இளைஞர் உலகம்: இது யூத் மனசு!

By எம்.சூரியா

உலகில் நவநாகரிக இளைஞர்களின் கனவு என்னவாக இருக்கும்? ஸ்டைலான உடை, விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், கண்ணைக் கவரும் இருசக்கர வாகனங்கள் போன்றவைதான் இருக்கும். ஆனால், இவற்றுக்கு மாறாக இந்திய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன, மனதிலிருக்கும் பதற்றங்கள் என்ன, எந்த மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று. இந்திய இளைஞர்கள் பற்றி இந்த ஆய்வு என்ன சொல்கிறது?

ஸ்டைலு...ஸ்டைலுதான்...

இந்த ஆய்வில் 15 முதல் 35 வயது வரையுள்ள இளையோர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் என்றாலே ஸ்டைல் தொடர்பான கேள்விகள்தானே முதன்மையாக இருக்கும். இந்த ஆய்விலும் ஸ்டைலை மையமாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இளைஞர்கள் அளித்த பதில்கள், அவர்கள் மீதான பிம்பத்தை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கின்றன. மிகவும் ஆடம்பரமான, ஸ்டைலான உடைகளை அணிவதே தங்களின் விருப்பம் என 61 சதவீத இளைஞர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்பது 59 சதவீத இளைஞர்களின் ஆல் டைம் ஆசையாக இருக்கிறது. 2007-ம் ஆண்டு 34 சதவீத இளைஞர்களிடம் மொபைல் போன் இருந்த நிலை மாறி, தற்போது 81 சதவீத பேரிடம் ஸ்மார்ட்போன் விளையாடுகிறது என்று தெரிவிக்கிறது ஆய்வு முடிவு. சிகப்பழகு தருவதாக விளம்பரம் செய்யப்படும் கிரீம்களின் மீது 39 சதவீதம் பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

நல்லா படிக்கிறாங்க

சில பாராட்டத்தக்க விஷயங்களும் இளைஞர்களிடம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்ப்பதும், நாளேடுகளைப் படிப்பதும் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. 57 சதவீத இளைஞர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், 53 சதவீதம் பேர் நாளேடுகள் மூலமாகவும், பொதுஅறிவு விஷயங்களில் கில்லியாக இருக்கின்றனர். தவிர, இணையதளத்தின் உதவியுடன் 18 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான செய்திகளை அப்டேட் செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ஃபிப்டி ஃபிப்டி

மற்றொரு ஆச்சரியப்பட வைக்கும் விஷயம், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் 50 சதவீத இளைஞர்களுக்கு ஆர்வமில்லையாம். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றை சரிபாதி இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை என்றே ஆய்வு கூறுகிறது. இந்தத் தகவல் ஆச்சரியமளித்தாலும், நம்புவதற்கு சற்றே கடினமாகத்தான் இருக்கிறது. சமூகம் தொடர்பான சிந்தனைகளைப் பொறுத்தவரை, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான திரைபடங்களைத் தடை செய்வதே சரி என 60 சதவீத இளைஞர்கள் கோரஸாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆணாதிக்க மனப்பான்மையுடன் திரிவதாகவும் சொல்கிறது ஆய்வு. திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்லத் தேவையில்லை என்பது 41 சதவீத இளைஞர்களின் எண்ணம்.

என்னா வேலையோ...

பாராட்டத்தக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில் சாதி, மதங்களைக் கடந்து நட்புக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். தங்களுடன் பள்ளி, கல்லூரி, அலுவகங்களில் உடனிருப்பவர்கள் எந்த சாதி, எந்த மதம் என்பதை பெரும்பாலான இளைஞர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களில் 78 சதவீதம் பேரின் முக்கிய கவலையே வேலைவாய்ப்பு பிரச்சினைதான் எனப் பெரும்பான்மையாக கருத்து சொல்லியுள்ளனர். கஷ்டப்பட்டுக் கல்லூரிப் படிப்பை முடிக்கும் இளைஞர்கள், மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்றுதான் பெரிதும் அஞ்சுகின்றனர். இவர்களின் கவலை இப்படி என்றால், 15-17 வயதுப் பிரிவினரின் கவலையோ மேற்படிப்பு தொடர்பானதாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள்தான் தங்களின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்.

இளைஞர்கள் சொல்லும் சேதி

மாடலான ஸ்மார்ட்போன் 59 சதவீதம்

தொலைக்காட்சி செய்தி 57 சதவீதம்

நாளேடுகள் படிப்பவர்கள் 53 சதவீதம்

இணையதள செய்திகள் படிப்போர் 18 சதவீதம்

சமூக வலைதளங்கள் வேண்டாம் 50 சதவீதம்

வேலைவாய்ப்பு பிரச்சினை 78 சதவீதம் பேர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்