கதை: நகரத்து எலியும் கிராமத்து எலியும்

By கு.அசோகன்

கி

ராமத்தில் வசிக்கும் தன் பாட்டியைப் பார்க்கக் கிளம்பினான் ராகுல். வழியில் சாப்பிட புளியோதரையும் மசால் வடையும் தயாரித்து வேனில் வைத்தார் அம்மா.

மசால் வடையின் வாசனை வீட்டில் பதுங்கியிருந்த எலியின் மூக்கில் நுழைந்து, வெளியே வரவழைத்து விட்டது. வாசனையைப் பிடித்தபடி வேனுக்குள் ஏறிவிட்டது எலி.

வழியில் ஓர் இடத்தில் வேன் நின்றது. சாப்பிடுவதற்காகப் பொட்டலத்தைப் பிரித்தார் அம்மா. அதில் ஒரு வடை குறைந்திருந்தது.

”ராகுல், மசால் வடையைச் சாப்பிட்டியா?” என்று கேட்டார் அம்மா.

”இல்லேம்மா! நான் எடுக்கலை.”

”சரி, எங்காவது விழுந்திருக்கும்” என்று சொல்லிவிட்டு, உணவைப் பரிமாறினார் அம்மா.

நீண்ட பயணத்துக்குப் பிறகு பச்சைப்பசேலென்று வயல்வெளிகள் காட்சியளித்தன. நெற்பயிர்களும் சோளப்பயிர்களும் அமோகமாக விளைந்திருந்தன. இதமான காற்றும் வீசியது. ஒரு வீட்டின் முன் வேன் நின்றது.

ராகுல் சந்தோஷமாகப் பாட்டியைத் தேடி ஓடினான்.

வேனுக்குள் இருந்த எலி மெதுவாக வெளியே வந்தது. காற்று சில்லென்று வீசியதைக் கண்டதும், ”இது நம்ம வீட்டு ஏசி மாதிரியே இருக்கே!” என்று வியந்தது.

அருகில் இருந்த வயலில் இருந்து ஓர் எலி வெளியே வந்தது.

”அட, நம்ம ஊர் எலி மாதிரி இல்லியே! ஆமாம், நீ இந்த ஊருக்கு புதுசா?” என்று நகரத்து எலி முன்னால் வந்து கேட்டது கிராமத்து எலி.

”ஆமாம், நான் நகரத்தில் வசிக்கிறேன். அங்கே விதவிதமான உணவுகள் கிடைக்கும். நீ இந்தக் காய்ந்து போன பயிரைதான் சாப்பிடறீயா? அதான் இப்படி மெலிஞ்சு கிடக்குற. என் கூட வந்தால் நீயும் நல்லா சாப்பிட்டு பளபளப்பா ஆயிடலாம். வர்றீயா?” என்று கேட்டது நகரத்து எலி.

”அங்கே சாப்பிட என்ன கிடைக்கும்?” என்று ஆர்வத்துடன் கேட்டது கிராமத்து எலி

“ஆப்பிள், ஆரஞ்சு, கேக், கேரட், சாக்லெட், பிஸ்கெட், ரொட்டி, முறுக்கு, பால்கோவா என்று மனிதர்கள் சாப்பிடும் அத்தனை உணவும் கிடைக்கும்!”

கிராமத்து எலிக்கு எச்சில் ஊறியது.

”சரி..சரி நானும் வரேன். கூட்டிட்டுப் போ” என்றது கிராமத்து எலி.

இரண்டு எலிகளும் வேனில் பதுங்கிக் கொண்டன.

கிராமத்து எலிக்குப் பசித்தது. உணவு வேண்டும் என்று கேட்டது.

”உஷ், சத்தம் போடாதே! இன்னும் கொஞ்ச நேரத்துல ஊருக்குப் போயிடலாம்” என்று அமைதிப்படுத்தியது நகரத்து எலி.

வேன் நின்றது. இறங்கிய நகரத்து எலி, ”பார்த்து வா. யார் கண்ணிலாவது பட்டால் நாம் காலி” என்று சொல்லிக்கொண்டே, சமையலறைக்குள் சென்று ஒளிந்துகொண்டது.

”ஐயோ, பசிக்குது” என்று கத்தியது கிராமத்து எலி.

”அவசரப்படாதே! இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவார்கள். சமையலறைக்குள் நுழைந்து ஒருகை பார்க்கலாம்” என்றது நகரத்து எலி.

சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

கிராமத்து எலியை வரவேற்று சமையலறைக்குள் அழைத்துச் சென்றது நகரத்து எலி.

ஆங்கே, பீங்கான் தட்டுகளில் பழங்கள், சாக்லேட், கேக் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கிராமத்து எலி சாக்லேட் சாப்பிடும் ஆர்வத்தில் வேகமாகப் பாய்ந்தது. பீங்கான் தட்டு தவறி கீழே விழுந்தது.

சத்தம் கேட்டதும் விளக்குகள் எரிந்தன. ராகுலின் அப்பா ஓடிவந்தார். இரண்டு எலிகளும் பதுங்கிக்கொண்டன. அவர் சென்றவுடன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தன.

சீக்கிரம் என்று அவசரப்படுத்தியதால் வேகமாக விழுங்கியது கிராமத்து எலி.

“எப்போதும் நீ இப்படித்தான் சாப்பிடுவியா?”

”ஆமாம், நின்று நிதானமாகச் சாப்பிட்டால் அவர்கள் கண்ணில் மாட்டிக்கொள்ள மாட்டோமா?“ என்று கேட்டது நகரத்து எலி.

”நான் வயல் வெளியில் நின்று நிதானமாகச் சாப்பிடுவேன். எந்தத் தொந்தரவும் எனக்கு இருக்காது.”

”இதுபோல ருசியாக இருக்குமா?”

“என்னதான் ருசியாக இருந்தாலும் பதட்டமாகச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கலை.”

”கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் அப்புறம் பழகிடும்” என்ற நகரத்து எலி வேகமாகக் கொறித்தது.

அரைகுறை மனதுடன் சாப்பிட்டு சமையலறையிலிருந்து வெளியே வரும்போது, ஓர் உருவம் முறைத்துக்கொண்டிருந்தது. அது வேட்டை நாய். கிராமத்து எலி பயந்தது. நகரத்து எலி உஷராகப் பதுங்கிக்கொண்டது. கிராமத்து எலி அப்படி இப்படி ஓடி, நாயிடமிருந்து தப்பியது.

”நகரத்து எலியே, மிக்க நன்றி ! நான் என் கிராமத்துக்கே போறேன். இது எனக்குச் சரிப்பட்டு வராது. சுதந்திரமா, நிம்மதியா, பதட்டப்படாமல் சாப்பிடறது எப்படி இருக்கும் தெரியுமா?. இப்படிப் பதட்டத்தோடு சாப்பிடற உணவு எவ்வளவு ருசியாக இருந்தாலும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, வேகமாக வெளியேறி ஓடியது கிராமத்து எலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

27 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்