கவனம் ஈர்க்கும் இளைஞர்கள்: டாலர் இளவரசர்கள்!

By எம்.சூரியா

ளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதைச் சிறப்பாக வழிநடத்தி, அதன் மூலம் செல்வச் சீமான்களாக உயர்ந்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றும் உலக பணக்காரர்களில் முன்னணியில் இருக்கும் பில்கேட்ஸ் உலகின் 400 கோடீஸ்வரர்களுள் ஒருவராக இடம்பிடித்தபோது அவருடைய வயது 31-தான். அவரைப் போலவே இன்றைய கால கட்டத்திலும் பல இளைஞர்கள் செல்வச் சீமான்களாக உலகில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.

மார்க் ஸுக்கர்பெர்க்

கம்ப்யூட்டர் கண்டறியப்பட்ட காலத்தில் தனது தனித்துவமான சிந்தனை மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் இடம்பிடித்ததைப் போல், சமூக வலைதள யுகத்தில் ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஸுக்கர்பெர்க், தற்போதைய இளம் வயது பணக்காரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். 2004-ம் ஆண்டில், தனது 19-வது வயதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஃபேஸ்புக்கை அவர் வடிவமைத்தார். அதை மேம்படுத்த கூடுதல் கவனம் தேவைப்பட்டதால், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார் மார்க். பல்கலைக்கழக அளவில் சமூக வலைத்தளமாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்புக்கை, தற்போது உலகம் முழுவதும் 200 கோடிப் பேர் பயன்படுத்திவருகிறார்கள். தற்போது 33 வயதாகும் மார்க், ஃபேஸ்புக் மூலம் சேர்த்த சொத்தின் மதிப்பு மட்டும் 7,100 கோடி டாலர்.

லுகாஸ் வால்டன்

இளம் பணக்கார இளைஞர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் இருப்பவர் லுகாஸ் வால்டன். இவர் வால்மார்ட் என்ற பன்னாட்டு விற்பனை நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் பேரன். தந்தை ஜான் வால்டன் 2005-ம் ஆண்டில் மறைந்ததையடுத்து, அவரது சொத்தின் பெரும்பகுதி லுகஸ் வால்டனுக்குக் கிடைத்தது. அந்த வகையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு 1,100 கோடி டாலர்.

டஸ்டின் & ஸ்காட் டன்கன்

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ். மார்க் ஸுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கைத் தொடங்கியபோது, ஆரம்ப காலத்தில் அவரோடு பணியாற்றினார் டஸ்டின். பின்னர் மென்பொருள் புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான அஸானாவைத் தொடங்கினார். இன்றைய நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1,007 கோடி டாலர். அமெரிக்கத் தொழிலதிபரான ஸ்காட் டன்கன் (Scott Duncan) இந்தப் பட்டியலில் 4-ம் இடத்தில் இருக்கிறார். எண்டர்பிரைஸ் புராடக்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய டேன் டன்கனின் மகன்தான் இவர். தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது சொத்தின் பெரும்பகுதி ஸ்காட் வசம் வந்தது. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு 570 கோடி டாலர்.

பாபி & ஸ்பீகல்

ஸ்நாப்சாட் செயலியின் தாய் நிறுவனமான ஸ்நாப் கார்ப்பரேஷனைத் தொடங்கியவர்களில் ஒருவரும் அதன் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியுமான பாபி மர்பி இந்தப் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். ஸ்நாப் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பங்குகளை அமெரிக்கச் சந்தையில் பட்டியலிட்டபோது, இளம் வயதில் பில்லியனர் ஆக உயர்ந்தார். இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலர். ஸ்நாப் கார்ப்பரேஷனைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஈவான் ஸ்பீகலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1990-களில் பிறந்த ஈவான், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பாபி மர்பியுடன் இணைந்து ஸ்நாப் கார்ப்பரேஷனைப் பரீட்சார்த்த முறையில் ஆரம்பித்தார். இன்று அந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அவரை இளம் தலைமுறைக் கோடீஸ்வரராக மாற்றியிருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலர். 

நாதன்

ஏர்பிஎன்பி என்ற ஆன்லைன் நிறுவனத்தின் தலைவர்களின் ஒருவரான நாதன் பிளசார்சியக் என்பவர் 380 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இவரது நிறுவனம் செயல்பட்டுவருகிறது. ஒரு வீடு அல்லது விடுதி ஆகியவற்றை வாடகைக்கு விடுவது தொடர்பான பணிகளை மட்டுமே செய்யும் ஆன்லைன் நிறுவனம் இது. கடந்த 2009-ம் ஆண்டுதான் நாதன் தன் நண்பர்களுடன் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார். 

குடும்பச் சொத்துக்கள் மூலம் உலக பில்லியனர் இளைஞர்களாக இணைந்தவர்களைவிட, சொந்த முயற்சியாலும் புத்திக்கூர்மையாலும் முன்னேறிய இளைஞர்களே அதிக அளவில் பில்லியனர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனித்துவமான சிந்தனையும் எதிர்காலத்தை ஆளும் விஷயங்களைக் கணிக்கும் திறனும் உள்ள இளைஞர்களே அடுத்த தலைமுறை பில்கேட்ஸ் மற்றும் மார்க் ஸுக்கர்பெர்க் ஆக வலம் வருவார்கள். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்