அரியக்குடி பாணி: கட்டுக்குள் வந்த கலை

By ஜி.விக்னேஷ்

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் கிரிக்கெட் எப்படி ஆடப்படும் தெரியுமா? அரை நாளுக்குள் 400 ரன்கள் எடுக்கப்படும் சாகசமெல்லாம் அப்போது கிடையாது. ஓவர், நாள் என்ற எந்த வரையறையும் கிடையாது. இன்னிங்ஸ்தான் கணக்கு. இன்னிங்ஸ் முடியும்வரை நாட்கணக்கில் ஆடிக்கொண்டே இருக்கலாம். அப்படி ஆடிக்கொண்டிருந்த ஆட்டம் பிறகு ஆறு நாள், ஐந்து நாள் என்று ஒரு வரையறைக்குள் வந்தது.

இசைக் கச்சேரிகளும் அப்படித்தான். முன்பெல்லாம், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கச்சேரிகள் எப்படி நடக்கும் தெரியுமா? பாடகர் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால், பல மணி நேரம் அதையே ஆலாபனை செய்வார். பிறகு அதே ராகத்தில் கிருதியொன்றை எடுத்துக்கொள்வார். அதைக் கன சுருக்கில் அரை மணி நேரம் பாடிக் கச்சேரியை முடித்துவிடுவார். இப்படிப் பாடினால்தான் ரசிகர்களுக்கு ராகத்தை அனுபவித்த ஆனந்தம் முழுமையாகும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இன்று கச்சேரிகள் நடத்தப்படும் விதமே வேறு. பல ராகங்களில் பல கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. அந்தக் கச்சேரிக்கென்று பிரதான ராகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் ராகம் தானம் பல்லவியை அமைத்துப் பாடுவது வழக்கம். இதில் தனி ஆவர்த்தனம் என்று பக்க வாத்தியங்களுக்கான தனி நேரமும் உண்டு. கடைசியில் பஜனைப் பாடல்கள், துக்கடா என்று பல சங்கதிகளுடன் கச்சேரி வண்ணமயமாய்க் களைகட்டுவது இன்றைய பாணி.

கச்சேரி நடத்தப்படும் பாணியை இப்படி மாற்றிப் புதுமை செய்தவர் சங்கீத கலாநிதி பத்மபூஷன் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். இசைக் கலைஞர்களையும் இசை ரசிகர்களையும் வாரிச் சுருட்டிக்கொண்டு இன்றும் வாழும் இந்தப் பாணி, கர்நாடக இசையையும் வாழ வைக்கிறது.

இப்பாணியின் வேர்களுக்கு நீர் வார்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது, அவரது பேரன் ராமனுஜம் செயலாளராக உள்ள அரியக்குடி ராமானுஜம் ஃபவுண்டேஷன். இளைஞர்கள் மத்தியில் இப்பாணியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இந்த ஃபவுண்டேஷன் இதுவரை இந்தியா முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட இசை நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அந்த வகையில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியின் கதக் நடனம் அண்மையில் டெல்லியில் நடந்தது.

அரியக்குடி பாணி

கச்சேரி முழுவதும் ஒரே ராகத்தை மணிக் கணக்கில் விஸ்தாரமாகவும் நிதானமாகவும் பாடிக்கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு ஏற்படும் சலிப்பை உணர்ந்த அரியக்குடி, இதன் இன்னொரு அபாயத்தையும் கண்டுகொண்டார். ஒரு கச்சேரி, ஒரு ராகம், ஒரு கீர்த்தனை என்று இருந்தால், எத்தனையோ ராகங்களும் கீர்த்தனைகளும் வர்ணங்களும் பாடப்படாமலேயே போகும். பாசுரங்கள், பிரபந்தங்கள், பஜனைகள் எனப் பல விதமான இதர பாடல்களும் பாடப்படாததாலேயே வழக்கொழிந்து போவதற்கான அபாயம் இருந்ததை அவர் உணர்ந்தார். ரசிகர்களின் சலிப்பைப் போக்கி இசையின் பல்வேறு அங்கங்களின் மகிமையைக் காப்பாற்றுவதற்காக அவர் ஒரு பாணியை அறிமுகப்படுத்தினார்.

தனது கச்சேரிகளைப் பெரும்பாலும் வர்ணத்தில் தொடங்குவார். பஞ்ச ரத்தின கிருதிகளில் ஒன்றினைப் பாடுவார். ஆரம்பமே களைகட்டிவிடும். குரலும் நன்கு பதப்பட்டு அடுத்து எந்த கிருதி எடுத்தாலும், அலுங்காமல் குலுங்காமல் அற்புதமாக அமைந்துவிடும். இவரும் ரசிகர்களும் அடுத்து வரும் ராகங்களையும் கிருதிகளையும் சுவீகரிக்கத் தயாராகி விடுவார்கள்.

இந்த சுக செளக்கிய நிலை வந்தவுடன் கன ராகத்தில் இறங்கிவிடும் அரியக்குடி, மெல்ல அதை விஸ்தரித்துக்கொண்டே போவார். அதில் ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் எல்லாம் அமர்க்களமாக அமைந்துவிடும். உடனடியாக ஒரு விறுவிறுப்பான பாடல் தொடரும். கச்சேரியின் மத்தியில் பக்க வாத்தியக்காரர்களின் திறமையைக் காட்ட நேரம் ஒதுக்கித் தருவார்.

நூற்றுக்கணக்கான ராகங்களுக்கு ஆயிரக்கணக்கான கிருதிகள் உண்டு. இவற்றில் பெரும்பான்மையானவை அரியக்குடிக்கு அத்துப்படி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மொழிக் கிருதிகள் அவருக்குத் தெரியும். இவை அனைத்தையும் கச்சேரியில் பரிமாறிவிடுவார்.

பாடல் எந்த மொழியில் இருந்தாலும் சாகித்யத்தில் உச்சரிப்பு துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அரியக்குடி. பாடல் எந்த மொழியில் உள்ளதோ அம்மொழியைப் பாடகர் அறிந்திருக்க வேண்டும் என்பார். குறைந்தபட்சம் அந்தப் பாடலின் உச்சரிப்பும் அர்த்தமுமாவது தெரிந்திருத்தல் அவசியம் என்று வலியுறுத்துவார்.

தமிழ்நாட்டில் நல்ல தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல, அருணாசலக் கவிராயரின் ராம நாடகம், பாபநாசம் சிவன் பாடல்கள் மற்றும் திருப்பாவை ஆகியவற்றை மேடைகளில் சரியான தருணங்களில் பாடி அவற்றிற்கு மேலும் மெருகேற்றிப் பெருமை சேர்த்தார் அரியக்குடி.

ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் காலப்போக்கில் 50 ஓவர் போட்டியாக மாறிவிட்டது. 20 ஓவர் போட்டிகளும் பிரபலமடைந்துவிட்டன. அரியக்குடிக்கு முந்தைய பாணியைக் கால வரையறை இல்லாத கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டால் அரியக்குடி பாணியை விதிமுறைகளுக்குட்பட்ட ஐந்து நாள் டெஸ்ட் என்று சொல்லலாம். அதற்கும் நேரமில்லாதவர்களுக்காக இன்னும் சுருக்கமாக ஒரு நாள், அரை நாள் போட்டிகள்போலச் சிறு, குறு கச்சேரிகளும் நடத்தப்படுகின்றன. அவற்றைக் கேட்பவர்களும் சங்கீத அனுபவத்தைப் பெறத்தான் செய்கிறார்கள். இதற்கெல்லாம் வித்திட்டு கர்னாடக சங்கீதத்தின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றியதில் அரியக்குடி பாணிக்கு முக்கியப் பங்கு உண்டு.

(இந்த ஆண்டு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 125-வது பிறந்த ஆண்டு).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 mins ago

கல்வி

2 mins ago

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

12 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்