வியப்பூட்டும் இந்தியா: துயரத்தின் சாட்சி

By ஆம்பூர் மங்கையர்கரசி

 

ஜா

லியன்வாலா பாக் என்றதும் அந்தத் துயரமான சம்பவம்தான் நம் நினைவுக்குவரும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்ற இடம் இது. 'பாக்' என்றால் தோட்டம் என்று பொருள். ஜாலியன்வாலா பாக் 6.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய தோட்டம். இது பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற பொற்கோயிலுக்கு அருகில் இருக்கிறது.

பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங்கிடம் பணிபுரிந்த சர்தார் ஹிமத்சிங் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் இது. அவர் குடும்பம் 'ஜல்லா' என்ற கிராமத்திலிருந்து வந்ததால் ’ஜாலியன்வாலா பாக்’ என்று பெயர் பெற்றது.

தோட்டத்தைச் சுற்றி குறுகிய நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் பிரதான நுழைவாயிலைத் தவிர, மற்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிரதான வாயிலுக்கு ஒரு குறுகலான சந்து வழியாகத்தான் வரவேண்டும். உள்ளே வந்தால் மிகப் பெரிய அழகான தோட்டம். இதில் சுதந்திரப் போராட்டக் கூட்டங்களும் திருவிழாக்களும் நடைபெற்றுவந்தன. மற்ற நாட்களில் குழந்தைகள் விளையாடும் இடமாக இருந்தது.

சீக்கியர்களின் மிகப் பெரிய அறுவடைத் திருவிழாவான 'பைசாகி' நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருவிழாவுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். சில மாதங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ரௌலட் சட்டத்தால், நாடே கொந்தளித்துக்கொண்டிருந்தது. விசாரணை இல்லாமலேயே யாரையும் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்பதுதான் அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். குறிப்பாக பஞ்சாப், வங்காள மக்கள் அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

பஞ்சாப் தலைவர்களை ஆங்கிலேய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.

ஏப்ரல் 13, 1919-ம் ஆண்டு. திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பொதுமக்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்போது ஜெனரலாக இருந்த எட்வர்ட் டயர், முன்னறிவிப்பு இன்றி ராணுவத்தை வைத்து துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினார். பத்து நிமிடங்களில் 1650 குண்டுகள் சீறிப் பாய்ந்தன. மக்கள் பயந்து, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, சிறிய நுழைவாயில் வழியாக வெளியே செல்ல முடியாமல் இடிபாடுகளில் சிக்கி மடிந்தனர். துப்பாக்கிக் குண்டுகளுக்கு பயந்து 120 பேர் அங்கிருந்த கிணற்றில் குதித்து இறந்தனர். மகிழ்ச்சியான அறுவடைத் திருவிழா, துயரத்தில் முடிந்தது.

shutterstock_446843389right

ஆங்கிலேய அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை 379 என்று கூறியது. ஆனால் 1500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியத் திருப்பு முனையாக அமைந்தது.

பண்டிட் மதன் மோகன் மாளவியா அந்த இடத்தை தேசிய நினைவுச் சின்னமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அமெரிக்கக் கட்டிடக்கலை நிபுணர் பெஞ்சமின் போல்க் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்.

தற்போது ஜாலியன்வாலா பாக்கில் பசுமையான செடிகளுக்கும் புற்களுக்கும் நடுவே 30 அடி உயரத்தில் நினைவுச் சின்னம் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. நான்கு பக்கங்களிலும் கற்களாலான லாந்தர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது 'சுதந்திரச் சுடர்' என்று அழைக்கப்படுகிறது. நடுவில் அசோகச் சக்கரமும் அதன் கீழ் ’உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக' என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சுவர்களில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளின் அடையாளங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. பலரை விழுங்கிய கிணற்றை, வலையுடன் கூடிய சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.

ஜாலியன்வாலா பாக் ஒளிப்படங்களும் பத்திரிகைச் செய்திகளும் ஓர் அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 50 நிமிடங்களுக்கு நடக்கும் ஒளி - ஒலி காட்சியை அவசியம் காண வேண்டும்.இன்று அமைதியாக இருக்கும் இந்த இடம், கடந்த கால சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வலியை அழுத்தமாகச் சொல்கிறது.

தொடர்புக்கு: mangai.teach@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்