நிலா டீச்சர்: தோல் சுருங்கும் ரகசியம்

By வி.தேவதாசன்

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய கவினும் ரஞ்சனியும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டுத் தாத்தா அங்கு வந்தார். கவின், ரஞ்சனி மீது அவர் மிகுந்த பாசம் காட்டுவார்.

“வாங்க தாத்தா” என அன்போடு அழைத்தாள் ரஞ்சனி.

விளையாட்டில் மும்முரமாக இருந்த கவின், தாத்தா வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தான்.

“தாத்தா, வாங்க… வாங்க…” என அவனும் உற்சாகமாக வரவேற்றான்.

கடைத்தெருவுக்குச் சென்றபோது வாங்கி வந்த நொறுக்குத்தீனிகளை பையிலிருந்து எடுத்து ரஞ்சனி, கவினிடம் கொடுத்தார் தாத்தா. கவினும் ரஞ்சனியும் அவற்றை ருசிக்கத் தொடங்கினர்.

அப்போது வீட்டின் உள்ளேயிருந்து நிலா டீச்சரும் வந்தார். எல்லோரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து தாத்தா அவரது வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார். பார்வையிலிருந்து மறையும்வரை தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.

“கவின், தாத்தாவை இன்னிக்குதான் புதுசா பார்க்குற மாதிரி பார்த்துகிட்டே நிக்குறே” என்றார் நிலா டீச்சர்.

“தாத்தாவோட முகம், கைகள் எல்லாம் வேகமா மாறிட்டே வருதும்மா. முகம், கழுத்து, கைகளில் எல்லாம் தோல் சுருங்கிட்டே போகுது. சில இடங்கள்ல தோல் தொளதொளன்னு தொங்குது. ஏம்மா தாத்தா இப்படி ஆயிட்டார்?” என்று கேட்டான் கவின்.

“தாத்தாவுக்கு மட்டுமல்ல. வயதானால் எல்லோருக்குமே தோல் சுருங்கத்தான் செய்யும்” என்றார் நிலா டீச்சர்.

“வயதானால் தோல் சுருங்குவது ஏம்மா?” என்று ரஞ்சனி கேள்வி எழுப்பினாள்.

“நமக்கு வயது கூடக் கூட உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும். தோல் சுருங்கவும், தொளதொளன்னு தளர்ந்து போகவும் நிறைய காரணங்கள் இருக்கு. முக்கியமான காரணத்தை மட்டும் சொல்றேன்” என்று தொடர்ந்தார் நிலா டீச்சர்.

“சின்னப் பசங்களுக்கு கை, கால், முகமெல்லாம் தோல் மிருதுவா இருக்கும். ஆனால், உங்களைவிட என்னோட கை, கால், முகத்தில் உள்ள தோலில் மிருதுத்தன்மை குறைஞ்சி போயிருக்கும். தாத்தாவுக்கோ இன்னும் மோசம். அவரது தோல் சொரசொரப்பாவும், நிறைய சுருக்கத்தோடும் தொங்கிப் போயிருக்கு.

குழந்தைகளா இருக்குறப்ப நம்ம தோல் பகுதியில கொலஜன் (Collagen) என்னும் புரதப் பொருள் நிறைய இருக்கும். நம்ம தோல் மிருதுவா இருப்பதற்கு மட்டுமில்ல உறுதியாவும், நெகிழ்வுத் தன்மையுடனும் (Strength and elasticity) இருக்க இந்த கொலஜன் புரதம்தான் காரணம்.

வயது கூடக் கூட நம்ம தோல் பகுதிகளில் உள்ள இந்த கொலஜன் புரதத்தின் அளவும் குறைஞ்சிட்டே வரும். இதனால் தோலின் மிருதுத்தன்மையும் குறையும். மேலும், கொலஜன் குறையுறதால தோல் செல்களுக்கு இடையேயான இணைப்பும் பிணைப்பும் குறைஞ்சிடும். அதனால தோல்ல சுருக்கம் ஏற்படுது. அதோட நம்ம கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தோல்கள் தளர்ந்து போய் தொங்குது” என்றார் நிலா டீச்சர்.

“தோல் சுருக்கத்தை தடுக்கலாம்னு கடைல பல மருந்துகளை விக்கிறாங்களே அம்மா. அதை தாத்தாவுக்கு வாங்கிக் கொடுக்கலாமா?” என்றாள் ரஞ்சனி.

“ஆமாம். உடல்ல குறையும் கொலஜன் புரத அளவைக் கூட்டலாம்னு சொல்லி நிறைய மருந்துகள் கடைகள்ல விற்கப்படுறது உண்மைதான். ஆனா, உண்மையிலேயே அந்த மருந்துகளால் தோல் சுருக்கத்தை போக்க முடியுமான்னு எனக்கு தெரியல” என பதில் கூறினார் நிலா டீச்சர்.

“நமக்கும் வயதானால் இதேபோல் தோல் எல்லாம் சுருங்கிடுமாம்மா” என்று கவலையோடு கேட்டான் கவின்.

“ஆமாம். நிச்சயமாக” என்றார் நிலா டீச்சர்.

“இதைத் தடுக்கவே முடியாதம்மா” என்று கேட்டாள் ரஞ்சனி.

“தடுக்க முடியாது. ஆனால், தள்ளிப்போடலாம்” என்றார் நிலா டீச்சர்.

“எப்படிம்மா?” என்றான் கவின்.

“ரொம்ப ஈஸிதான்” என்றார் நிலா டீச்சர்.

“என்ன செய்யணும்னு சொல்லுங்கம்மா” என்றாள் ரஞ்சனி.

“உங்கள மாதிரி சின்னப் பசங்க அப்பா, அம்மா சொல்றத கேட்டு நல்லா சாப்பிடணும், அவ்வளவுதான்” என்று கூறி சிரித்தார் நிலா டீச்சர்.

“என்னம்மா சொல்ல வர்றீங்க?” என்று கேட்டான் கவின்.

“வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து நிறைஞ்ச சத்தான உணவு வகைகளை சின்ன வயசுலேர்ந்து சாப்பிடணும். நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துமிக்க சிறுதானியங்களை நம்ம உணவுல நிறைய சேத்துக்கணும். இதனால் நம்ம உடம்புல உள்ள கொலஜன் புரதத்தோட அளவு சீக்கிரமா குறையாம இருக்கும். இதனால, தோல் சுருக்கம் மற்றும் தோல் தளர்ந்து போகுற பிரச்சினைகள் இல்லாம நீண்ட காலம் இளமையான தோற்றத்தோட நாம வாழ வாய்ப்பிருக்கு” என்றார் நிலா டீச்சர்.

“அம்மா இனிமே சாப்பாட்டு விஷயத்துல நாங்க அடம்பிடிக்க மாட்டோம். நீங்க கொடுக்கற எல்லா சத்தான உணவையும் சாப்பிடறோம்மா” என்றான் கவின்.

“ஆமாம்மா” என்று ரஞ்சனியும் அதை ஆமோதித்தாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்