கிளப் ஹவுஸ்: அரட்டையும் அச்சுறுத்தலும்

By ச.கோபாலகிருஷ்ணன்

ட்விட்டரின் ‘ஸ்பேசஸ்’ உரையாடல் வசதி டிரெண்ட் ஆகிவருகிறது. அதற்கு முன்பு உருவான ‘கிளப் ஹவுஸ்’ என்கிற அரட்டைச் செயலி தமிழகச் சமூக ஊடகவாசிகளை திடீரென திக்குமுக்காட வைத்திருக்கிறது. அதென்ன ‘கிளப் ஹவுஸ்?’. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உரையாடிக்கொள்வதற்கான வசதியை அளிக்கும் சமூக வலைத்தளச் செயலிதான் இது.

தற்போது இந்தியா உள்படப் பல நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இந்தச் செயலி பெற்றுவருகிறது. இருப்பிடத்தை வைத்துப் பொதுவான விருப்பங்கள் கொண்டவர்களை இணைக்கும் ‘ஹைலைட்’ என்னும் செயலியை வடிவமைத்த பால் டேவிசன், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளரும் இந்திய அமெரிக்கருமான ரோஹன் சேத் இருவரும் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். லைக்குகள், ஃபாலோயர்கள், கமெண்ட்களுக்குப் பதிலாகக் குரல்வழி உரையாடலின் மூலமாகப் பயனாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை உருவாக்குவதே ‘கிளப் ஹவுஸி’ன் நோக்கம்.

ஆயிரக்கணக்கில் அரட்டை

மொபைலில் ‘கிளப் ஹவுஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்பவர் ஏற்கெனவே அந்தச் செயலியைப் பயன்படுத்துபவரிடமிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே தனது ‘கிளப் ஹவுஸ்’ கணக்குக்குள் நுழைய முடியும். அதில் நுழைந்தவுடன் அரட்டை அறைகளில் பங்கேற்கலாம். அரட்டை அறைகளை உருவாக்கவும் முடியும். பயனர் தனது ஒளிப்படத்தைப் முகப்புப் படமாக வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தவிர முழுக்க முழுக்க குரல்வழி உரையாடலுக்கு மட்டுமேயான செயலிதான் இந்த ‘கிளப் ஹவுஸ்’.

இதில் அரட்டை அறைகளைத் தொடங்குபவருக்கு நெறியாளர் (Moderator) என்று பெயர். அந்த அறைக்குள் யாரெல்லாம் நுழையலாம் என்பதை அவர் தீர்மானிக்கலாம்; கட்டுப்படுத்தலாம். பேச்சாளர்களையும் அவரே முடிவுசெய்யலாம். கேட்டுக்கொண்டிருப்பவர் பேச விரும்பினால் கையை உயர்த்திக்காட்டும் குறியீடு மூலம் தன் விருப்பத்தை நெறியாளருக்குத் தெரிவிக்கலாம். ஓர் அறையில் 5,000 பேர் வரை பங்கேற்கலாம் என்கிற விதி இருந்தது. ஆனால், அது தளர்த்தப்பட்டிருப்பதைப் போல, சில அரட்டை அறைகளில் பல்லாயிரம் பேர் பங்கேற்பதைக் காண முடிகிறது.

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அரட்டை அறை நீடிக்கலாம். ஆனால், அரட்டை முடிந்த பிறகு அதில் பேசப்பட்ட எதையும் நெறியாளரோ பங்கேற்பாளர்களோ மீண்டும் கேட்க முடியாது. அதாவது, நிகழ் நேரத்தில் மட்டுமே இந்த உரையாடலைக் கேட்க முடியும். அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை தேவைப்பட்டால் மட்டுமே ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனம், குரல் பதிவுகளை விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளும்.

ஓராண்டில் அபாரம்

2020 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்த ‘கிளப் ஹவுஸ்’ ஓராண்டுக்குள் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்றுவிட்டது. சில வாரங்களாகத் தமிழ் சமூக ஊடகவெளியில் ‘கிளப் ஹவுஸ்’ குறித்த பதிவுகளும் விவாதங்களுமே ஆக்கிரமித்துள்ளன. ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பலர் ‘கிளப் ஹவுஸ்’ அரட்டைகளில் பெருங்குழுக்களாக ஈடுபட்டுப் பல்வேறு தலைப்புகளில் உரையாடல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். முதலீட்டு ஆலோசனை, அரசியல் கருத்துகள், தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள், பிரபலங்களின் பங்கேற்புடன் நடந்துவருகின்றன. ‘எதிர் பாலினத்தவரைக் கவர்வது எப்படி?’, ‘திருமணமா, லிவிங் டுகெதரா?’ என்பது போன்ற கேளிக்கை அரட்டைகளுக்கும் பஞ்சமில்லை.

அணிவகுக்கும் ஆபத்துகள்

இந்தச் செயலியால் ஆபத்துகளும் அதிகம் என்கிற தகவல்களும் மற்றொரு பக்கம் வரத் தொடங்கியுள்ளன. மிக வேகமாக உடனுக்குடன் நடைபெறும் குரல்வழி உரையாடல்களை நாகரிக வரையறைகளை மீறாமல் கட்டுப்படுத்துவது பெரிதும் கடினம். இதனால், ‘கிளப் ஹவுஸ்’ பயனர்கள் அச்சுறுத்தப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறலாம். உரையாடல்களைப் பதிவுசெய்வதற்கான வசதி ‘கிளப் ஹவுஸ்’ செயலியில் இல்லை என்றாலும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் இருக்கும் ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் எந்த ஒரு உரையாடலையும் பதிவு செய்ய முடியும். இதனால் தாம் பேசுவது பதிவுசெய்யப்படுகிறது என்பது தெரியாமல் பேசும் ஒவ்வொருவருக்கும் எதிர்பாராத ஆபத்துகள் விளையக்கூடும்.

அதேவேளையில் எந்தக் குரல் பதிவுகளும் கிடைக்கப்பெறாத பயனர்கள், தம் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல்ரீதியான கேலிகள், வசைவுகள் மீது புகாரளிப்பது கடினம். அதேபோல் ‘கிளப் ஹவுஸி’ன் அமைப்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன. ஒருவர் எந்தெந்த உரையாடலில் பங்கேற்கிறார் என்பதை அவருடைய நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் பார்க்க முடியும். பயனரின் அந்தரங்கம் இதனால் பாதிக்கப்படலாம். மேலும், இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர் தன் கைபேசியில் உள்ள அனைவருடைய தொடர்பு எண்களையும் பயன்படுத்திக்கொள்ள ‘கிளப் ஹவுஸு’க்கு அனுமதியளிக்க வேண்டும். இல்லையெனில் யாருக்கும் அழைப்பு அனுப்ப முடியாது. ‘கிளப் ஹவுஸ்’ என்றால் என்னவென்றே தெரியாத பலரின் தொடர்பு எண்கள் ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனத்திடம் இருக்கும்.

சமூக வலைத்தளங்களும் செயலிகளும் ஒருவித முகமற்றதன்மையை அளிக்கின்றன. எனவே, யாரும் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வசைபாட முடிகிறது. இதனால், பாலியல் அத்துமீறல், அது சார்ந்த மிரட்டல், துன்புறுத்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, இவற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்குமான ஏற்பாடுகளையும் உரிய சட்டங்களையும் இந்தியா போன்ற நாடுகளால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இச்சூழலில் இதுபோன்ற உரையாடல்களுக்கு வழிவகுத்திருக்கும் ‘கிளப் ஹவுஸி’ன் தீய விளைவுகளைக் கட்டுக்குள் வைப்பது அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்துபவர்களின் கையில்தான் உள்ளது.

‘கிளப் ஹவுஸி’ன் அபார வளர்ச்சியைக் கண்டு மற்ற சமூக ஊடக நிறுவனங்களும் அதேபோன்ற வாசதியைத் தம் பயனர்களுக்கு வழங்க முன்வந்துள்ளன. ட்விட்டர் தொடங்கியிருக்கும் ‘ஸ்பேசஸ்’, ‘கிளப் ஹவுஸு’க்குப் போட்டியாக உருவாக்கப்பட்டதுதான். ஃபேஸ்புக்கும் இப்படி ஒரு வசதியை வழங்கும் முயற்சியில் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்