ஃபேஸ்புக் கிளாஸ்: இது வேற மாதிரி!

By மிது கார்த்தி

எஎண்பதுகளில் வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு கூலிங் கிளாஸை நாயகி மாட்டிக்கொண்டு, ‘இது எக்ஸ்ரே கண்ணாடி’ என்று நாயகனிடம் ரீல் விடுவார். உண்மையில் அது போன்ற கண்ணாடி வருமா என்பது தெரியவில்லை. ஆனால், ஒளிப்படம், வீடியோ எடுக்கும் கண்ணாடி வந்துவிட்டது. ஸ்மார்ட் கண்ணாடிகள் அறிமுகமாவது வழக்கம். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘ரே-பான் ஸ்டோரீஸ்’ என்கிற ஸ்மார்ட் கண்ணாடி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ஃபேஸ்புக்கின் இந்த ஸ்மார்ட் கண்ணாடிக்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு இருந்தது. இந்தக் கண்ணாடி அறிமுகமாகிவிட்ட நிலையில், அதன் சிறப்புகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைக்கின்றன. இந்த ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்திருப்பவர், அடிக்கடி ஸ்மார்ட் போனைக் கையில் எடுக்க வேண்டிய வேலையே இருக்காது. இந்தக் கண்ணாடியைக் கொண்டு ஒளிப்படங்களை எடுக்கலாம், வீடியோக்களைப் பதிவுசெய்யலாம். இசையைக் கேட்டு மகிழலாம். இவ்வளவு ஏன், வரும் அழைப்புகளுக்குப் பதில்கூடச் சொல்லலாம். ஒரு ஸ்மார்ட் போன் செய்யும் எல்லா வேலைகளையும் இந்தக் கண்ணாடியும் செய்கிறது.

கைகளுக்கு வேலை இல்லை

ரே-பானின் தாய் நிறுவனமான எஸ்ஸிலோர் லக்ஸோடிகா என்கிற கண்ணாடி நிறுவனத்துடன் இணைந்து ஃபேஸ்புக் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறது. கண்ணாடியின் ஃபிரேமில் இரண்டு விதமான ஒருங்கிணைந்த 5 எம்.பி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஒளிப்படங்கள், வீடியோக்களை எடுக்க உதவுகின்றன. கேமராவை இயக்க, கண்ணாடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். அதன் மூலம் ஃபேஸ்புக் குரல் கட்டளை வழியாக கேமரா இயங்கத் தொடங்கிவிடும்.

‘ஹே ஃபேஸ்புக்’ என்று கூறி கட்டளையிட்டாலே ஒளிப்படங்களையும் வீடியோக்களையும் தானாகக் கண்ணாடி சுட்டுத் தள்ளிவிடும். கேமராவுக்கு அருகே வெள்ளை எல்இடி ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கேமராவை இயக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்கும். இவை தவிர, ஓபன்-இயர் ஸ்பீக்கர்கள், வரும் அழைப்புகள் மற்றும் வீடியோக்களுக்கு குரல் வழியாகத் தகவல் பரிமாற்றம் அளிக்க மைக்ரோஃபோன்களும் உள்ளன.

இந்த அம்சம் போதுமா?

அழைப்புகள் வரும்போது அருகே எழும் இரைச்சல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அல்காரிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த ஸ்மார்ட் கண்ணாடி ஃபேஸ்புக் வியூ செயலியுடன் எப்போதும் இணைந்தே இருக்கும். இது ஒளிப்படத்தை எடிட் செய்துகொள்ளவும் உதவுகிறது. ஒளிப்படங்களைச் சேமிப்பின் மூலம் பகிரவும் செய்யலாம். மேலும், ஸ்டோரீஸ்களை ஸ்மார்ட் போனில் உள்ள மற்ற செயலிகளுக்கும் பதிவிறக்கம் செய்யலாம்.

இத்தனை அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் விலை எவ்வளவு? 299 டாலர்கள். நம்மூர் மதிப்பில் சுமார் ரூ. 22 ஆயிரம். கண்ணாடி பல வண்ணங்கள், மாடல்களில் வருவதால் விலையில் ஏற்ற இறக்கமும் உண்டு. தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. விரைவில் இந்தியாவிலும் கடையை விரிக்கலாம். அதுவரை, கண்ணாடிக் கதைகள் தொடரும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

16 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்