வியப்பூட்டும் இந்தியா: அஜந்தா குகை ஓவியங்கள்

By ஆம்பூர் மங்கையர்கரசி

 

ந்தியாவில் இருக்கும் குகை ஓவியங்களில் அஜந்தா மிகவும் புகழ்பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருக்கிறது அஜந்தா கிராமம். இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் அழகான சிற்பக் குகைகள் இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மக்களின் வாழ்க்கை முறை. கலை, கட்டிடக்கலை போன்றவை உன்னத நிலையில் இருந்ததை இந்த ஓவியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

புத்தர் தன்னுடைய உருவத்தை ஓவியங்களாகவோ, சிற்பங்களாகவோ உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்குப் பின் வந்த சீடர்கள் புத்தமதக் கொள்கைகளை வெளி உலகத்துக்குச் சொல்லவும், பரப்பவும் விரும்பினர். அதனால் புத்தரின் உருவத்தை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வடித்தனர். இயற்கையான குகைகள் மட்டுமல்லாமல் செயற்கையான குகைகளையும் உருவாக்கினர். மழைக் காலங்களில் தங்குவதற்கு மடாலயங்களையும், வழிபடுவதற்கு வழிபாட்டு ஸ்தலங்களையும் அமைத்தனர்.

அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின் மேல் அமைந்துள்ளன. அமைதியான அழகான சூழல் கொண்ட இந்த இடத்தில் 30 குகைகள் உருவாக்கப்பட்டன. இவை குதிரையின் குளம்பு போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. இந்தக் குகைகள் இரு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. கி.மு. 2-ம் நூற்றாண்டில் சாதவாகன மன்னர்கள் 9, 10, 12, 15 எண்களுடைய குகைகளை அமைத்திருக்கிறார்கள். கி.பி. 5-ம் நூற்றாண்டில் ஹரிசேனா மன்னர் 20 குகைகளை அமைத்துள்ளார். அஜந்தா குகைகள் கி.பி. 7-ம் நூற்றாண்டுவரை பலரும் தங்கும் இடமாக இருந்துள்ளது. கி.பி 7-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான்சுவாங் அஜந்தா குகைகளைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு அஜந்தா குகைகளின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்து குகைகளை முற்றிலுமாக மறைத்துவிட்டன. அதனால் குகை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

1819-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜான் ஸ்மித் வேட்டையாடச் சென்றபோது இந்தக் குகைகளைக் கண்டுபிடித்தார். மீண்டும் அஜந்தாவின் பெருமை வெளி உலகுத்துக்குத் தெரிய ஆரம்பித்தது.

மிகப் பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் சிலைகள், ஓவியங்கள் என ஒவ்வொரு பகுதியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அஜந்தா ஓவியங்களில் அடர்ந்த ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட பாணியில் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். முதலில் உளியால் பாறைகளைச் செதுக்கி, அதன்மீது களிமண், சுண்ணாம்பு, வைக்கோல் துகள், சாணம் ஆகியவற்றால் தயாரித்த கலவையைப் பூசியுள்ளனர். ஈரமாக இருக்கும்போதே இயற்கையான நிறமிகளை வைத்து ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். திறமையான தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே இவற்றை உருவாக்கியிருக்க முடியும். 1500 ஆண்டுகள் கடந்தும் இந்த ஓவியங்கள் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அந்த கலைஞர்களின் நுட்பமே!

முதல் குகை இன்றுவரை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய புத்தர் உருவம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது. நேராகப் பார்க்கும்போது புன்னகையுடனும் பக்கவாட்டில் சோகமாகவும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது!

இரண்டாவது குகை மடாலயமாகப் பயன்பட்டிருக்கிறது. இங்குள்ள சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 6-வது குகை இரண்டு அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட 9-வது குகையைத்தான் ஜான் ஸ்மித் கண்டுபிடித்தார். 10-வது குகை மிகவும் பழமையானது. சாரநாத்தில் புத்தரின் முதல் பிரசங்கம், ஜாதகக் கதைகள் போன்றவை இங்கு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

16-வது குகை ஓவியங்களுடன் கூடிய மிக அழகான குகையாகக் கருதப்படுகிறது. 17-வது குகையில் சுவற்றில் மட்டுமல்லாமல் மேற் கூரையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 26-வது குகையில் படுத்திருக்கும் நிலையில் புத்தரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது, அதன்கீழ், அவருடைய சீடர்கள் கவலையாகவும், தேவதைகள் மலர்ந்த முகத்துடன் புத்தரை வானுலகுக்கு வரவேற்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்