருந்தது. ஆமையும் நாகமும் நண்பர்கள். இரண்டும் சேர்ந்தே இரை தேடப் போவதும் சேர்ந்தே இருப்பிடத்துக்குத் திரும்புவதுமாக இருந்தன.

அன்று காலை ஆமையும் நாகமும் ஓடைக்கரை புல்வெளியில் இரை தேடிக்கொண்டிருந்தன. அப்போது மனிதக் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தது ஆமை. ஒரு மனிதன் கையில் கம்புடன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஆமை நாகத்திடம், “ஆபத்து வேகமாக ஓடி மறைந்து கொள்” என்றது. ஏன் என்று கேட்டது நாகம்.

“அதோ கம்புடன் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் நம்மைப் பார்த்தால் அடித்துக் கொன்றுவிடுவார்” என்றது ஆமை.

“அவருக்கு நீ வேண்டுமானால் பயப்படலாம். நான் பயப்படமாட்டேன். என் பல்லில் கொடிய நச்சு இருக்கிறது. நான் கடித்தால் அவருக்கு இறப்பு உறுதி. அதனால் அவர்தான் என்னைப் பார்த்து பயந்து ஓடவேண்டும்” என்றது நாகம்.

காலடி ஓசை அருகில் கேட்டது. ஆமை தனது கால்களையும் கழுத்தையும் உள்ளே இழுத்துக் கொண்டு அசையாமல் கிடந்தது. அசைவு இல்லாததால் அந்த மனிதரின் பார்வை அதன் மீது பதியவில்லை. பெரிய இலைச் சருகு என்று நினைத்துவிட்டார். அதனால்  ஆமை கிடந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்.

மெதுவாகக் கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தது ஆமை.

அருகில் வந்துவிட்ட அந்த மனிதரைப் பார்த்த நாகம்,  சீறிக்கொண்டே தலையை உயர்த்தி படத்தை விரித்தது. அதைப் பார்த்ததும் சட்டென்று தனது கையில் இருந்த கம்பால் நாகத்தை அடித்தார். அந்த அடி, நாகத்தின் உடலில் பலமாக விழுந்தது. ஐயோ என்று அலறிக் கொண்டே கோரைப் புற்களுக்கு இடையில் புகுந்து, ஊர்ந்து போனது நாகம். அவரும் நாகம் போன வழியில் தொடர்ந்து கோரைப் புற்களை விலக்கிப் பார்த்துக்கொண்டே விரைந்தார். அடிபட்ட நாகம், தப்பித்தால் போதும் என்று  புதருக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. பாம்பைத் தேடி அலுத்துப் போன அவர், திரும்பிச் சென்றுவிட்டார்.

நாகத்தைத் தேடிவந்தது ஆமை. புதரைவிட்டு வெளியில் வந்த நாகம்,  “நண்பா, அந்த மனிதர் என் முதுகில் பலமாக அடித்து விட்டார். இன்னொரு அடி விழுந்திருந்தால் நான் செத்திருப்பேன்” என்றது.

“நல்லவேளை, தப்பித்துவிட்டாய். அது போதும். காயத்தை ஆற்றி விடலாம் வா” என்று அதற்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றது ஆமை.

ஒரு மாதத்துக்குப் பிறகு, வழக்கம்போல் ஆமையும் நாகமும் புல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்தன. காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தது ஆமை. முன்பு பார்த்த அதே மனிதர் வந்துகொண்டிருந்தார். ஆனால் இப்போது அவரது கையில் கம்பு இல்லை.

நாகத்தைப் பார்த்து, ”நண்பா, முன்பு உன்னை அடித்த அதே மனிதர் வந்துகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்தால் பாம்பு பிடிக்கும் வித்தைக்காரராகத் தெரியவில்லை. அதனால், இப்போது உன்
வீரத்தைக் காட்டலாம்” என்றது ஆமை.

சீறிக் கொண்டே அந்த மனிதரை நோக்கிப் பாய்ந்தது நாகம். நடுங்கிப் போன அவர், அதனிடமிருந்து தப்பி வேகமாக ஓடத் தொடங்கினார். அதைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தன ஆமையும் நாகமும்.

“அன்று என்னைக் கொல்ல வந்தவர், இப்போது என்னைக் கண்டு நடுங்கி ஓடுகிறார்” என்றது நாகம்.

”அன்று அவர் கையில் கம்பு இருந்தது. எட்ட இருந்தே உன்னை அடித்துவிடலாம். அது, அவருக்குச் சாதகமான நிலைமை. இப்போது அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை. உன்னை நெருங்கினால் கடித்துவிடுவாய். அதனால் அவர் தப்பித்து ஓடவேண்டி இருக்கிறது. இது உனக்குச் சாதகமான நிலைமை” என்றது ஆமை.

”நீ எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறாயே!” என்றது நாகம்.

“ஆம். ஒருவருக்குச் சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது என்னைப் போல் சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்க வேண்டும். சாதகமாக இருக்கும்போது உன்னைப்போல் சீறிப் பாயவேண்டும்.

ஒருவனின் பலம், பலவீனம் இரண்டையும் பார்த்துதான் சண்டைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றது ஆமை.

“நீ அறிவாளிதான்!” என்று பாராட்டியது நாகம்.

“புரிந்துகொண்டால் சரிதான்” என்ற ஆமையுடன் சேர்ந்து நாகமும் சிரித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்